தேர்தல் விடயங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிராமல் இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவமளிக்குமாறு தாம் சம்பந்தப்பட்ட சகலருக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களில் பலியானோரின் உயிர்களை தம்மால் மீள பெற்றுக்கொடுக்க முடியாதுள்ள போதும் அவர்களின் வீடு உடைமைகள் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அடிப்படை தேவைகளுக்கான நிதியுதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பதுளை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிரணியினர் ஆறு வருடங்களுக்கு திட்டமிட்டுள்ளதை தாம் ஒரே வருடத்தில் நிறைவேற்ற த்தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
எதிரணியினர் எமது கொள்கைகளைப் பின்பற்றியே தேர்தல் பிரகடனத்தை தயாரித்துள்ளனர். எனினும் அதில் விவசாயிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். உரமானியம், பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் அதில் எதுவும் கூறப்படவில்லை என்று தெரிவித்தார். உயர்தரத்தில் சித்தியடைந்த ஒன்றரை இலட்சம் இளைஞர்களுக்கு நாம் அடுத்த வருடத்தில் அரச தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்தாயிற்று.
அரச சேவை துறையினருக்கு கொடுப்பனவுகளை வழங்குவது திறைசேரிக்கு பெரும் சுமை எனக் கூறும் எதிரணியினர் அரச ஊழியர்களைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான எமது பிரகடனம் கூட நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து கலந்துரையாடி தயாரிக்கப்பட் டுள்ளது. அவ்வாறில்லாமல் ஏனோ தானோவென்று நாட்டிற்கான தீர்மானத்தை எடுக்க முடியாது. மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். புத்தி சாதுர்யமிக்கவர்களாக செயற்பட வேண்டியது முக்கியமாகும்.



Post A Comment:
0 comments: