எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து, பொத்துவில், பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிங்கள மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்: இது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையென்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சிக்கான பயணத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்துவதற்காக துணிச்சலுடன் முன்வந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களே, என்னை போன்றே அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு இந்த போராட்டத்தில் குதித்திருக்கும் ராஜித சேனா ரத்ன அவர்களே, ஐ.தே.க. தயாகமகே, கலபத்தி உட்பட ஐ.தே.க. முக்கியஸ்தர்களே, எஸ்.எஸ்.பி. மஜீத் அவர்களே, மற்றும் பிரமுகர்களே.
உண்மையில் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகியது என கேட்கின்றனர். முக்கிய காரணமாக, இந்த முடிவை மேற்கொள்ளும் மறுகணமே எங்களைப் பற்றி மிக மோசமாக சேறு பூசுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டி நேரிட்டது.
அடுத்ததாக இந்த தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களிலும் கட்சிகளை பிளவு படுத்தி, உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் படலம் நடைபெற்று வந்திருக்கிறது. அதற்காகவும் நாங்கள் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டி இருந்தது.
என்னைத் தலைவராக மனபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் வாழும் இவ் ஊரில் நான் மிகவும் பெருமிதத்துடன் கூறுவது என்னவென்றால், ஜனாதிபதி பொது வேட்பாளரான உங்களை அமோக வெற்றி ஈட்டச் செய்வதற்காக நான் மட்டுமல்லாது, எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழைத்துக் கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி வந்திருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்தில் உள்ள இந்த ஊரிலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் பொது வேட்பாளரான உங்களை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக காண்பதற்கு மிகவும் ஆவலுடன் வாக்களிக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.



Post A Comment:
0 comments: