ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ரவூப் ஹக்கீமின் சவால்...!

Share it:
ad
தங்களது 'ஜப்னா முஸ்லிம்' இணையத்தளத்தில் 'சீறிப் பாய்ந்த மஹிந்த...! அடிபணிந்தாரா ரவூப் ஹக்கீம்...?' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி திரிபுபடுத்தப்பட்டதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். 

தனக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் திங்கள்கிழமை (08-12-2014) காலையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடுமாறும் அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார். 

சம்பிரதாயத்திற்காக ஜனாதிபதியை வாழ்த்துவதற்கு தாம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அப்பொழுது ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்து தம்முடன் சுமுகமாக உரையாடியதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கின்றார். 

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதி தம்மீது சீறிப்பாய்ந்திருந்தால், அதே பாணியில் தாமும் சீறிப்பாய்ந்திருப்பார் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார். அவ்வாறான சில சம்பவங்கள் முன்னர் அமைச்சரவை கூட்டம் உட்பட இடம்பெற்றிருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகின்றார். 

அந்தச் செய்தியில் தொடர்ந்து கூறப்பட்டுள்ள தகவல்களைப் பார்க்கும் போது காழ்ப்புணர்ச்சியினால் உந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இந்த அபாண்டத்தை தங்கள் இணையத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வர் என்றும் அமைச்சர் தெரிவிப்பதோடு, ஊடக தர்மத்தை அனுசரித்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இவ்வாறான விடயங்களை கையாளுமாறும் இணையத்தளங்களை வேண்டிக்கொள்கிறார். 

இந்தச் செய்தியை முழுமையாகவும், நேர்மையாகவும் வெளியிடுமாறு தங்கள் இணையத்தளத்திற்கு அறிவிக்குமாறு அமைச்சர் ஹக்கீம் என்னிடம் கூறினார். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

மிகமுக்கிய குறிப்பு

நாம் வெளியிட்ட செய்தியில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டதாக மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். http://www.jaffnamuslim.com/2014/12/blog-post_904.html  எமக்கு தகவல் வழங்குபவரை பாதுகாப்பது ஊடகங்களின் தலையாய கடமையாகும். அது எவராக இருந்தாலும் பரவாயில்லை.

நாளை ரவூப் ஹக்கீமே வந்து, ஒரு தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வழங்கிவிட்டு, குறித்த செய்தியில் எனது பெயரை பாவிக்க வேண்டாமென குறிப்பிட்டால், எமது உயிரே போனாலும் ரவூப் ஹக்கீமை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம்.

இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் ரவூப் ஹக்கீம் எம்முடன் சில செய்திகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இதன்போது தன்னுடைய பெயரை பாவிக்க வேண்டாமென, ஹக்கீம் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டியதற்கிணங்க, ஹக்கீமுடைய பெயரை பயன்படுத்தாமலே நாம் செய்திகளை பதிவேற்றம் செய்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: