காத்தான்குடியில் இஸ்லாமிய இலக்கிய பெருவிழா - ஈச்சை மரத்து இன்பச்சோலை வழியாக ஊர்வலம்

Share it:
ad

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடியில் இஸ்லாமிய இலக்கிய பெருவிழா 2014 நவம்பர் 22 சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி 22 சனிக்கிழமை காலை 8 மணிக்கு காத்தான்குடி மெயின் வீதி ஈச்சை மரத்து இன்பச்சோலை வழியாக மாபெரும் ஊர்வலம் பாடசாலை மாணவர்களால் இடம்பெறும்.

இவ்வூர்வலம் காத்தான்குடியின் மூத்த கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் நினைவாக பல வாழ்வியல் இலக்கிய சுலோக அட்டைகளை தாங்கி விழா மண்டபத்தை வந்தடைவார்கள்.

இவ்விலக்கிய விழா மூன்று அரங்குகளாக நிகழவுள்ளது.

முதலாவது அரங்கம் - நவஇலக்கிய மன்றக்கவிஞர் மர்ஹும் தாவூத்ஸா நினைவரங்கில் இடம்பெறவுள்ளது. காத்தான்குடியின் சகல பாடசாலை உயர்தர மாணவ, மாணவிகள் கலந்துகொள்வார்கள்.

இந்நிகழ்வில் விசேட பட்டிமன்றம் ஒன்றும் நிகழவுள்ளது. 'மக்களை கவர்ந்து மனதில் இடம்பிடித்தது மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?' என்ற மகுடத்திலேயே இப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இவ்வரங்கில் பல இலக்கிய பிரமுகர்களின் உரைகளும் இடம்பெறும்.

இரண்டாம் அரங்கம் பிற்பகல் 4 மணிக்கு இதே மண்டபத்தில் கவிஞர் அப்துல் காதர் லெப்பை நினைவரங்கில் நிகழ்ச்சிகள் தொடரும். கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் இலக்கிய பணியும் சிந்தனைகளும் என்ற தலைப்பில் 2500 சொற்களுக்குள் கட்டுரை எழுதியவர்களின் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் இடங்களை பெற்ற கட்டுரைகள் வாசிக்கப்படும். அதேபோல் கவிஞர் அப்துல்காதர் லெப்பை அவர்களின் கவிதை தலைப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட மரபுக்கவிதைகளில் 80 வரிக்குள்ளாக அமைந்தவற்றில் தரங்கண்டு 1 ஆம், 2 ஆம், 3 ஆம் இடங்களை பெற்றவை  அரங்கில் வாசிக்கப்படும். முறையே இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு 15000ஃஸ்ரீ 10000ஃஸ்ரீ 7500ஃஸ்ரீ ரூபாய்கள் வழங்கப்படவுள்ளது.

இவ்வரங்கில் விசேட கவியரங்கமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் காத்தான்குடியை சேர்ந்த கவிஞர்கள் கவிதை பாடுவார்கள். 

போட்டியில் ஆக்கம் படைத்த அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வரங்கில் இஸ்லாமிய இலக்கிய சொற்பொழிவுகளும் நடைபெறும்.

மூன்றாவது அரங்கம் மர்ஹும் கவிஞர் ஸபாஜி அவர்களது நினைவாக நடைபெறும். இவ்வரங்கில் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளான கோலாட்டம், தஹரா, வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற விசேட நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளது. 

நாட்டின் நாலா பகுதியிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 15 மரபுக்கவிஞர்கள் பொன்னாடை, சான்றிதழ், நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் காத்தான்குடி நவஇலக்கிய மன்ற தலைவர் சாந்தி முகைதீன், பிரதித்தலைவர் மௌலவி எம்.எச்.எம். புஹாரி, செயலாளர் கவிஞர் ஜுனைதீன், கவிஞர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் மேற்கொள்கின்றனர். 

விழா தொடர்புகளுக்கு 0777 245 494 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும்.

இவ்விழாவில் உலமாக்கள், ஹாபிஸ்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், பெண் எழுத்தாளர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். நவ இலக்கிய மன்றம் அனைவரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கிறது என காத்தான்குடி நவஇலக்கிய மன்றத்தின் பிரதிச் செயலாளர் மௌலவி காத்தான்குடி பௌஸ் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: