கிழக்கு மாகாண ஆட்சி மாற்றம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சாதகமான பதிலை அளிக்காவிடின் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதியையும் பிரதமரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் கிழக்கில் ஆட்சி மாற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இரு சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இவ்வாறான நிலையில் தமது முடிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பதில் சாதகமாக அமையுமாயின் எந்த சிக்கலுமில்லை. இல்லையெனில் தமிழ் கூட்டமைப்பு மாற்று நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து சிந்திக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களையும் கூட்டமைப்பு தலைமை கொழும்புக்கு அழைத்து நேற்று சனிக்கிழமை பேச்சுகள் நடத்தியது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மக்களின், மன நிலையை தெளிவாக எடுத்துரைத்ததுடன் கருத்துகளையும் மாகாணசபை உறுப்பினர்கள் பரிமாறினர். இக்கலந்துரையாடல் நீண்ட நேரம் நடைபெற்றதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சாதகமான பதிலை அளிக்காவிடின் நாளை திங்கட்கிழமை புதிய ஜனாதிபதியுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கூட்டமைப்பு சந்திப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதென கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: