பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பத்தேகம நீதவான் சந்தன எதிரிமான்ன பிணையில் இன்று விடுதலை செய்தார்.
பத்தேகம நீதிமன்ற பிரிவில் இருக்கும் 8 பொலிஸ் நிலையங்களுக்கு முத்துஹெட்டிகம செல்லக் கூடாது என நீதவான் தடை விதித்துள்ளார்.
தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு நெருங்கிய உறவினர்களின் சரீர பிணையில் பிரதியமைச்சரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அவரை கடுமையாக எச்சரித்த நீதவான், நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்திருந்த நிலையில், சிங்கப்பூர் சென்றாலும் அங்கு செல்லும் போது நீதிமன்றத்தை மதித்து 29 ஆம் திகதி சரணடைவதாக ஊடகங்களில் தெரிவித்ததை கவனத்தில் கொண்டு பிணை வழங்குவதாக கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை உலகமே பார்த்து கொண்டிருக்கும் போது அவர்கள் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முத்துஹெட்டிகமவின் சாரதியை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு அமைய முத்துஹெட்டிகம, வந்துரம்ப, பத்தேகம, யக்கலமுல்ல, உடுகம, நெலுவ, இனிதும, நாகொட, போத்தல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது.
பொலிஸ் நிலையத்தில் ஏதேனும் முறைப்பாடு செய்ய வேண்டுமாயின் அதனை உதவி பொலிஸ் அத்தியட்கரிடம் மேற்கொள்ளுமாறும் நீதவான் கூறியுள்ளார்.
இந்த வழக்கு ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: