நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்தது - 466 பேரை காப்பாற்ற தீவிர முயற்சி

Share it:
ad
கிரீஸ் நாட்டு துறைமுகமான பட்ராசிலிருந்து 466 பேருடன் புறப்பட்ட "நார்மன் அட்லாண்டிக்" பயணிகள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பட்ராஸ் துறைமுகத்திலிருந்து காலை 5:30 மணியளவில் 411 பயணிகள் மற்றும் 55 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இத்தாலி நாட்டில் உள்ள அன்கோனா துறைமுகத்துக்கு "நார்மன் அட்லாண்டிக்" கப்பல் சென்றுகொண்டிருந்த போது அதன் பார்க்கிங் பகுதி முதலில் தீப்பிடித்தாக கூறப்படுகிறது. இவ்விபத்து ஏற்பட்ட போது கப்பலானது கிரீஸ் தீவுப்பகுதியான ஓத்தோனோய் அருகே சென்றுகொண்டிருந்தது. உடனடியாக இது குறித்து எச்சரிக்கை விடுத்த கப்பலின் கேப்டன் பயணிகள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு கப்பல்கள், மற்றும் இத்தாலி மற்றும் கிரேக்க நாட்டு விமானங்கள் விரைந்துள்ளன. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 200 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அக்கப்பலில் பயணம் செய்த மேகா என்ற பயணி பதட்டத்துடன் கூறுகையில், கப்பலில் வரவேற்பறையில் நாங்கள் இருக்கும் நிலையில் எங்கள் காலில் உள்ள ஷூ தகிக்கிறது, எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். 

கப்பல் உள்ள பகுதியிலும் வானிலை மோசமாக உள்ளதால் மீட்பு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது வரை கப்பலில் இருந்து 55 பயணிகள் வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளபதாகவும், மேலும் 150 பேர் உயிர்காக்கும் படகில் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஞ்சியுள்ள பயணிகளின் நிலை என்னவானது என்று இதுவரை எதுவும் தெரியவில்லை.
Share it:

Post A Comment:

0 comments: