ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றைய தினம் விலகியதையடுத்து ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 141 ஆக குறைவடைந்துள்ளது.
இதுவரை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர். இந்த 23 பேரில் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை ஆளும் கூட்டணியில் பாராளுமன்றத்தில் 162 எம்.பி.க்கள் இருந்தனர். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று வரை சுதந்திரக் கட்சியிருந்து 6 எம்.பி.க்கள் வெளியேறியுள்ளனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜித சேனாரத்ன, துமிந்த திசாநாயக்க, எம்.டி.கே.எஸ். குணவர்தன, வசந்த சேனாநாயக்க மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோரே சுதந்திரக் கட்சியிலிருந்து வெ ளியேறியோராவர்.
மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எம்.பி.யும் வெளியேறினார்.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரையும் மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் எம்.பி. ஆகியோரும் அரசாங்கத்தை விட்டு விலகினர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்.
அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பி.க்களான சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்ன தேரர் ஆகிய இருவரும் அரசாங்கத்திலிருந்து விலகினர்.
இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹஸன் அலி, பைசல் காசிம், ஹரீஸ், முத்தலிப் பாவா பாரூக், அஸ்லம், தௌபீக் ஆகிய 8 எம்.பி.க்களும் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
இதன்படி மொத்தமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து இதுவரை 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
இதனால் 162 ஆக இருந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 139 ஆக குறைவடைந்த போதும் ஐ.தே.க.விலிருந்து திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜனநாயகக் கட்சியிலிருந்து ஜயந்த கெட்டகொடவும் ஆளும் தரப்பிற்கு தாவியதால் ஆளும் கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments: