(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத்சாலி, சற்றுநேரத்திற்கு முன்னர் இன்று 30-11-2014 www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி
இங்கிலாந்து சென்று அங்குவாழும் இலங்கை முஸ்லிம்களை சந்தித்து இருந்தீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது..?
ஆசாத்சாலி இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களையும் எனது பயணத்தின்போது சந்திக்க முடிந்தது. அவகளின் வரவேற்பும், உபசரிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இங்கிலாந்துடன் மாத்திரம் உங்கள் பயணம் மட்டுப்படுத்தப்பட்டதன் நோக்கம் யாது..?
ஆசாத்சாலி நேரம் போதாமையே இதற்கு காரணம்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிலையே..?
ஆசாத்சாலி விரைவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வேன். இலங்கை முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கும் செல்வேன். குறிப்பாக இங்கிலாந்து வாழ் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவை தொடர்ந்து, அங்கு 'நுஆ' வின் செயற்பாடுகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளேன். இங்கிலாந்தில் எமது கட்சி அலுவலகம் ஒன்று திறக்கப்படும். பின்னர் இலங்கையர்கள் வாழும் ஏனைய நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
இங்கிலாந்து வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தல் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்?
ஆசாத்சாலி இங்கிலாந்தில் வாழும் மிக அநேகமான இலங்கையர்கள் மஹிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்பிவைக்கவும், மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கவும்உறுதிபூண்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏன் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை..?
ஆசாத்சாலி இன்று (30-11-2014) நான் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளேன். அவரும், அவரது கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவு வழங்க வேண்டுமென வலியுறுத்துவேன். ஹுனைஸ் பாருக் தனியே பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்க கூடாது. அவர் றிசாத் பதியுதீனையும் அழைத்து வந்திருப்பின் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யுமென நம்புகிறீர்கள்?
ஆசாத்சாலி முஸ்லிம் காங்கிரஸ் மதில் மேல் பூணையாக உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டார்கள். இங்கு முஸ்லிம் கட்சிகள் செல்லாக்காசுகளாக போகப்போகின்றன என்பதே உண்மையாகும்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி ரவூப்ஹக்கீம், ஹசன் அலி, ஹரீஸ் போன்றோர் முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளார்களே..?
ஆசாத்சாலி இதுகுறித்து எனக்கு தெரியாது. பொதுபல சேனா குந்தியுள்ள கூடாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எப்படி போய் அமரமுடியும்? இந்த அரசாங்கமும், கடும்போக்கு சிங்கள அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எப்படி இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.
தற்போதைய உங்களது கணிப்பின்படி வெற்றிபெறப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?
ஆசாத்சாலி இதற்கான பதிலை ராவய பத்திரிகை பிரசுரித்துள்ளது. மைத்திரிபால 59 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதே உண்மையானது.
மைத்திரிபால அமைச்சராகவும், சுதந்திரக் கட்சி செயலாளராகவும் இருந்தவேளை முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை, பொதுபல சேனாவை கண்டிக்கவில்லை என முஸ்லிம்களின் ஒரு சாரார் குற்றம்சுமத்துகின்றனரே..?
ஆசாத்சாலி மைத்திரிபால சிறிசேனா ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவர் சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருக்கும்வரை பொதுபல சேனாவை இந்த அரசாங்கத்தில் இணைக்கவோ அல்லது சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கவோ அனுமதிக்கவில்லை. அவர் எப்போது வெளியேறினாரோ அதன்பின் பொதுபல சேனா அரசாங்கத்துடனும், சுதந்திரக் கட்சியுடனும் ஒட்டிக்கொண்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் கட்சி தாவுதல்கள் தொடருமா?
ஆசாத்சாலி அரசாங்கத்திலிருந்து 40 பேர் எதிரணிக்கு வருவதாக இருந்தது. சிலர் வந்துவிட்டார்கள். இன்னும் பலர் வரவிருக்கிறார்கள். இதனை தடுப்பதற்காக கட்சி மாறலாம் என நம்பப்படுபவர்களது வீடுகளுக்கு முன் மஹிந்த ராஜபக்ஸ 6 பொலிஸார் வீதம் இடைநிறுத்தியுள்ளார். அங்கு வீடியோக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய தொலைபேசிகள் ஒரே சமயத்தில் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதனால்தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தாமதமடைந்துள்ளது. எனினும் உரிய நேரத்தில் அவர்கள் வருவார்கள்.



Post A Comment:
0 comments: