மைத்திரியால் முடியுமா...?

Share it:
ad
(இஸ்மாயில் பீ. மாரிப்)

வற்றாத ஆறுகள்  ஓடுவது போன்று இலங்கையின் வரலாறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக அத்தகைய வரலாறுகளை மாற்றிக் கொள்வதற்கு இலங்கைக்கும் விருப்பமில்லை .

பெரும்பான்மையான இலங்கை மக்களுக்கும் விருப்பமில்லை. இதன் காரணமாக தேவைப்படாத போதும் மாற்றத்தைக்  காண முடிவதில்லை. தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் மாற்றத்தைக் காண முடிவதில்லை. ஆட்கள் இருந்தும்  பலனற்றுப் போகிறது. ஆட்களைத் திருடியும் பலன் கிட்டாமல் போய்விடுகிறது. இந்தப் பின்னணியில் இலங்கையில் அரசியல் முறைமையை மாற்றியமைத்தே தீருவது என்ற போர்வையில் அணிதிரண்டுள்ளனர் ஜனாதிபதியின் அரசியல் எதிரிகள். இதற்காக உத்தியோக பூர்வ பயணத்தைக் குறிக்கின்ற ஆவணக் கையளிப்பான வேட்பு மனுக்கள் இன்று தாக்கலாகின்றன.

தாக்கலாகும்  வேட்பு மனுக்கள் மனிதத் தாக்குதலுக்கு இடமளிக்காமல் மனித நேயத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் பரிபூரண பங்களிப்பு நல்கட்டும். இத்தகையதோர் பின்புலத்திலேயே  இலங்கையின் அதிகாரக் கைமாற்றம், கைமாறுகை தொடர்பான வரலாறுகளை புரட்டிப்பார்க்க முனைகிறது  இக் கட்டுரை. 

எல்லோருக்கும் பொதுவான  தேவைப்பாடு 

 பன்மைத் தன்மையுடைய சமூகம் பரந்து, விரிந்து வாழுகின்ற இலங்கை தம்மகத்தே  கொண்டுள்ள அரசியல் யாப்பு அத்தகைய தன்மைக்கு வைத்துக் கொண்டிருப்பது ஆப்பு  என்ற கருத்து பரவலாகவும் பக்குவமாகவும் அன்றும், இன்றும் பேசப்பட்டு வருகின்ற  விடயமாகும். முழுக்க முழுக்க பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக ஸ்திரம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற  அரசியல் அமைப்புச் சட்டம் அத்தகைய பெரும்பான்மை மக்களையும் கூட  குறை காண வைத்துள்ளது எனில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் எல்லோருக்கும் பொதுவான தேவைப்பாடாகியுள்ளமை தெட்டத் தெளிவாகிறது. நேரிடல் சம நிலையை தகர்த்துக் கொண்டிருப்பதாக  17 ஆவது திருத்தம் என்ற வினைத்திறனை விழுங்கி  விடயத்தை கக்கியதாக உணரப்படுகின்ற  18 ஆவது திருத்தத்தையும்  உள்ளடக்கிய  1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு  விபரிக்கப்படுகிறது.  அதேவேளை  1972 ஆம் ஆண்டின் யாப்பு அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்துக் கொண்டிருந்ததாக 78 ஐ அறிமுகப்படுத்திய ஜே.ஆர். கூறிக் கொண்டிருந்தார்.

1975 முதல் 1977 களில் அன்றிருந்த அரசு மக்களின் சம்மதமின்றி ஆட்சிக் காலத்தை மூன்றில்  இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு நீடித்ததாகக் கூறிய ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு யாப்புக்குள் சர்வஜன வாக்கெடுப்பு ஏற்பாட்டினை உள்ளீர்ப்பு செய்து அதனை அனுபவித்த புதினத்தையும் வெளியுலகுக்கு காண்பிக்க தவறவில்லை.  எவ்வாறாயினும்  72 ஆம் ஆண்டின் யாப்புக்கு முன்னரான காலப் பகுதியை யோசித்தே ஜே.ஆர். 78 ஆம் ஆண்டு யாப்புக்கு முனைந்திருக்க வேண்டும்.  70 முதல்  77 வரை நிலையான அரசாங்க கால இருப்பின் போதே  72 ஆம் ஆண்டு குடியரசு யாப்பு உதயமாகியுள்ளதை மறுப்பதற்கில்லை. 

யாப்பறிமுகத்துக்கான பின்புலம் 

 எவ்வாறாயினும் ஜே.ஆரும் அமைச்சராக பதவி வகித்த அரசுகளின் காலப் பகுதியான 1947 முதல்  1970 வரையான காலப் பகுதியில் காணப்பட்டிருந்த ஸ்திரமற்ற நிலைமைகளை அடியொற்றியே அவர் ஜனாதிபதி முறைக்கு தீர்மானம் மேற்கொண்டிருக்கக் கூடும். அக் காலப் பகுதிகளிலேயே பிரதமர் மாற்றம், அரசாங்கங்கள் மாற்றம் போன்றன் நடந்தேறியுள்ளன. 1953 முதல் 1956 வரை சேர். ஜோன் கொத்தலாவல ( பிரதமர்) தலைமையிலான  அரசாங்கம் 1956 முதல் 1959 வரை கு.ஙி.கீ.ஈ.  பண்டாரநாயக்க தலைமையிலான அரசு. செப்டெம்பர் 1959 முதல் மார்ச்  1960 வரை தஹநாயக்க தலைமையிலான அரசு. மீண்டும் மார்ச் முதல் ஜூலை 1960 வரை  டட்லியின் அரசாங்கம், 1960 முதல் 1965 வரை திருமதி பண்டாரநாயக்கவின் அதிகாரம் மீண்டும் டட்லி சேனாநாயக்க 1965 முதல்  1970 வரையில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.  1960 இல் டட்லியின் அமைச்சரவையில் நிதி உள்ளூராட்சி , வீடமைப்பு போன்ற அமைச்சுப் பொறுப்புகளோடு ஜே.ஆர். பணியாற்றினார். 59 முதல்  60 வரை 6 மாத கால ஆட்சி மார்ச்  60 முதல் ஜூலை 60 வரையான  4 மாத கால ஆட்சி என்ற பத்து மாதங்களுக்குள் மூன்று அரசாங்கங்களா ? என்ற ஆதங்கங்கள்  ஜே.ஆருக்கு ஏற்பட்டிருந்திருக்கக் கூடும். ஆற அமர இருந்து அகலக் கால் நீட்டி அபிவிருத்தி செய்வதற்கு  ஐந்து வருட ஆயுட் காலத்துக்கு உரித்தான பாராளுமன்றத்துக்கு ஆறு வருட உயர்வூட்டலையும்  12 ஆண்டுகளுக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய ஆறு ஆண்டுகளைக் கொண்ட இரு தவணைகளையுடைய ஜனாதிபதி முறையையும் அறிமுகப்படுத்தினார் எனலாம். 

 ஸ்திரமான அரசுகள் 

 உண்மையில் அதிகாரக் கைமாற்றங்கள்  12 தடவைகள் 30 ஆண்டு காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன.  1947 முதல்  1977 வரையில் மூன்று தசாப்த காலப் பகுதியில் ஸ்திரமான அரசுகள் இருந்திருந்தால் ஒரு டசன்  சந்தர்ப்பங்களில் 6 பிரதம மந்திரிகள் மாறி மாறி ஆட்சி புரிந்திருக்கத் தேவையில்லை. நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்லவோ , வகுத்தமைத்துக் கொள்ளவோ  அரசுகளுக்கு ஸ்திரமான நிலைமைகள்   இருந்திருக்கவில்லை என்பதே  ஜே.ஆரின் தர்க்கமாக இருந்திருக்கக் கூடும். இக் குறித்த  30 வருட காலப் பகுதியில்  5 தடவைகளில் அமைச்சரவையில் ஜே.ஆர். இடம்பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  தொகுதி வாரிப் பாராளுமன்ற முறைமையின் ஸ்திரமின்மையில் அவருக்கு ஒரு பார்வை இருந்திருக்கிறது. பெரும்பான்மை சிங்கள மக்கள் பலவீனமடைந்து போவதில் கண்ணோட்டம் செலுத்தியிருந்தார். அடிக்கடி அதிகாரம் இராஜாங்கத் தலைமைகள் மாறுவதில் உடன்பாடற்றவராக இருந்தார். அதன் பிரதிபலனாக வந்துதித்ததே நிறைவேற்றதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய  1978 இன் அரசியல் யாப்பாகும். 

கட்சிகளின் ஆக்ரோஷம் 

 எது எவ்வாறாக இருப்பினும் அதிகார கைமாற்றுகைகளில்  1978 இன் யாப்பு கடந்த  35 ஆண்டுகளில் கடைப்பிடித்து வருகின்ற விடாப்பிடியான போக்கு, வளைந்து கொடுக்காத் தன்மை  போன்றவற்றை  அறிந்து கொள்ள முடிகிறது. அதிகாரச் சமநிலைக்கும் நேரிடல் சமநிலைக்கும் ஆப்பு வைத்து விட்ட யாப்பு அரசாங்கங்களுக்கு ஸ்திரத் தன்மையை  கொடுப்பதாகக் கூறப்படினும்  ஆட்களை நிரந்தரமாக அதிகாரத்தை நிலை கொள்ளச் செய்து விடுகிறது. வீழ்ந்தவனால் மீள எழுந்து நிற்க முடியாமலாக்கியுள்ள 78 இன் யாப்பு பாரபட்சமான பின்புலத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில்  1978 ஆம் ஆண்டுக்குப்பிறகான அதிகார கைமாறுகைகள் எந்த விதத்திலும் எதிரணிகளுக்கு எழுச்சியையோ, மகிழ்ச்சியையோ கொடுத்திராத செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது. அப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை தோன்றிடச் செய்யவும் வரலாற்றை மாற்றியமைக்கவுமே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன. தோற்றுப் போகின்ற வரலாறுகளைக் கொண்ட அங்கங்களில் ஒன்றே இன்று ஆரம்பமாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் வெற்றியாக்கிக் காட்டுவோம்  அந்த வரலாற்றை என்பதே மைத்திரி தலைமையிலான கட்சிகளின் ஆக்ரோஷமாகும்.

 ஜே.ஆர். ஜெயவர்தன 

 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பின் கீழ் முதலாவது ஜனாதிபதியாக நிலைமாறுகால அடிப்படையில் ஜே.ஆர். ஜனாதிபதியானார் என்றாலும்  முதலாவது ஜனாதிபதித் தேர்தல்  1982 இல் இடம்பெற்றது பதவியில் இருந்த ஜனாதிபதி வெற்றி பெற்றார். 

 அன்றைய அரசியல் வாதிகளும் புத்திஜீவிகளும்  1983 காலப் பகுதியில் நடத்தப்படுவதற்கு முன்மெழியப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பை எதிர்த்தனர். ஜனநாயக விரோதம் என்றனர். ஆனால் அது ஜனநாயகமானது எனக் கூறி பொதுத் தேர்தலுக்கு ஆப்பு வைக்கப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடந்தேறியது. தம்மகத்தேயிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மை காலாவதியாகிவிடும் என்ற அச்சத்தில் அராஜகம்  என்று வர்ணிக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள்  தீர்ப்புக் கிடைத்தது. பதவியிலிருந்த அரசாங்கம் வென்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தும் மற்றுமொரு மக்கள் தீர்ப்புப் போர்வையில் சர்வஜன வாக்கெடுப்பு எட்டிப் பார்ப்பதாகவும் ஊகிக்கப்படுகிறது. 

 ரணசிங்க பிரேமதாஸ 

 1988 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அது அகோரமாக இருந்த இருமுனைப் பயங்கரவாதக் காலப் பகுதியாகும். பச்சைப் புலிகளும் 
சிவப்புப் புலிகளும் தென்னகத்தே விளையாட்டுகளை காண்பித்துக் கொண்டிருக்க, வடக்கே தமிழ்ப்  புலிகள் அட்டகாசமான முறையில் தளைத்தோங்கிய காலம் என்றாலும் ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு ஒரு சிறிய விகிதாசாரத்தில் என்றாலும் பதவியிலிருந்த பிரதமர் பிரேமதாஸவையே ஜனாதிபதியாக்கியது. ஏழைகளின் இடுக்கண் களையப் புறப்பட்ட பிரேமதாஸ சிறு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில் அதற்கு  அவர் வகித்துக் கொண்டிருந்த பிரதமர் பதவியே காரணமெனலாம்.  அது மாத்திரமன்றி அன்று அசுவாரசியமாக இருந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ வெற்றி பெற்றமையே  1989 பெப்ரவரியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வை மீண்டும் பதவிக்கமர்த்தியது. கடுமையான செல்வாக்கு சரிவை சந்தித்திருந்த ஐ.தே.க.வை மூன்றாவது முறையாகவும் ஆட்சிக்கமர்த்தியது பிரேமதாஸ வகித்த ஜனாதிபதி பதவியே .

 சந்திரிகா பண்டாரநாயக்க 

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்  காமினி திஸாநாயக்கவின் கொலை காரணமாக ரசனையோ, கரிசனையோ அற்றதாக இருந்த போதிலும் கூட கணவனின் அனுதாப அலையோ சிறிமா திசாநாயக்கவை சென்றடையவில்லை,. எதிர்பார்த்த நிலைமைகள் தலைகீழாக மாறின. எது எப்படியோ அன்றைய ஜனாதிபதித் தேர்தலில்  65  வீதமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார் சந்திரிகா  பிரதமர் பதவியிலிருந்தவாறே ஜனாதிபதியாக தெரிவானார். அதேபோன்று  சரிநிகரான போட்டி  1999 இல் இடம்பெற்றது. ரணில் கடுமையான பிரயத்தனம் செய்திருந்த நிலை நாட்டில் தென்பட்டது. சந்திரிகாவின்  சகோதரர் அநுரா பண்டார நாயக்க கூட ரணிலுக்காக பாடுபட்டுழைத்தார். முற்றிலும்  ஓய்ந்திராத நிலையிலிருந்த  புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக கண் ஒன்றை இழந்ததன் நிமித்தம்  அனுதாப அலையில் அவர் வெல்லவில்லை. மாறாக பதவியில் இருந்த ஜனாதிபதி என்ற கோதாவில் தனது இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை சந்திரிகா பதிவு செய்தார்.  

 மகிந்த ராஜபக்ஷ  

2002/ 2003 காலப் பகுதியில்  99  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவராக இருந்தும் கூட பொதுத் தேர்தலில் ஐ.தே. முன்னணியிடம் ஆட்சியைப் பறி கொடுக்க நேரிட்டது. சூத்திரம் பிழைத்து  அவ்வாறு கைமாறவில்லை. சந்திரிகாவின் நடவடிக்கைகளில் வெறுப்படைந்த முக்கிய அமைச்சர்கள் அவரை விட்டும்  பிரிந்து சென்று எதிர்த்தரப்புடன் இணைந்தமையே காரணமாயமைந்தது. அல்லாவிடில் பொதுஜன ஐக்கிய முன்னணியே ஆட்சியைப் பிடித்திருக்கும்  என்றாலும் 2004  இல் பிரதமராக இருந்த ரணில் எதிர்கட்சித் தலைவரானார். அது  2005 இல் அவர் ஜனாதிபதியாவதை தடுத்து நிறுத்தியது. பிரதமராக பதவி வகித்த மகிந்தவை ஜனாதிபதியாக்கியது. புலிகளுடனான இரகசிய உடன்பாடு காரணமாக ஒரு சிறிய வித்தியாசத்தில் ரணில் தோற்கடிக்கப்பட நேரிட்டிருப்பினும் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்த மகிந்த ஜனாதிபதியானமை வரலாறு.  2010 இல் பொது வேட்பாளரான பொன்சேகா அலை வீசுவதாக நாடெங்கிலும் பேசப்பட்டது. ஆனால் வீசிய அலை அவரை சிறைச்சாலைக்கே அடித்துச் சென்றது. எவ்வாறாயினும் பதவியிலிருந்த ஜனாதிபதியே மீணடும் ஜனாதிபதியாக தெரிவானார். 

 பதவியில் இருந்த பிரதமர்களை அல்லது ஜனாதிபதிகளை  கிரமப்படி  வெற்றி பெறச் செய்த வரலாறு இலங்கைக்குண்டு. இந்த வரலாற்றை மைத்திரியின் வேட்பாளர் பிரவேசம் மாற்றியமைக்குமா ? ஜனாதிபதி எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளாரோ அவரைச்  சார்ந்ததாகவும் அவரது கட்சியை சார்ந்ததாகவும் உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும் பாராளுமன்றமும் சாய்ந்து போகின்ற சரித்திரத்தைத் தடுக்க  78 ஆம் ஆண்டின் யாப்பும் தயாராக இல்லை. வாக்காளர்களும்  தயாராக இல்லை.  

சம காலத்தில் மகிந்தவுக்கு  எதிரான அலை மைத்திரிக்கு ஆதரவான  அலையாக அடிக்கிறது எனக் கூறப்படுகிறது. உண்மையில் ஆதரவான அலை வீசுகிறது என்றால் அது வாக்களிப்பதற்கு மக்கள் அலை மோதுவது போன்றதாக ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. பேச்சுகளின் வீச்சால் தோன்றுகின்ற அலை முற்று முழுதாக வாக்களிப்பில் ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்க இடமுண்டு. அலையடிக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம் வாக்குகளுக்குள் ஊருடுவினாலும் வாக்களிப்பில் தாக்கம் செலுத்தாமலும் விடலாம். இந்தப் பின்னணிகளிலேயே மகிந்தவுக்கு பாடம் புகட்டவும் தோல்வியடையச் செய்யவும் வியூகங்கள் வகுக்கப்பட்டு இன்று முதல் ஒரு மாத ஆட்டத்துக்காக களம் தயாராகிறது. வரலாறு மாறுகிறதா ? வார்த்தைகள் தோற்றுப் போகின்றனவா ?  என்பதைக் காண்பதற்கு அரசியல் வாதிகளும் , ஆர்வலர்களும் காத்திருக்கின்றனர் என்போம். 
Share it:

Post A Comment:

0 comments: