முஸ்லிம்கள் குறித்த மைத்திரியிடம் சாதகமான நிலைப்பாடுகள் இல்லை - அப்துல் காதர் மசூர் மௌலானா

Share it:
ad
முஸ்லிம்களின் மீது திடீர் பாசம் பொழியும் பொது வேட்பாளர் தலைமையிலான இனவாதக் குழுக்களின் கடந்த கால வரலாறு என்ன?

பெரிய மூங்கில் காட்டை எரிக்க ஒரு சின்ன தீக்குச்சி போதுமானது. நாட்டில் கடந்த காலங்களில் இனவாத தீக்குச்சியை ஆங்காங்கே கொழுத்தி விட்டு, முஸ்லிம்களை அடியோடு கருவறுக்க நினைத்தவரும் , இன்றும் கருவறுக்க  நினைப்பவரும் , அதற்காய் தகுந்த தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவருமான  சம்பிக்க ரணவக்க என்ற ஜாதிஹ  ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் இப்போது மைத்திரியோடு இணைந்திருப்பது அபாயகரமானதாகும். 

ஒரு போதுமில்லாத வகையில், முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்  ’பாலையும் கள்ளையும் பகுத்தறிந்து’ முழு சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம்  தெளிவான முடிவெடுக்க வேண்டிய தீர்க்கமான காலகட்டமிதுவாகும்.சமகாலத்தில் முஸ்லிம்-சிங்கள நல்லுறவை சீர்குலைத்தவர்களில் சம்பிக்க ரணவக்க முதன்மையானவர் என்பதை முஸ்லிம்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் ஆழிப்பேரலை மற்றும் வறுமைக்கோட்டின் கீழும்- பொருளாதாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள 500 வீட்டுத்திட்டமானது இப்போது யாருக்கும் பயனின்றி    பற்றைக் காடுகளாக காட்சியளிக்கின்றன. 

 சவூதி அரசு பல கோடி செலவில்  பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென கட்டிய வீடுகள் இப்போது அனாதரவாக கை விடப்பட்டிருக்கின்ற சமயத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில் தத்தளிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் மக்களுக்கென அவர்களின் கலை கலாசார அடையாளங்களை பிரதிபலிக்ககூடியவாறு இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபபடாத சமூகம்உரிமை கோருவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்.? தற்போது இவ்வீட்டுத்திட்ட விவகாரம் நீதி மன்ற வழக்கில் இருப்பதனால் அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை இதனால் உறவுகளையும்   வீடுகளையும்  இழந்த மக்கள் இன்று வரைக்கும்  அகதிகளாகவே உறவினர், நண்பர்கள்  வீடுகளில் வசித்து வருகின்றனர். 

பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கு, ஒரு முஸ்லிம் நாடு வழங்கிய நன்கொடை வீட்டையே தர மறுத்து- எமக்கெதிராக கோஷம் எழுப்பும் ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த சம்பிக்க ரணவக்க போன்றே இன்றைய பொது வேட்பாளர் மைத்திரியும் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவார் என்பதை முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்கும் தருணமிதுவாகும்.

சவூதி அரசின் கருணையில் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காலம் தாழ்த்தாது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டுமாயின் சம்பிக்க போன்ற இனவாதிகளை அரசியலில் இருந்து பொது மக்கள் ஓரம் கட்ட வேண்டும்.  

அந்த வீடுகளை இதுவரை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க விடாது அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் முட்டுகட்டை போடும் சம்பிக்க ரணவக்க  சார்ந்திருக்கும் மைத்திரியின் இனவாத கட்சியை  முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டார்கள். ஏழை அப்பாவி முஸ்லிம்களின் இதயக் குமுறல் இனவாத அரசியல்வாதிகளை முகவரி இழக்கச் செய்து விடும். அந்த வகையில் பொது வேட்பாளரின் இனவாத குழுமம்- ஜனவரி எட்டில் இன்ஷா  அல்லாஹ், மண் கவ்வத்தான் போகிறது.  

 சம்பிக்க போன்ற இனவாதிகள் இருக்கும் வரை முஸ்லிம் நாடுகள் இலங்கை மீது கரிசனை காட்ட தயக்கம் காட்டியதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும், ஜனாதிபதி மீது வைத்த அளப்பரிய நம்பிக்கையினால் சவூதி அரசின் உதவிகள் தொடர்கின்றன. ஈமானிய உறவுகள் என்ற வகையில் சவூதி அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களை மிகுந்த ஈடுபாட்டுடன் அரவணைத்துக் கொள்கிறது.

சவூதி மன்னர் மதிப்புக்குரிய அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களும், அரச குடும்பமும், சவூதி மக்களும் மனம் உவந்து மனித நேயத்துடன் வழங்கிய இந்த உன்னத உதவி, மனிதம் நேயம் என்னவென்று தெரியாத இனவாதிகளால் தடுக்கப்பட்டு இன்று யாருக்கும் பயனற்று குறித்த வீடுகள் சுடுகாடுகளாக மாறியிருக்கின்றன. அதேபோல், உலக நாடுகளில் யுத்தம் வறுமை மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுகின்ற அரபு தேசங்களில் முதன்மை வாய்ந்ததும், எமது நேச நாடுமான சவூதி அரேபியாவை ’தீவிரவாதிகளின் தேசம்’ என சித்தரித்துக் காட்டியதும் இதே சம்பிக்க தான் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

மேலும் இலங்கை முஸ்லிம்களை சவூதிக்கு புலம்பெயர்ந்து செல்ல வேண்டுமெனும் அர்த்தத்தில்  பேசியவரும் இன்றைய மைத்திரியின் உற்ற தோழன் சம்பிக்க்க ரணவக்கவேயாகும். இதன் மூலம் புலப்படுவது என்ன? முஸ்லிம்களின் பரம விரோதி யார்?  இலங்கையில் சிங்கள முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்த கங்கணம் கட்டி அலையும் மூல சூத்திரதாரி யார்? சம்பிக்க ரணவக்க, என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடையாக இருக்கும்.இதற்கான வெளிப்படையான யதார்த்தங்களும் தெளிவான சாட்சிகளும் எம்மிடம் இருக்கின்றன. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவர் சம்பிக்க ரணவக்க.  இன்றைய பொது வேட்பாளரின் வலதுகரம். மைத்திரியின் பங்காளி. முஸ்லிம்களின் எதிராளி. முஸ்லிம் சமூகத்தை எள்ளி நகையாடும் இனத் துவேசி. 

இனத் துவேசிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் மைத்திரி, அவர்களுடன் சிறுபான்மைக்கு சாதகமான எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்திருக்க மாட்டார். செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் அந்த அறிக்கைகளை ஊடகங்கள்  வெளியிடவில்லை. இது குறித்து முஸ்லிம்கள் நன்கு சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் குறித்தோ, இதர சிறுபான்மை மக்கள் குறித்தோ மைத்திரி அவர்களிடம் சாதகமான நிலைப்பாடுகள் இல்லை. இவ்விடயத்தில் அவர் நழுவல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இனவாதிகளான அவரது சகபாடிகளை என்ன விலை கொடுத்தாவது அவர் திருப்திப்படுத்துகிற போக்கிலேயே செயற்படுவார் என்பது வெளிப்படை உண்மையாகும்.

மைத்திரி  முஸ்லிம்களுக்கெதிரான  நீண்டகால வன்மத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு அலைகிற ஹெல உறுமயவின் கடும் போக்குவாதிகளுடன் இணைந்து செயற்படுவது எமக்கு ஆரோக்கியமானதல்ல. இது பாரிய விளைவுகளை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தும். இதற்கு முஸ்லிம்கள் துணை போகக் கூடாது.

நாட்டில் சட்ட ரீதியான அங்கீகாரத்துடனும், முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சி நிரலுடனும் யாப்பமைத்து ஜாதிஹ ஹெல உறுமய செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், மற்றைய கடும் போக்கு அமைப்புகள் சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் அல்ல. அவை மழைக்கு உருவாகும் காளான் போல, உருவாகிய வேகத்தில் அழிந்து விடக் கூடியதாகும். காலத்துக்கு காலம் மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதை விட இவர்களால் வேறொன்றும் சாதிக்க முடியாது. சிங்கள மேலாதிக்கம் நிரம்ப பெற்ற சம்பிக்க ரணவக்க போன்றோர் கூடவேயிருந்து குழி பறிக்கும் படு பயங்கரமானவர்கள் என்பதை சிறுபான்மையிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.

மேலும், இதே சம்பிக்க ரணவக்க தான் முஸ்லிம்களுக்கு எதிராக பல அபாண்டமான பழிகளை சுமத்தியவர். முஸ்லிம் சமூகத்தின் கல்வி பொக்கிஷமான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை தீவிரவாதம் கற்பிக்கப்படும் இடமென சிங்கள சமூகத்தில் பரப்புரை செய்தவரும் இவரே. முஸ்லிம்களின்  மதக் கல்வி போதிக்கப்படும் மத்ரஸாக்களையும் தீவிரவாத முத்திரை குத்தி தனது இனவாதத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியவரும் இதே சம்பிக்கதான் என்பதை முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே இவ்வாறான கள நிலைவரங்களை ஆராயாமல் நாட்டின் தலைமையில் மாற்றம் ஒன்று தேவை எனக் கோஷமிடுகின்ற ஒரு சிலருக்கு மாற்றம் என்றால் என்ன? ஏன் மாற்றம்? எதற்கு மாற்றம்? மாற்றத்தை ஈடு செய்யும் மாற்று வழி என்ன? என்பது குறித்த தெளிவோ, அல்லது நாட்டின் நலன் குறித்த எதுவித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. 

மாற்றம் தேவை என்று கூக்குரலிடும் தீய சக்திகள் மறுபடியும் எமது அழகிய தேசத்தை இருள் சூழ்ந்த யுத்த அரக்கனின் காலடிக்கு கொண்டு சென்று, நாட்டில் நிலவும் அமைதியையும்,காணும் திசைகளிலெல்லாம் அபிவிருத்தியின் காட்சிகளாய் சாட்சி சொல்லும் தேசத்தையும், இலங்கை எனும் இந்த எழில் மிகுந்த தீவுக்கு- ஆளுமையுள்ள, பொருத்தமான தலைமைத்துவமாக திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆட்சியதிகாரங்களையும் சுய அரசியல் இலாபங்களுக்காகவே சிதைக்கவே திட்டம் தீட்டுகின்றனர்.
இதுவே இவர்கள் கோரும் நியாயமில்லாத மாற்றமாகும். 

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த கூட்டுச் சேர்ந்திருக்கும் இந்த சுய லாபம் தேடும் அரசியல் சக்திகளின் திருகுதாளங்களை மக்கள் மிக நிதானமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி மீது நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில், முஸ்லிம்களும் மற்ற மக்களைப் போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  மீது அதீத அபிமானம் கொண்டிருக்கின்றனர். கோரத் தாண்டவமாடிய 30 வருட கால போரில் உயிர்கள், உடைமைகள் என அதிகளவில் இழப்புகளை சந்தித்த தமிழ் மக்களும் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து மறுபடியும் அவரிடமே நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க உறுதி பூண்டிருக்கின்றனர்.

ஆனால், ஐக்கியத்தையும் ஸ்திரத்தன்மையையும் குலைத்து நாட்டில் மீண்டும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த கங்கணம் கட்டி அலையும் அரசியல் பயங்கரவாதிகளை மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இனம் காண வேண்டும். சிறந்த தலைமைகளை ஆட்சியை விட்டு அப்புறப்படுத்தி, நாட்டை சூறையாட சர்வதேச சக்திகளுடன் இணைந்திருக்கும்  கயவர்கள் குறித்து பொது மக்கள் ஆழ்ந்த அவதானமாக இருத்தல் அவசியமாகும்.

லிபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் நடந்தது என்ன? நடப்பது என்ன?  அமைதி, நிம்மதி, பெருந்தொகையான மரணங்கள், பொருளாதரம், பாரம்பரிய மத கலாசார விழுமியங்கள் அழிக்கப்பட்டு,போரின் வடுக்களால்  இந்த நாடுகள் சீர்குலைந்து சின்னாபின்னமாகியிருக்கின்றன. 

லிபியா,  அன்றைய தலைவர் மறைந்த கடாபியின் தலைமையில்   உலக நாடுகளில் எந்த நாட்டிடமும் கடன் வாங்காத ஒரு செல்வம் கொழித்த ஒரு நாடாக விளங்கியது. ஆனால், லிபியா தலைவர் மேல் காழ்ப்புணர்வு கொண்ட உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள நாசகார பிரிவினைவாதிகள் அங்கே குழப்பத்தை உண்டாக்கினர். மக்களை பகடைக்காய்களாக பயன் படுத்தி, அர்த்தமில்லாத புரட்சியை ஏற்படுத்தி பல இலட்சக்கணக்கான உயிர் இழப்புகளுடன், பொருளாதார நாசங்களை  செய்தனர். இன்று உலக வரைபடத்தில் லிபியா எனும் தேசம் அதன் ஆளுமையுள்ள தலைவர் முஅம்மர் கடாபியை இழந்து அனாதையாய் காட்சியளிப்பதை அறிகிறோம்.

ஆனால், எமது ஜனாதிபதியின் தலைமையில் தெற்காசிய நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இலங்கை திகழ்கிறது. இது மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் அரசினால் மாத்திரமே சாத்தியமாயிற்று என்பதை பொது மக்கள் உணர்தல் அவசியமாகும். 

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்த போதிலும் ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை விட இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் மாத்திரமே நாட்டைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்து மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தது. இதனால் இந் நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்களை ஒரு தேசிய வீரனாக மதித்துக் கெளரவிக்கிறார்கள். 

சிங்கள,தமிழ்,முஸ்லிம் என முழு நாட்டுக்கும் அளப்பரிய சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர் எமது ஜனாதிபதி என்பதில் நாம் எல்லோரும் பெருமிதம் கொள்ள வேண்டும். நினைத்த நேரத்தில் நினைத்த வீதியால் அச்சமின்றி பயணம் செய்யும் நிலைமையை உருவாக்கி தந்து, மக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது  மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களேயாகும்.

2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்படாதிருந்தால் இன்று எங்கள் நாடு இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கும் என்ற யதார்த்தத்தை இந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு நாட்டிற்குள் மறுபடியும் பிரிவினையை ஏற்படுத்த முனையும் சக்திகளை நாம் எல்லோரும் சேர்ந்து விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறான தேசத் துரோகிகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் எப்போதும் ஆதரவளிக்க கூடாது. 

பலரின் இரத்தத்திலும் கண்ணீரிலும் எமது இலங்கை தேசத்தை கட்டியெழுப்பி இருக்கின்றோம். நாட்டு மக்களுக்காய் ஜனாதிபதி அயராது பாடுபட்டு வருகின்றார். இவை விழலுக்குஇறைத்த நீர் போல ஆகி விடுதல் கூடாது. ஒரு விடயத்தை ஆக்குதல் கஷ்டமானது. ஆனால், அழித்தலென்பது மிக இலகு. எனவே, பலரது உழைப்பிலும் முயற்சியிலும் கட்டி எழுப்பப்பட்ட நாட்டை மென்மேலும் நாம் பாதுகாத்திடல் அவசியமாகும்.

ஆகவே,நாட்டில் சகல இன மக்களும் மதங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் வாழுகின்ற போது, பிரச்சினைகளை கூடியளவு தவிர்த்துக் கொள்ள முடியும். உடன்பாடற்ற ஒரு உடன்பாடு என்ற ரீதியில் நாம் எல்லோரும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் அவசியமாகும். குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் ஐக்கியத்திலும் இறைமையிலும் அன்றிலிருந்து இன்று வரை கூடிய பங்களிப்பு செலுத்தி வருகின்றோம். குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் எண்ணக் கருக்களை களைந்து விட்டு நாட்டின் முன்னேற்றத்தில் கை கோர்க்கின்றவர்களாக நாம் இருந்து வருகின்றோம். 

எனவே, முஸ்லிம்கள் என்றும் நாட்டின் விசுவாசிகள் என்பதை உணர்த்த சரியான தருணமாக, ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆளும் அரசுக்கு அமோக ஆதரவை வழங்குதல் வேண்டும்.

 பெரும்பான்மை மக்களுடன் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? 

எமது மத வழிபாடுகளையும்-சம்பிரதாயங்களையும் பேணி நடக்கும் அதேசமயம் அவர்களுக்கு எம்மால் அசௌகரியங்களும் ஏற்படாதவாறு எம்மை நாம் செப்பனிட்டுதல் விரைந்து செய்யக் கூடிய ஒன்றாகும். அத்துடன் என்றும் முஸ்லிம்களாகிய நாம் வெளிப்படைத்தன்மையை பேணுதல் அவசியமாகும். இஸ்லாத்தை மிகச் சரியான முறையில் சகோதர சமூகத்தினரிடம் கொண்டு சேர்ப்பது நம் எல்லோரதும் கடமையாகும். 

எமது சாந்தி மார்க்கம், சாந்தி மார்க்கமாக பெரும்பான்மை மக்களிடம் இதுவரை எத்தி வைக்கப்படவில்லை. மேலும், அதிகளவில் எமது குர் ஆன் ஹதீஸ்களின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு வடிவம் சகோதர சமூகத்தினரிடம் சென்றடைய முஸ்லிம் கலாசார திணைக்களம் போன்ற பொறுப்பு வாய்ந்த அமைப்புகள் வழி சமைத்தல் அவசியமாகும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையே கேள்விக் குறியாக இருக்கின்ற போது, மற்றொரு இனத்திடமிருந்து நாம் அதை எவ்வாறு எதிர்பார்க்கலாம்?

இவ்விடயம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கை முஸ்லிம்களிடையே பரவலாக பிரதேசவாதம் தலைவிரித்தாடுவதை அவதானிக்கலாம். இதுவொரு சாபக்கேடாகும் என்பதை இவ்வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடிக்கும் படி எமது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள் மொழியை மறந்து எமக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கொள்கைகளுக்காய் பள்ளிவாசலில் வாளேந்தி சண்டை பிடித்திருக்கின்றோம். 

இவ்வாறான முஸ்லிம்களின் நடைமுறைகள் சகோதர இனங்களுக்கு எம் மீது வெறுப்பை உமிழச் செய்யும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்தல் அவசியமாகும். எமக்குள்ளே கொள்கைகள் கூடி குழப்பங்கள் அதிகரித்தனவே தவிர மத ரீதியாக எமக்கு எவ்வித அனுகூலங்களும் கிட்டவில்லை. எனவே, நாம் முதலில் நம்மை திருத்திக் கொண்டு பிற சமூகத்தின் குறைகள் பற்றி ஆராய்தல் உசிதமாகும்.

இனங்களுக்கிடையிலான சமூக கலை கலாசார பாரம்பரியங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்?

எமது சகோதர முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் சமூகம் சார்ந்த கலை கலாசாரப் பாரம்பரியமிக்க எழுத்து வடிவங்களை, படைப்புகளை சிங்கள மொழியில் அதிகளவில் வெளிக்கொணர்தல் காலத்தின் கட்டாயமாகும். 

இதனூடாக எமது கருத்துக்கள், உணர்வுகள் பரிமாறப்பட்டு இன நல்லிணக்கம், சௌஜன்யம்,சமரசம் என்பன மலர வாய்ப்பிருக்கிறது. எல்லோரும் நேசிக்கும் அந்த நல்லிணக்கம் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் மாத்திரமே நாட்டுக்கு கிடைத்திருக்கிறது. அதனை நாம் இனிவரும் காலங்களிலும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். நாட்டையும்,மக்களையும் நேசிக்கும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவோம்.

அஷ்ஷேக். அப்துல் காதர் மசூர் மௌலானா
முஸ்லிம் சிங்கள தேசிய ஒருமைப்பாடு தொடர்பான வேலைத்திட்டத்தின் தலைவர், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர்.
Share it:

Post A Comment:

0 comments: