18 ஆம் திகதி நள்ளிரவிற்குப் பின், எந்நேரமும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் - பசில்

Share it:
ad
உச்சநீதிமன்றம் (இன்று) திங்கட்கிழமை வழங்கும் தீர்ப்பு சாதகமாகவிருந்தால் 18 ஆம் திகதி நள்ளிரவிற்குப் பின் எந்நேரமும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீர்கொழும்பில் ஸ்ரீ.ல.சு.கட்சி தேர்தல் காரியாலயத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போது கூறினார். 

நீர்கொழும்பு தொகுதி ஸ்ரீ.ல.சு.க. பிரதான அமைப்பாளர் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்; 

இங்கு இன்று திறந்து வைக்கப்பட்ட தேர்தல் காரியாலயம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்  நீர்கொழும்பு தொகுதியில் நாம் தோல்வியுற்றாலும். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். வெளிநாடுகளில் எதிர்க்கட்சிகள் தேர்தல்களைக் கேட்கும்போது எமது நாட்டிலோ எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் வேண்டாம் வேண்டாம் என்கின்றன. அபேட்சகர் ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளார்கள். நாம் தேர்தல் வரைபடத்தை சுருட்டுபவர்கள் அல்ல. எந்த நேரமும் தேர்தலுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்கள். 

உச்சநீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பு எமக்குச்  சாதகமாகவிருந்தால் 18 ஆம் திகதி நள்ளிரவிற்குப் பின் எந்த நேரமும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம். நாம் ஒரு வருடத்திற்கு முன்பே தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டோம். "நில்ரெல்ல' மூலம் 25 இலட்சம் அங்கத்தவர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளோம். ஜூன் மாதத்தில் "நில்பவுர' மூலம் தொகுதி சம்மேளனம், மகளிர் சம்மேளனம், இளைஞர் சம்மேளனம் என்பனவற்றை நடத்தினேம். இப்போது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளோம். 

அடுத்த கிழமை முதல் வாக்களிப்பு நிலைய பிரதேசங்களில் காரியாலயங்கள் திறக்கப்படும். 2005 நவம்பர் 17 இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம். மகிந்த நாட்டைப் பாரம் எடுக்கும்போது நாடெந்த நிலையில் இருந்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள் .பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கமுடியாது, நாட்டை ஒன்று சேர்க்க முடியாது. அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க முடியாது. பணம் இல்லை என்ற நிலைமையே இருந்தது .இவற்றை மாற்றியமைத்து சமாதானத்தை ஏற்படுத்தி  அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து தனக்கு முடியும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துக் காட்டினார். ஈராக் ,சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போல் ஏற்படாமல் இலங்கையை கட்டியெழுப்பியுள்ளோம். இவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு பாரம்கொடுக்கும் திட்டத்திற்காகவே இன்று காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய முன்வரவேண்டும் எனக் கூறினார்.
Share it:

Post A Comment:

0 comments: