-முஸ்தபா கமால்-
இன்று நாட்டில் படித்தவர் முதல் பாமர மக்கள் வரை ஒரே பேச்சு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகத்தான் இருக்கின்றது. அதிலும் மஹிந்தயா மைத்திரியா என்ற வாதப் பிரதிவாதங்களைப் பார்க்கும் போது மக்கள் அரசியலில் தெளிவு பெற்று விட்டார்கள் என்று சந்தோசமாகவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதி முஸ்லீம் வாக்காளர்களதும் அப் பிரதேசத்தில் அதிகளவான வாக்கு வங்கியினை தன்வசம் வைத்துள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் அவரது கட்சியும் மைதிரிபால ஸ்ரீசேனவை ஆதரிப்பது தொடர்பாகவும் பல்வேரு கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றது.
தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று கட்டாயம் வேண்டும் என்ற என்னம் நாட்டில் உள்ள அதிகமானோர் மனதில் உள்ள கருத்தாகும்.; நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் அந் நாட்டின் ஆட்சியாளர்களே பொறுப்புக் கூறவேண்டும். மாறாக எங்களுக்குத் தெரியாது அப்படி இருக்காது என்று கதை சொல்லி மழுப்புவது நல்லதல்ல.
இதே போன்றுதான் 2010ம் ஆண்டு தொடக்கம் கல்குடாத் தொகுதி முஸ்லீம் மக்களை அரசியல் அனாதைகளாக மாற்றும் அளவுக்கு பாரியளவு துரோகத்தை இந்த ஆட்சியாளர்கள் செய்து வந்திருக்கின்றார்கள்.
2010ம் ஆண்டு அமீர் அலி பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற போது தேசியப் பட்டியல் தருவதாக கூறி ஏமாற்றி அதன் பின்னர் நடந்து முடிந்த கிழ்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களில் அதிகமான வாக்கினைப் பெறுங்கள் முதலமைச்சர் பதவி தருகிறோம் என்று கூறி அதிலும் ஏமாற்றி அதன் பின்னர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சர் பதவியும் மூன்று மாதங்களுக்குள் தருவதாக ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ பொது மக்கள் முன் வாக்குறிதியளித்து விட்டுச் சென்றார் அந்தக் கதை இன்று நிறைவேறும் நாளை நிறைவேறும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்ததுதான் மிச்சம்.
அதற்கு பிறகு இரண்டு வருடத்தில் கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் தருவதாக பல முறை சொல்லப்பட்டு கல்குடாத் தொகுதி முஸ்லீம் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் அமீர் அலியின் தேவை உணரப்பட்டது. ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற் தடவையாக ஜனாதிபதியாக வருவதற்குப் போட்டியிட்ட போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஓரே அரசியல்வாதி அமீர் அலி மாத்திரம்தான். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மூலம்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வெற்றி கொள்ள முடியும் என்று கூறும் எந்த அரசியல் தலைவரும் அப்போது களத்தில் நிற்கவில்லை.
இந்த தருணத்தில் தேசியப்பட்டியல் மூலமே காலமெல்லாம் பாராளுமன்ற சென்ற தற்போது ஜனாதிபதியின் புராணம் பாடிக் கொண்டிருக்கும் அஸ்வர் ஹாஜியாரைத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய வைத்து அமீர் அலிக்கு வழங்கப்பட்டது.
அமீர் அலி அதனைப் பெறுவதற்கு முதல் தனது கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீனையும் அழைத்து வந்து கல்குடாத் தொகுதி முஸ்லீம் மக்களை மீராவோடை அமீர் அலி கலாச்சார மண்டபத்தில் சந்தித்து தனக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்படவுள்ளது என்று றிஸாட் பதியுதீன் தெரியப்படுத்தினார். அப் போது பொது மக்கள் தமது பிரதேசத்திற்கான பாராளுமன்ற உறுப்பிர் பதவியினைத் தருவதாக பல வருடங்கள் ஏமாற்றி விட்டுத் தற்போது தருவதற்கு முன்வந்துள்ளார்கள், எனவே இதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனுடன் பிரதி அமைச்சர் பதவியும் பெற்றுக் கொள்ளுமாறும் கட்சியின் தலைவரான றிஸாட் பதியுதீனிடம் கோரிக்கையாக முன் வைத்தனர்.
இதன் பின்னர் அமீர் கடந்த 12.12.2014 அன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு அதன் பின்னர் அவரும் அவர் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் 22.12.2014ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள மைதிரிபால ஸ்ரீசேனவை ஆதரிப்பதென அறிவித்தனர்.
அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்த பின்னர் கல்குடாத் தொகுதியில் உள்ள அவரது எந்த அதரவாளனும் பட்டாசு கொழுத்தித் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. ஆனால் மைதிரிபால ஸ்ரீசேனவை ஆதரிப்பது என்று அறிவித்ததும் அமீர் அலியின் ஆதரவாளர்கள் அவரது எதிரிகள் என்று வித்தியாசம் பாராமல் அதிகமானோர் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் அதிகமான கிராமங்களில் பட்டாசு கொழுத்தித் தங்களது சந்தோசத்தினை தெரியப்படுத்தியதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அமீர் அலி மைதிரிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் பாராளுமன்ற பதவியை எடுக்காமல் மாறி இருக்கலாம் என்று நாம் யோசித்தாலும் 2010ம் ஆண்டு தொடக்கம் அமீர் அலி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்யும் வரை இன்று தருகிறோம் நாளை தருகிறோம் என்று தொடர்ந்து ஏமாற்றி வந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த பதவியை எடுத்துக் கொண்டு மாறியது கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம் மக்களில் தமது பிரதேசத்திற்கு கிடைக்கக் கூடியதை தற்போதுதான் தந்திருக்கின்றார்கள் அதை எடுத்தது சரி என்றே பேசிக் கொள்கின்றனர்.
அமீர் அலி எது செய்தாலும் பிழை என்று பார்ப்பவர்கள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கப் போகின்றது என்ற போது இந்த சந்தர்ப்த்தில் பதவியை யாராவது எடுப்பார்களா சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவன்தான் எடுப்பான் என்றார்கள் எடுத்ததன் பின்னர் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கூறுகின்றனர் இப்படிப்பட்டவர்கள் எதைச் செய்தாலும் கதைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு மாறியது கல்குடாத் தொகுதி முஸ்லீம் மக்களை விட கல்குடாத் தொகுதி முஸ்லீம்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்தவர்களும் சமூகத்தைப் பற்றி உணர்வில்லாதவர்களும் அமீர் அலி அமைச்சராக இருந்த போது அரச ஊடகம் ஒன்றில் வேலை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்து முடியாத சந்தர்ப்பத்தில் அமீர் அலி பெற்றுத்தரவில்லை, அவர் நினைத்தால் பெற்றுத் தந்திருக்க முடியும் என்று கூறியவர்களுக்கும்தான் இந்த விடயம் கடுப்பாக இருக்கின்றது. (இவ்வாறு கதைப்பவர்களும் எழுதுபவர்களும் கல்குடா முஸ்லீம் பிரதேசத்தில் எந்த ஒருவருக்காகவும் வாக்களிக்காதவர்கள் என்பதுதான்; ஆச்சரியம்.)
23.12.2014ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் அமீர் அலி சமூகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என்று பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். துரோகம் என்பதற்கு அர்த்தம் தெரிந்துதான் அவர் சொன்னாரா என்பது தெரியாது.
1989ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடத்தில் பிரதிநிதித்துவத்தை கல்குடாவுக்கு விட்டுத் தருவதாகச் சொல்லி அதில் துரோகம் செய்தவர் ஹிஸ்புல்லாஹ். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் துரோகி என்று நாமம் சூட்டப்பட்டவர் ஹிஸ்புல்லாஹ். அவர் செய்த ஒவ்வொரு துரோகத் தனத்திற்கும் சமூகத்தின் நலன் கருதி செய்தேன் என்று கூறுவார் மற்ற எவரும் சமூகத்தின் நலன் கருதி எதுவும் செய்தால் அதுக்கு துரோகம் என்று பட்டம் சூட்டி விடுவார். அவரைப் பொறுத்த வரை அவக உம்மா உம்மா எங்க உம்மா சும்மா.
இதில் வேடிக்கையான ஒரு விடயம் என்ன வென்றால் அமீர் அலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்க வேண்டும் என்று மிகவும் பாடுபட்டு அதனை நான் பெற்றுக் கொடுத்தேன் என்று பொய்யைக் கூறுகின்றார். அமீர் அலிக்கு எதுவும் கிடைக்கக் கூடாது, கல்குடா முஸ்லீம் பிரதேசத்தில் அமீர் அலியோ அல்லது வேறு எவருமோ தலைவர்களாக வந்து விடக் கூடாது என்று நன்றாகத் திட்டமிட்டுத் தனது சகாக்களை வைத்துக் காய் நகர்த்திக் கொண்டு இருக்கும் ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி இராஜினாமாச் செய்த கிழக்கு மாகாண சபைப் பதவி கல்குடாவுக்குக் கிடைக்கக் கூடாது என்று அவர் முயற்சித்து வருவது கல்குடா மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார் போலும்.
2000ம் ஆண்டு தேர்தலில் தோற்று காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் இடம் பெற்ற பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவில்கூடத் தெரிவாகத் தகுதியில்லாமல் அரசியல் முகவரியற்றுக் கிடந்தவரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்ற கோசத்துடன் அடையாளப்படுத்தி அவருக்கு புத்துயிர் அளித்தது கல்குடாவின் அரசியல் தலைவனான அமீர் அலியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும்தான்.
சமூகத் துரோகத்தைப் பற்றியும் வரலாற்றுத் துரோகத்தைப் பற்றியும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றால் போல் செய்து கொள்ளும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்ற யாருடைய துரோகம் பற்றியும் கதைப்பதற்கு எந்த வகையிலும்; அருகதையற்றவர்.
இதே போல்தான் தனது தேசியப் பட்டியல் பதவியைத் தானமாக கொடுத்ததாகக் கொக்கரித்துக் கொள்ளும் அஸ்வர் ஹாஜியார் தான் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு அமீர் அலி எதிர்கட்சிக்குச் சென்றது சமுகத் துரோகம் என்றும் இதனால் முஸ்லீம் சமூகம் வெட்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார். இவர் ஒரு கோமாளித்தனமானவர் என்று எல்லோருக்கும் தெரியும். இவரைப் போன்று பதவிக்காகவும் அந்தஸ்திற்காகவும் அமீர் அலி சமூகத்தை விற்கவில்லை. சமூகத்தை காட்டிக் கொடுக்கவும் இல்லை. இந்த அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இனவாதம் தாண்டவமாடிய போது அரசாங்கத்திற்கும் இந்த விடயங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அரசாங்கத்தின் அல்லக்கைதான் அஸ்வர்.
அமீர் அலி மைதிரிக்கு ஆதரிப்பதற்கு எடுத்த முடிவு எடுத்திருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுக்காமல் போய் இருக்கலாம் என்பது சரியாக இருந்தாலும் இத்தனை காலமும் ஏமாற்றியவர்களுக்கு பாடம் படிப்பிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்ததை நியாயம் என்றே கல்குடா தொகுதி முஸ்லீம் மக்களின் கருத்தாகும்.
கல்குடாத் தொகுதிக்கு துரோகம் இளைத்தவர்களும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் துரோகம் இளைத்தவர்களும் அமீர் அலிக்கோ அல்லது மட்டக்களப்பு மாவட்த்தில் உள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதிக்கோ வாக்களிக்காதவர்கள் கல்குடாத் தொகுதி முஸ்லீம் மக்களையும் அமீர் அலியையும் விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்கள்.


.jpg)
Post A Comment:
0 comments: