கலங்கியுள்ள அரசியல் அரங்கும், கலக்கமடைந்துள்ள அரசியல்வாதிகளும்..!

Share it:
ad
(இஸ்மாயில் பீ. மாரிப்)

கலங்கிக்  கிடந்த அரசியல் அரங்கு தெளிவு பெறும் வாரமாக இந்த வாரம் மாறுகிறது. வாய் மூல சமர்ப்பணங்களுக்கு வேட்டு வைத்து விட்ட மீயுயர் நீதிமன்றம் எழுத்து மூல சமர்ப்பணங்ளோடு ஜனாதிபதியால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று விடையளிக்கிறது. மாலையளவிலோ அல்லது அதற்கு முன்னரோ தனது ஆலோசனையை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற உயர் நீதிமன்றம் முழு அளவிலான நீதியரசர்கள் குழாமைக் கொண்டே ஆராய்வுகளை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்றாவது தவணைக்கு போட்டி போடுவது தொடர்பாக ஆலோசணையை  வெளிப்படுத்தவுள்ள உயர் நீதிமன்றம், பெற்றுக் கொண்ட எழுத்து மூல சமர்ப்பணங்களின் எண்ணிக்கை  34. அவற்றில்  32 ஜனாதிபதிக்கு சார்பானவை என்பது பத்திரிகைச் செய்தி. அவ்வாறானால்  சமர்ப்பணங்களில்  94 வீதமானவை மூன்றாவது  பதவிக் காலத்துக்கு இணைவானவையும் இசைவானவையுமாகும்.

சுருங்கக் கூறின் ஜே.வி.பி. யும் சட்டத்தரணிகள் சங்கமுமே ஆட்சேபனையான சமர்ப்பணங்களைச் செய்துள்ளன. நிறைவேற்று அதிகாரம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறி வந்தமை பிந்திய செய்தியாகும். அதேநேரம் அவரும் பிரதமர் என்ற கோதாவிலும் தனிப்பட்ட ரீதியிலும்  ஜனாதிபதிக்கு  ஆதரவான சமர்ப்பணம் செய் துள்ளமை மிகப்பிந்திய செய்தியாகும். 

 இதேவேளை எதிர்த்து எழுத்து மூல சமர்ப்பணம் செய்தவர்கள் இரு தனிநபர்கள் என்றே தெரியவருகிறது. ஜனாதிபதிக்கு ஆதரவாக சமர்ப்பணம் செய்தவர்களில் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள் , சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் என்று ஒரு சட்டப் பட்டாளமே தங்களது நிபுணத்துவத்துடன் அடங்கியுள்ளதை அறிய முடிகிறது.  34 சமர்ப்பணங்களில்  32 சமர்ப்பணங்களின் எண்ணிக்கையே  காணிக்கையின் வலிமையை உணர்த்துவதை அறிய முடிகிறதல்லவா ? 
வேட்பாளர் யார் ? 

 இதேவேளை மகிந்தவை எதிர்த்துப் போட்டிபோடும் எதிர் வேட்பாளரைத் தேடும் படலம் முறையாக முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.  1978 ஆம் ஆண்டின் யாப்பு, ஜனாதிபதி முறைமையை இவ்விரண்டிலும் பொது வேட்பாளர் என்பது ஒரு மாயை போன்றது. அந்த மாயைக்கு உயிர் கொடுப்பதற்காகவும் உஷார்படுத்துவதற்காகவும் அக்கறையுள்ளோர் எடுத்து வரும் முயற்சிகள் பலிதமாகவில்லை என்பதை அறிய முடிகிறது.  சந்திரிகா,

 கரு, ரணில் என பெயர்கள் இன்று வரையில் அடிபட்டு வருகின்ற போதிலும் உடன்பாடுகளை எட்ட முடியாதவாறு  கருத்தொருமைப்பாடுகளில் காணப்படுகின்ற கலக்கமே சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அடுத்த பத்து நாட்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய தீர்க்கமான நாட்களாக எதிர்க்கட்சிகளுக்கு மாறலாம். கட்சிகளின் வேட்பாளர்களா?  பொது வேட்பாளரா ? என்பதை அறிய ஆர்வலர்கள் மாத்திரமன்றி அரசாங்கமும் ஆவலாக உள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசரை வெற்றி வாகையுடன் வரவேற்கவும் தரிசிக்கவும் முனைப்புக் கொண்டுள்ள ஜனாதிபதி, இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி  போன்று ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தி முடிக்கும் முனைப்பில் தேர்தல் திகதியையும் முன்தள்ள முனைவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ரணில் விக்கிரம சிங்க 

 இரட்டை மனது கொண்டவராக இது காலவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் செயற்பட்டு வருகிறார் ரணில் . தானே வேட்பாளர் என்ற தோரணையில்  ஒரு கட்டத்திலும் மற்றுமொரு கட்டத்தில் யார் வேட்பாளர் என்பதை கட்சியும் செயற்குழுவும் தீர்மானிக்கும் என்று கூறிவருகின்றார். இந்த நாட்டில் 
சிறந்த அரசியல் அனுபவமும் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்தவருமான அவரை ஒரு பொது வேட்பாளராக ஏற்பதற்கு பெரும்பான்மை சிங்கள கட்சிகளும் தலைவர்களும் விருப்பமின்றிக் காணப்படுவது பெருங் கவலையாகும். கட்சிக்கான மக்கள் ஆதரவுத் தளம் உள்ள போதிலும் மனிதர்கள் ஏற்கிறார்களில்லை. வேட்பாளராக வருவதை உள்ளக முக்கியஸ்தர்களும் வெளியக முக்கியஸ்தர்களும் விரும்பாதுள்ளமை ஒருவகை அரசியல் அகௌரவப்படுத்துகையாகும். யார் துரோகி என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் ரணில், இன்னுமே துரோகி போன்று கட்சிகளாலும்   கட்சித் தலைமைகளாலும் கருதப்படுவது  அவர் புலிகளுடன்  செய்த ஒப்பந்தம் காரணமாகவா  ? அல்லது அவரது பிறப்பின் பலனாகவா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு திருமணங்களை செய்து தோல்வி கண்டவர். மூன்றாவதற்குச் சென்றால் பழைய நிலைமைகள் தோன்றிவிடுமோ என்று உள்ளுணர்வுகளாலும் அச்சத்தாலும் துவள்வது போன்று ரணிலும் துவண்டு கொண்டிருக்கிறார். உடைந்து போய் விடும் என்று கண்ணாடியை மாத்திரமே நூதனமாக பிடிக்கலாம். நிலைத்திருக்கும் ஒரு சாதனம் போன்றே அரசியலை. பிடிக்க வேண்டும். கட்சித் தலைமைப் பதவிக்காக காய்நகர்த்துவதைப் போன்று சமகாலத்தில் எந்த அடிப்படையில் காய்நகர்த்துகிறார் என்பது பலருக்கு புரியவில்லை. வரவு  செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து அவர் ஆற்றிய உரை விமர்சிக்கப்படுகிறது. திடகாத்திரமானதும் நிலையானதுமான விடயங்கள் அவரால் முன்வைக்கப்படுவதில் கடுமையான பின்னடைவுகள் புலப்படுகின்றன. நேர்மை என்ற பண்பாயுதத்தை வைத்துக் கொண்டு கட்சியை  புண்படச் செய்யும் பின்புலம் தோன்றுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

இதேவேளை ஜனாதிபதி முறையை ஒழித்து பிரதமர் முறையை அறிமுகப்படுத்துகின்ற ஜனாதிபதித் தேர்தல்  வேலைத் திட்டத்தில் கஷ்டப்படத் தேவையில்லை. வெற்றி பெறுகின்றவர் எவராயினும் வாக்கு பலம், உறுப்பினர்கள் பலம் கொண்ட கட்சி என்ற கோதாவில் நிறைவேற்று பிரதமராக தானே நியமிக்கப்படுவோர் என்ற தந்திரத்தில் மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக ரணில் தள்ளி நிற்க முனைவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

 கரு ஜெயசூரிய 

 ஆறு தடவைகளில் சூழ்ச்சி செய்ததாகவும் ஏழாவது தடவையாக சூழ்ச்சி செய்வதற்காக சூட்சுமமான முறையில் நடந்து கொள்வதாகவும் வர்ணிக்கப்படுகின்ற கரு ஜெயசூரியவின் கதவை பொது வேட்பாளர் கோதா தட்டுவதாக பிந்திக் கிடைத்த செய்திகள் விளம்பிக் கொண்டிருக்கின்றன. மகிந்தவை  எதிர்த்து போட்டிபோடுவதற்கேற்ற ஒரு சவால் நிறைந்தவராக, புலப்படாதவராக கூறப்படுகின்ற கருவுக்கு ஜனாதிபதி கூட வாழ்த்துக் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.  பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தனது பெயர் முன்னுக்காகியுள்ளதையும் ஆனால் இன்னும் இறுதியாக்கப்படவில்லை என்பதையும் கருவும் ஒத்துக் கொள்கிறார். கட்சிகளை விட பதவிகளுக்கே முன்னுரிமையளிப்பவர் என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்களாலேயே அவர் மீது சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிங்கள பௌத்தப் பார்வை அவர் மீது உள்ளதால் அவரை சந்தைப்படுத்தலாம் என்றும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள் போலும் நேர்மை கண்ணியம் , கட்டுப்பாடு, தூர நோக்கு போன்ற காரணிகள் அவரில் தென்பட்டாலும் கட்சிக்காரர்களின் அடிப்படை ஆதரவு கேள்விக் குள்ளாகலாம். கருவை கட்சி பிரேரித்தால் அல்லது ஆதரவளிக்க முன்வந்தால் சஜித் சார்பு வாக்குகள் சின்னாபின்னமாகி விடலாம் என்றடிப்படையில் சந்திரிகாவை முன்மொழியும் எண்ணத்தில் ரணில் அவரை அணுகியதாகவும் செய்திகள் கூறுகின்றன. எவ்வாறாயினும் ஐ.தே.க. வின் ஆசீர்வாதத்துடனேயே பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு கரு விருப்பம் கொண்டுள்ளதை அறிய முடியாமலில்லை.

தனிப்பெரும் கட்சி 

ஆளும் கூட்டமைப்பு சுதந்திரக் கட்சி தலைமையிலான ஒரு கூட்டு வடிவம்  என்றாலும் ஐ.தே.க.  பழம் பெரும் தனிக் கட்சி. வேண்டியோ வேண்டாமலோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்  51  வீதமான வாக்குகளை பெறுவாரானால் தோல்வியடையக் கூடிய கட்சி 50  வீதத்தை நெருங்கியிருக்குமானால் அது திட்டவட்டமாக ஐ.தே.க. கட்சியாகவேயிருக்கும். உறுதியான வாக்கு வங்கிப் பலம் கொண்ட அந்தக் கட்சி தலைமையின் பலவீனம் காரணமாக உதிரிகளிடம் தவழ வேண்டிய துர்ப்பாக்கியம் தோன்றியிருக்கிறது.  பொது வேட்பாளர் கோதாவுக்காக அணி திரண்டிருக்கும் கட்சிகளிடம் கட்சித் தலைவர்கள் மாத்திரமேயுள்ளனர் என்றடிப்படையில் அபிப்பிராயம் கூறலாம். ஆனால்,  வெற்றி வாகை அல்லது இரண்டாமிடம் பெறும் ஐ.தே.க. வெற்றி பெறக் கூடிய பொது வேட்பாளரிடம் மண்டியிட வேண்டியும் வரலாம்.ஏனெனில் நிறம், சின்னம், கட்சி யாவுமே மாற்றமடைகின்றமையாகும். பொது வேட்பாளருக்காக அர்ப்பணித்துப் பணியாற்றுகின்ற பண்பு ரணிலிடம் புலப்பட வேண்டும்.  2010  ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்காக இரட்டை மனதோடு பணியாற்றியதாக ரணில் மீது குற்றச்சாட்டுகளுண்டு. தனக்குரித்தான கட்சித் தலைமைப் பதவி, எதிர்க்கட்சித் தலைமைப் பதவி ஆகியவற்றை பறித்தெடுத்தார் என்ற எண்ணத்தில் காமினி திஸா நாயக்கவின் ஜனாதிபதி வேட்பாளர்த்துவத்துக்கு ரணில் சரியாக இயங்கவில்லை என்ற பேச்சுக்கள் அன்று  1994 இல் ஓங்கிக் காணப்பட்டன. என்றாலும் சம கால நிலைமையில் கருத்துக் கூறுகின்ற போது   தங்களது பலவீனத்தை பறைசாற்றுவதாகவே ஐ.தேக. பொது வேட்பாளர் அனுசரணைக்கு போவது தென்படுகிறது. உண்மையில்  1988  காலப் பகுதியில் சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சி என்ற நிலைமையை தற்போது ஐ.தே.க. அடைந்து விட்டதா என்றெண்ணத் தோன்றுகிறது. 

சஜித் பிரேமதாஸ 

 ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கரு பொது வேட்பாளராக அல்லது வேறு எவருக்கேனும் அனுசரணை செய்ய ஐ.தே.க. முற்படுமேயானால் தான் ஒதுங்கியிருக்க முனைவதாகப் பேச்சடிபடுகின்றது. ரணில் போட்டியிடுவதில்லையானால் தனக்கு அந்த வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னதாக இருந்து வந்த அவரும் போட்டியிடப் பின்வாங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சஜித்தின் கனிஷ்டத்துவத்துக்கான இடம் அங்கீகாரம் பெறாத பின்புலம் தென்படுகிறது. கட்சி,சின்னம், நிறம் போன்றவற்றைக் கைவிடுவதில் அவருக்கு உடன்பாடில்லை.ஒரு கால கட்டத்தில் நட்புப் பூண்டிருந்த சஜித்  கரு கூட்டு / தலைமைத்துவ சபை உடன்பாட்டுக்கு மாறாக செயற்பட்டார் என்றடிப்படையில் சீர்குலைந்தது. எதிரும் புதிருமாகக் காணப்படுகின்றனர்.  கட்சியின் செயற்குழு பிரகடனப்படுத்தாத ரணிலின் வேட்பாளர் கோதாவை சஜித் தனிப்பட்ட முறையில் எந்த வகையில் பிரகடனம் செய்ய முடியும் என்ற கட்சியின் சிரேஷ்டமானவர்களது எதிர்மறைக் கருத்துகளும் உலாவருகின்றன. பதுளையில் சஜித்தை பிரதித் தலைவராக ரணில் பிரகடனப்படுத்தினார். ஆனால், அங்கீகாரம் செயற்குழுவிடமேயுள்ளது என்றார். அதேபோன்று சஜித், ரணிலை வேட்பாளராக பிரகடனப்படுத்தி வருகிறார். ஆனால், தீர்மானம் செயற்குழுவிடமிருப்பதாக ரணிலே அவ்வப்போது கூறிய வண்ணமுள்ளார் என்றாலும் தானே போட்டியிடப் போவதாகவும் ஆங்காங்கே ரணில் சிலாகிக்காதிருக்கவுமில்லை. 

எப்படியாவது ரணிலைப் போட்டி போடச் செய்ய வேண்டும். தோற்கடிப்பு நேர்ந்தால் படிப்படியாக அரசியலில் இருந்து ஓரங்கட்டச் செய்து தலைமைத்துவத்தைக் கைப்பற்றலாம் என்பது சஜித்தின் குறிக்கோளாக இருந்தாலும் அவரது நிலைப்பாடுகளில் நியாயமில்லாமலுமில்லை.  2010 முதல்  2016 டிசம்பர் வரையான காலப் பகுதியான  6 வருடங்களுக்காக தனது தலைமைத்துவத்தை  நீட்டிக் கொண்டமை எதற்காக ? ஜனாதிபதித் தேர்தலில் போட்டி போடுவதற்கல்லவா ? என்ற தோரணையில் கேள்வி எழுப்பும் சஜித் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் கிராமப்புற வாக்குகளையும் ஒன்று திரட்டும் பணிகளை  சூளுரைக்கிறார். சந்தைப்படுத்த முடியாத தலைமை காரணமாகவே கட்சி மாற்றம், நிற மாற்றம், சின்னம் மாற்றம் பற்றியெல்லாம் பேச வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்று  தனது கனிஷ்டத்துவ பாங்கில் தனது தனித்துவத்தை பேசுவாராகில் அதனையும் தப்பென்பதற்கில்லை. 

மங்கள சமரவீர 

இதேவேளை இன்றைய ஐ.தே.க. வின் நிலைமையைப் பாவித்து மக்கள் சமர வீர ஹீரோவாகப் பார்க்கிறார். சந்திரிகாவை மீள் அரசியல் பிரவேசம் செய்து பார்க்கும் அபிலாஷை அவருக்குண்டு. வந்ததேறு   குடியான கட்சி, சின்னம், நிறம், மாற்றவேண்டும் என்ற கோரிக்கையில் ஐ.தே.க.  அடிப்படை வாதிகள் புழுங்கிப் போயுள்ளனர். விரும்பினால் இடம்பெயர்ந்தோர் தாயகம்  திரும்பலாம் என்று ரணில் கூறிய சங்கதியுமுண்டு.  2010  ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் அரசியல் வாய்ப்பளிக்கப்பட்ட எஸ்.பி.  திஸா நாயக்கவை அவரது வீட்டுக்குச் சென்றே அரவணைத்தார் ஜனாதிபதி.  2015 தேர்தலுக்காக மங்களவை மீள் இணைக்கப் பார்க்கிறார் ஜனாதிபதி. பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சுப் பொறுப்புகளை இயக்கிச் செல்ல இடமளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் கட்சித் தாவல்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் களம் அமைக்கலாம்.  இது ஜனாதிபதியின் பிரத்தியேக போராட்டம் . ஆட்களை வளைத்துப் போடுவதில் வல்லவரான ஜனாதிபதி களைத்தவருமல்ல, சளைத்தவருமல்ல. வரும் பொழுதுகள்  எதுவும் நடக்கலாம் என்ற அரசியலிலும் அரசியல் அரங்கிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை . அரசியல் வாதிகள் ரோஷம் பறந்தவர்கள் என்பதை அரசியல் சித்தாந்திகள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அரசியலுக்கும் ரோஷம் பறந்து விட்டது என்பதை அறிந்து  கொண்டிருக்கின்றோம். 
Share it:

Post A Comment:

0 comments: