இலங்கையில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தலைமையிலான ஜனநாயக விரோத , இனவாத, சர்வதிகார குடும்ப அரசாங்கம் தோற்கடிக்கப்படல் வேண்டும் என்பதுடன், இலங்கை தாய் நாட்டில் இனங்கள், மதங்களிடையே சமத்துவமும் பரஸ்பர உறவும் நம்பிக்கையும் உடனடியாக கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டவர்களாக இருக்கிறோம்.
இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வும், இன சமத்துவம், ஜனநாயக அடித்தளம் உறுதிப்படுத்தப்படுவதும் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயம் வழங்குவதும் இதில் முன் நிபந்தனையாகும். நபர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவது அல்ல பிரச்சினைக்கான தீர்வு, கொள்கை அடிப்படையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான கட்டமைப்பும் எழுத்து மூலமான அரசியல் உத்தரவாதமும் இலங்கையின் அனைத்து மக்களினதும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முன் வைப்புமே இன்று அவசியமானது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்கு மாற்றாக முன் நிறுத்தப்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்கள் மேற் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக தமது உறுதியான நிலைப்பாட்டினை முன் வைப்பது அவர்களது கடமை என்பதுடன், அத்தகைய எந்த முன்வைப்புமில்லாமல் , வெறுமனே மகிந்தவுக்கு மாற்றாக தம்மை முன் நிறுத்துவது அரசியல் ரீதியாக ஏற்புடையது அல்ல என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்படுகின்ற மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்றும் மிகத்தந்திரமானதும் சந்தர்ப்பவாதமான அரசியல் போக்குமாகும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்றுவரை மாற்று அரசியல் தலைமைகள் தமது நிலைப்பாட்டினை இதுவரை எழுத்து மூலம் முன் வைக்கவில்லை என்பதுடன் வெறுமனே அரசியல் கோசங்களையே முன் நிறுத்துகிறது. இதே வேளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்போர் இலங்கை முஸ்லிம் மக்களின் அடிப்படை ,நாளாந்த பிரச்சினைகளை ஒன்று திரட்டி மக்களின் கோரிக்கைகளாக அரசியல் தலைமைகளிடம் முன் வைக்கவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் அதிகார சதுரங்கத்தில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கைவிடப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் நீதி மறுக்கப்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் எழுத்து மூலமான உத்தரவாதங்களும் நம்பிக்கையை வலுப்படுத்துகின்ற அரசியல் உத்தரவாதங்களுமே இன்றைய நிலையில் அவசியமானது.
தனிமனித, கட்சி அடிப்படையிலான நம்பிக்கைகளை உருவாக்குவதோ , மிகையான விம்பங்களை அதிகாரத்தினை கைப்பற்றுவதனை இலக்காகக் கொண்டு மக்களிடம் ஏற்படுத்துவதோ இன்றைய நிலையில் ஒரு மாற்றீடு அல்ல. அரசியல் தலைமைகளை உடனடியாக தமது நிலைப்பாடுகளையும், உத்தரவாதங்களையும் மக்களை நோக்கி முன்வைக்க வேண்டுமென முஸ்லிம் மக்கள், சமூக நிறுவனங்கள் வலியுறுத்துவது தமது கடமையாகும். இதில் முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்கு கணிசமாக உள்ளது.
உடனடியாக அரசியல் தலைமைகளுடனும், சிவில் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டி உள்ளது. வெறும் வாய் வார்த்தைகளையும் தேர்தல் பேச்சுக்களையும் கடந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களை பெறுவது அவசியமாகும். அந்த உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே மக்கள் அரசியல் நிலைப்பாட்டினை வகுத்துக் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் சூழலில் அரசியல் ,சமூக ரீதியாக செயற்பட்டு வருகின்ற நாம் , புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த அடிப்படையில் தமது நிலைப்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படைகளை மக்கள், சமூக நிறுவனங்களிடமிருந்து தொகுத்துக் கொள்வதற்கான அரசியல் உரையாடலை தொடங்கி உள்ளோம்.
உடனடியாக அரசியல் தலைமைகளிடமிருந்து கீழ்வரும் விடயங்களுக்கான உத்தரவாதத்தினை கோருகிறோம்.
*இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இன, சமூக, கலாசார மக்களும் சமத்துவமாக வாழ்கின்ற, மதிக்கப்படுகின்ற , காப்பீடுகள் அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான முன் மொழிவுகள் முன் வைக்கப்படல் வேண்டும்.
*இனப் பிரச்சினைக்கு நியாமான தீர்வு காணப்படுவதுடன், அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கான அரசியல், நிர்வாக உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
*முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன, மத வாத வன்முறைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் காரணமான அமைப்புகள், அதன் பிரதி நிதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதுடன், நீதி விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.
*பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படுவதுடன், அச்சுறுத்தலற்ற சூழல் நீடிப்பதற்கான சமூக ஏற்பாடுகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
*உடைக்கப்பட்ட, அகற்றப்பட்ட, பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீள புனர் நிர்மாணிக்கப்படுவதுடன், தடுக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வாணிப வாய்ப்புகள் மீள திறக்கப்படல் வேண்டும்.
Post A Comment:
0 comments: