உரிமைக்காக முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்ன...?

Share it:
ad
(யூ.எல்.ஏ. கபூர் ஜின்னா)

இலங்கையில் போராட்டக் காலத்திற்கு முன்பும் அதற்குப் பின்பும் முஸ்லிம்களின் தலைவர்கள் வியாபார அரசியலை கைவிடவில்லை. ஆனால் தமிழர்களின் போராட்டம் இன்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்குமிடையில் இராஜதந்திர மட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட முஸ்லிம்களின் வியாபார அரசியல் செல்லாக்காசாக மாறிவிட்டது. இனம் என்பதை நாம் வரையறை செய்வதாயின் ஒரே வகையான மதம், பண்பாடு, மொழி தனித்துவமான கலாசாரம் போன்றவற்றைக் கொண்ட ஓர் மக்கள் தொகுதி எனலாம். இவ்வாறு அமையப் பெறும் ஓர் இனத்தின் உரிமை, சுதந்திரம் போன்றன இன்னொரு சமூகத்தினால் மறுக்கப்படும் போது அங்கு அடக்கி ஒடுக்கப்படும் சமூகம் கிளர்ந்தெழும் நிலை இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. 

அப்போது உரிமைக்கான போராட்டம் வெடிக்கும் அல்லது தொடங்கும் சூழ்நிலை இலங்கையில் தமிழ் இனத்திற்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டதை நாம் அறிவோம். இப்போராட்டம் நடத்துவதற்கு சில அடிப்படையான அம்சங்கள் அந்த இனத்தின் சமூகத்துக்கு இருத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் தான் உலகத்தின் பல பாகங்களிலும் நடக்கும் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. உரிமைக்குப் போராடும் இனத்திற்கு சொந்தமான மொழி இருக்க வேண்டும், சொந்தமான கலாசாரம் இருத்தல் வேண்டும், சொந்தமான தனியான இனம் வாழக்கூடிய ஒரு மாகாணமாவது இருத்தல் வேண்டும், உரிமை மறுக்கப்பட்டிருந்தல் வேண்டும், அதற்காக அகிம்சை வழியில் போராட்டம் செய்திருத்தல் வேண்டும். இப்படியாகப் பார்த்தால் தமிழர்கள் அகிம்சை வழிப் போராட்டம் செய்துள்ளதுடன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக கூட இருந்து போராட்டம் செய்துள்ளார்கள். 

அதன் மூலமாக பலன் கிடைக்காமையால் ஆயுதப் போராட்டம் செய்து இன்று அந்தப் போராட்டம் சர்வதேசத்திற்கு சென்றுள்ளமையில் இன்றைய தமிழர்களின் போராட்ட மட்டத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் ஏன் முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து உரிமைக்கான போராட்டத்திற்காக சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் உண்மை என்னவென்றால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு தனித்துவமான தனித்தன்மை இல்லாமல் தான் இன்று முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தனியாக உரிமைக்கான போராட்டம் செய்வதற்கு இலங்கை முஸ்லிம்களின் அடிப்படை அம்சங்கள் இல்லாமல் இருப்பது பற்றி முஸ்லிம்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் ஒரே ஒரு வழி மட்டும் தான் முஸ்லிம்களுக்கு உரிமை பெறக்கூடிய வழியுண்டு. அது தமிழர்கள் உரிமைக்காக போராடியமையால் அவர்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் தான் உரிமையைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு எனலாம். தமிழர்களுடன் உரிமைக்கான அரசியலுக்காகப் போராடாமல் விட்டால் சிங்கள அரசாலும் தமிழ் அரசாலும் எதிர்காலத்தில் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம். 

இதற்காக வேண்டித்தான் இணக்க அரசியலை விட்டு விட்டு உரிமைக்கான அரசியலை தமிழ்த் தலைமையுடன் முஸ்லிம் தலைமை சேர்ந்து செயற்பட வேண்டும் என்கின்ற கருத்தை பல கட்டுரைகளில் நான் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியான ஒரு மொழி இல்லை. தனியான முஸ்லிம் மாகாணம் இல்லை. தனியான ஒரு கச்சேரி இல்லை. இப்படி இருக்கும் போது வாழ்நாள் பூராகவும் முஸ்லிம் சமூகம் அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளுக்காக மட்டும் வியாபார அரசியல் செய்து கொண்டிருப்பது என்பது எப்படிப் பொருந்தும். ஒரு சமூகம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. இன்னொரு சமூகம் தனது உரிமைக்காக போராட்டி கொண்டிருக்கின்றது. இன்னொரு சமூகம் இரண்டிற்கும் நடுவில் சும்மா பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

இலங்கையில் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களும் பல உண்டு. ஆனால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டம் பெரும்பான்மை இன குடியேற்றங்களின் காரணமாக முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு இணைவதாக இருந்தாலும் கரையோர மாவட்டம் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் அல்லது இரு சமூகங்களும் வேறு வகையில் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையுடன் கூடிய ஒரு மித்த கருத்து வேண்டும். இதில் முஸ்லிம்கள் தமிழர்களிடம் உரிமைக்கான அரசியலைப் பெற்றுக் கொள்ள அவர்களாகவே முதலில் போய் சேர்ந்து இணைந்து கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தனியான மாகாணமும் தனியான மாவட்டமும் தனியான தமிழ் அரசாங்க அதிபரும்  தனியான கச்சேரியும் இருந்தும் கூட தமிழர்களின் காணிகள் பேரினவாத அரசுகளின் மூலமாக பறிபோய்க் கொண்டிருப்பதும் ஒருகாரணம் என்பதால் தான் ஆறு தசாப்த காலமாக தமிழர்கள் அகிம்சை வழிப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் செய்தனர். 

இன்று முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோரக் கச்சேரியைக் கேட்டு நிற்பதால் பேரினவாதிகளின் காணி அபகரிப்பை தடுத்து விடலாம் என முஸ்லிம் காங்கிரஸ் நினைக்கிறதா? அம்பாறை மாவட்டத்தில் சவூதி அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட அக்கரைப்பற்று நுரைச்சோலை யில் கட்டப்பட்ட 500 வீடுகளையும் அரசாங்கத்தில் எம்.பி. பதவி, அமைச்சுப் பதவி பெற்றுக் கொள்வதற்காக வேண்டி நாட்டிற்காகவும் கொடுத்து அமைச்சுப் பதவி பெற்ற அரசியல்வாதிகளால் ஏன் இன்னும் அந்த வீட்டுத் திட்டத்தினை பயனாளிகளிடம் கொடுக்க முடியாதுள்ளது? எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் இன்று ஆளும் அரசாங்கத்தில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் தானே இப்படியான கொடூரங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு நடக்கின்றன. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து கொண்டு அறவழிப் போராட்டம் மூலமாக இரு சமூகத்திற்குமான இறுதித் தீர்வை பெற்றுக் கொண்டால் மாத்திரம் தான், இப்படியான காணி அபகரிப்பு, உரிமை சுய நிர்ணயம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான் இதற்கான தீர்வு கிடைக்கும். இதற்காக வேண்டி தமிழர்கள் அகிம்சை வழிப் போராட்டம். ஆயுதப் போராட்டங்களை ஏன் செய்தார்கள் எனப் பார்த்தால் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இலங்கையில் இனப் பற்றுதல் அதிகரிக்கத் தொடங்கியது. 

எடுத்துக்காட்டாக பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களின் மீது மேலாதிக்கம், புறக்கணிப்பு, அடக்கி ஆளுதல் என்பனவற்றைப் பிரயோகித்துள்ளமையை குறிப்பிடலாம். தமிழ்த் தலைமைகளுக்கும் சிங்களத் தலைமைகளுக்குமிடையில் நடந்த ஒப்பந்தங்கள் எல்லாம் அமுல்படுத்த முடியாமல் போனதினால் தான் தங்களைத் தாமே ஆழவேண்டும் என்ற எண்ணக்கரு தமிழ்த் தலைமைகள் மத்தியில் உருவெடுத்தது. அதன் விளைவாக தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தமிழ்த் தலைமைகள் செயற்பட்டன. மீண்டும் 1977 ஆம் ஆண்டு இலங்கை நாட்டு மக்கள் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டவேளை வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழ் தலைமைகளால் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் வடக்கு, கிழக்கானது தமிழர்களது தாயகம் என பிரகடனப்படுத்தப்பட்டது. 

1956 ஆம் ஆண்டு சிங்களத் தலைவர்கள் சிங்கள தேசிய வாதக் கொள்கையை எவ்வாறு முன்வைத்தார்களோ அவ்வாறு 1977 ஆம் ஆண்டு தமிழ்த் தலைமைகள் தமிழ் ஈழத்துக்கான தமிழ்த் தேசியவாதத்தினை முன்வைத்தனர். இதிலிருந்து இனரீதியான பாகுபாடு மேலும் வலுவடைந்தது. இரண்டு சமூகங்களாகப் பிரியத் தொடங்கின. அப்போது ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியானது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தமை சங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. இதனால் அரசியல் அமைப்பை மாற்றி சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றார். இதன் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரிவினைக்கு ஆதரவாக செயற்படோம் என்ற சத்தியப் பிரமாணத்தைத் தரவேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் திணித்த போது  அதற்கு உடன்படாது தமிழ்ப் பிரதிநிதிகள் 15 பேர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர். இந்தச் சட்டம் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட சட்டம்.  இதில் பிரிவினை கோரும் எவரும் ஆறாவது திருத்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படக்கூடிய சட்டமாகும். இதிலிருந்து அகிம்சை வழிப் போராட்டம் தோல்வியைத் தழுவியது. அதாவது ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கை முற்றாக தமிழ்த் தலைமைகளிடமும் மக்களிடமும் இருந்து கைநழுவிச் சென்றது. அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு இலங்கை இராணுவப் படையைச் சேர்ந்த ட்ரக் வண்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியில் வைத்து தமிழ் ஆயுதக் குழுவினரால் தாக்கப்பட்ட போது இடம்பெற்ற சம்பவத்தில் 13 இராணுவ வீரர்களின் படுகொலையால் முழு நாட்டிலும் இனக் கலவரம் வெடித்தது. 

இதனையே நாம் ஜூலை கலவரம்   கறுப்பு ஜூலை என்கிறோம்.  1980 க்குப் பின் ஆயுதப் போராட்ட வடிவமாக உச்சம் பெற்ற தமிழ்ப் போராட்டம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காகவே என பிரசாரப் படுத்தப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியத்துடன் முஸ்லிம்கள் இணைந்து செல்லவில்லை. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தினால் பாரிய இழப்பை தமிழ் மக்கள் சந்திக்க நேரிட்டது. இதன் பின்னர் தமிழ் ஆயுதக் குழுக்களை அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது 1987 இல் இலங்கை  இந்திய ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் சர்வதேச ரீதியாக இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் தமிழ் மககளுக்கு சற்று முன்னேற்றகரமாக இருந்த போதிலும் அதிகாரம் கொண்ட சபையாக இன்று வரைக்கும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஆறு தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகளின் ஒட்டுமொத்த பிராயச்சித்தமாகத்தான் ஜெனீவாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீர்வு காண்பதில் அரசு எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. நாடு சுதந்திரமடைந்த காலமுதல் 1956, 1958, 1971, 1972, 1983 எனத் தொடர்ச்சியாக 2009 இலும் பாரிய தமிழ் மக்கள் அழிவுகள், தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் அடிப்படை உரிமை, சுயநிர்ணம், அதிகாரப் பரலாக்கம், காணி உரிமை என்பன ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழ் தலைமைகளால் முன் வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் அரசு உதாசீனப்படுத்தி விட்டது. இதன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் உருவானது. ஆயுதப் போராட்டம் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அங்கு மக்கள் எதிர்பார்த்த தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை ஆயுதப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் உதவின. புலி இயக்கத்தைத் தடை செய்தன. ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் இப்பொழுது அதே நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது ஏன்? இலங்கையில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது., 

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை இன்று சர்வதேசம் அறிந்து கொண்டதால் தான் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியது. கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் பொதுபலசேனா போன்ற அரசு ஆதரவுடன் இயங்கும் அமைப்புகளின் அடக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிவாசல்களில் பன்றிகளின் தலைகளை இரவு வேளைகளில் போட்டமை, பள்ளிவாசல்களை மூடுமாறு அச்சுறுத்தியமை, பள்ளிவாசல்களைத் தாக்கியமை, தம்புள்ள பள்ளிவாசலின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, ஹலால் உணவு விவகாரம் என மத விழுமியங்களுடன் தொடர்புடைய பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவரைக்கும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இவைகளின் பின்னணியில் இனவாத அமைப்புகள் இருக்கின்றன என்பது பகிரங்கமானதாகும். 

முஸ்லிம் காங்கிரஸ் பேரினவாத அரசுகளைப் பலப்படுத்துவதன் மூலமாகத் தான் இந்த அநீதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகின்றன. இதனை முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸும் புரிந்து கொண்டால் மாத்திரமே முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்கும். இதற்காக வேண்டி போராடிய சமூகமான தமிழ்ச் சமூகத்துடனும் தமிழ்த் தலைமையுடனும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமையும் இணைவதன் மூலம் பெறலாம். உரிமை அல்லாது போனால் பெருமளவான அழிவுகளை முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரலாம். பேரினவாத அரசில் இருந்து கொண்டு பேரினவாதத்தை எதிர்க்க முடியாது. உரிமை பெறவும் முடியாது.
Share it:

Post A Comment:

0 comments: