பந்து தாக்கி, நடுவர் மரணம்

Share it:
ad
ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்து 4 நாட்கள் ஆகிறது.

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நடுவர் ஒருவர் பந்து தாக்கி மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி விவரம் வருமாறு:–

இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 60 வயதான ஹில்லல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார்.

பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

மரணம் அடைந்த ஹில்லல் ஆஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார்.

ஆஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் குட்கேர் கூறும்போது, இந்த செய்தி எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் இஸ்ரேல் அணி வீரராக, கேப்டனாக பணிபுரிந்தவர் தற்போது சர்வதேச நடுவராக இருந்தார்.

மிகசிறந்த மனிதரான அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரது மரணத்துக்கு அனைத்து வீரர்களும், இஸ்ரேல் கிரிக்கெட் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது என்றார்.

அவரது இறுதிச்சடங்கு 3–ந்தேதி நடக்கிறது. பந்து தாக்கி நடுவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share it:

Post A Comment:

0 comments: