ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது.
18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை வைத்தும், ஆளுமைப் பண்புகளை நிறுவுவதற்கான உளவியல் கேள்விகளுக்கு பதில் எழுதச்செய்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆய்வு குறித்து பேராசிரியர் ஃபாக்ஸ் கூறுகையில்
”செல்பி எடுப்பவர்கள் சுய மோகம் கொண்டவர்கள் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவர்கள் சராசரியை விட அதிகமான சமூக விரோத பண்புகளை கொண்டிருப்பதும், தன்னையே காட்சி பொருள் போன்று பார்ப்பதும் தான்” என்றார். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் அதிக பிரச்சனைகளை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மூன்றில் இரண்டு பேருக்கு ”பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்” எனப்படும் மன நோய் இருப்பதும், அவர்கள் அதிக அளவு செல்பி எடுக்கும் இயல்புடையவர்கள் என்பதையும் மனநல மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
தன்னுடைய தோற்றம் குறித்த கற்பனையும், பயமும் செல்பி எடுப்பவர்களிடம் அதிகமாக காணப்படுவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர், செல்பியில் தன் தோற்றம் திருப்திகரமாக இல்லாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அந்த மருத்துவர் கூறியுள்ளது இந்தப் பிரச்சனையின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது.



Post A Comment:
0 comments: