(சத்தார் எம் ஜாவித்)
2015 ஜனவரி 8ஆம் திகதி வரலாற்றில் முக்கிய நாளாக தற்போது பேசப்பட்டு வருகின்றது. அதுவும் வாக்காளர்களை விட வேட்பாளர்கள் மத்தியில் பல்வேறுபட்ட விதத்தில் அதன் வடிவம் ஊசலாடிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் தேர்களில் வேட்பாளர்கள் வெற்றி பெறவதற்கு பொதுமக்களிடத்தில் ஏதாவது பொய்க் காரணங்களைக் கூறி தேர்தல் வெற்றிகளை பெற்றுக் கொள்வதற்கான சாதுர்ய வழிமுறைகளைக் கையாழ்வது நாடறிந்த உண்மைகளாகும்.
ஆனால் இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய அம்சமாக மட்டுமல்லாது ஆளுந்தரப்பு, எதிர் தரப்பு ஆகிய இரு தரப்பினரையும் சற்றுப் பீதி கொள்ள வைத்துள்ள விடயமாக கோவைகள்(பைல்ஸ்) என்ற விடயம் காணப்படுகின்றது.
அதாவது கடந்த சில வாரங்களாக ஜனாதிபதியால் தமது அரசில் குற்றமிழைத்தவர்களின் கோவைகள் தன்னிடம் உள்ளதாகவும் அரசில் இருந்து விலகியவர்களின் குற்றம் தொடர்பான விடயங்கள் அடங்கிய கோவைகள் பூட்டப்பபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை எதிர்க் கட்சியினரோ ஜனாதிபதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பைல்கள் எம்மிடம் இருப்பதாகவும் எதிர் வரும் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அந்த பைல்களை நாம் எடுப்போம் என ஏட்டிக்குப் போட்டியாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பைல்கள் என்ற விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளமை காணப்படுவதுடன் இந்த விடயம் மக்கள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலையையும் தோற்றுவித்துள்ளது.
இந்த விடயம் பூதாகாரமாவதற்கு கட்சித் தாவல்கள் என்றே கூறலாம். ஆளும் மற்றும் எதிர் தரப்புக் கட்சிகளுக்கிடையிலான அரசியல் வாதிகளின் கட்சித் தாவல்களை இடம் பெற்றமையே காரணமாகும். குறிப்பாக தற்போதைய நிலையில் அதிகமான கட்சித் தாவல்கள் ஆளுந்தரப்பில் இருந்து எதிர்த் தரப்பிற்கு தாவிச் சென்றமையே முக்கிய காணக் கூடியதாகவுள்ளது.
கடந்த காலங்களில் ஆளுங்கட்சியினுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும், ஏனைய பதவிகளையும் பெற்றதுடன் பல விடயங்களில் சுகபோகங்களை அனுபவித்து விட்டு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலைமையின் காரணமாக இந்த அரசு வெற்றி பெறாது என்ற ஊகத்தில் கட்சி மாறுகின்றனர் என்ற கருத்தும் பேசப்பட்டு வரகின்றமையும் அவதானத்தில் கொள்ளப்படுகின்றது.
பலர் கட்சி மாறியதனால் ஆளுங்கட்சி என்ற வகையில் ஜனாதிபதி கோபமடைந்து எமது தரப்பில் இருந்து மாறியவர்கள் பல்வேறுபட்ட குற்றச் செயல்களைப் புரிந்தவர்களின் விபரங்கள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவ்வாறு சென்றவர்களின் கோவைகளை தான் திறக்கப் போவதில்லை என்று கூறி வரும் விடயமும் முக்கியமான ஒரு விடயமாகவும் பேசப்படுகின்றது.
இந்த விடயம் தற்போது மக்கள் மத்தியில் சந்தேகமான விடயமாகவே பேசப்படுகின்றது. காரணம் ஜனாதிபதி இவ்வளவு காலமும் குற்றமிழைத்தவர்களை வைத்தா ஆட்சி நடத்தினார்? என்றும் ஏன் அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வில்லை? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
உண்மையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தேர்தல் வெற்றிகளின் பின்னர் மக்களின் நலன்களைக் கவனிக்காது தமது சுயநலன்களை அனுபவித்தவர்களாக காணப்பட்ட விளைவுகளின் வெளிப்பாடே ஜனாதிபதியால் குறிப்பிடப்படும் கோவை பற்றிய செய்தியாகும்.
எனினும் மேற்படி எச்சரிக்கைளின் மத்தியிலும் நாளாந்தம் கட்சித் தாவல்கள் இடம் பெறுவதும் அதிகரித்த வன்னமே காணப்படுகின்றன. இவ்வாறு கட்சித் தாவல்களுக்கான காரணங்கள் முதலில் கண்டறியப்பட வேண்டும்.
எனினும் கட்சிகளைத் தாவியவர்களின் கருத்துக்களின் படி தாம் எதுவித பயனுமற்றவர்களாக எம்மால் எமக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத துர்ப்பாக்கிய நிலையில் எவ்வாறு நாம் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருக்க முடியும்? என்ற பதிலை வழங்கி தாம் கட்சி தாவியதற்கான காரணங்களை முன் வைத்து நியாயப்படுத்துகின்றனர்.
இதுவரை காலமும் மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என்ற ஆதங்கத்துடன் இருந்தாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ள நிலையில் தற்போது அரசியல் வாதிகளே ஆட்சி மாற்றத்தை அதிகம் நாடிச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. வாக்காளர்கள் தமது பொருளாதார நிலைமைகளை முன் நிறுத்தியவர்களாக காணப்படும் இத்தருணத்தில் அரசியல் வாதிகள் வேறு கண்ணோட்டத்தில் அரசியல் மாற்றங்களுக்குச் சென்று கொண்டிருப்பதை காணக் கூடியதாகவுள்ளது.
கட்சி மாற்றங்கள் அதிகமாக தேர்தல் காலங்களில் இடம் பெறுவது வழமையாக இருந்தாலும் கடந்த இரண்டு தவனை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவரின் கீழ் ஆதரவளிதத் பலர் அவரின் கட்சியில் கைப் பொம்மைகளாக எதுவித அதிகாரங்களுமற்றவர்களாக ஒரு குறிப்பிட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையே முதற் காரணங்களாக கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய அரசின் கைகளே பாராளுமன்றத்தில் ஓங்கி இருந்து பாராளுமன்றத்தில் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அவற்றை இலகுவான முறையில் நிறைவேற்றி செயற்படத்தி வந்துள்ள நிலையில் தற்போது அந்த நிலைமை சற்று சரிந்து கொண்டு செல்கின்ற நிலைமைகள் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் எதிர் கால அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்களில் ஒரு ஆபத்தான நிலைமைகளை நோக்கிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த நிலைமைகளை கட்டுப்படுத்த அரசின் முக்கிய அமைச்சர்கள் பலமான முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் அதற்கு மாற்றமான களநிலவரங்களே அதிகம் காணப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தலைமையின் கீழ் பல அரசியல் மாற்றங்களைச் செய்து நாட்டின் ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்தலாம் என்ற கொள்கையின் அடிப்படையிலும் அவர்களின் வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இன்று ஆட்சிமாற்றத்திற்கான கருத்துக்களுக்கு ஆதரவுகள் கிடைத்து வருகின்றமையையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அந்த ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஆட்சி இடம் பெறவேண்டும் என்ற விடயத்தில் அதிகமானவர்கள் காணப்படுவதால் இதற்கு உத்ரவாதமளிக்கும் நபர்களுக்கு அல்லது கட்சிக்கு மக்கள் வாக்களிக்க முனைகின்றனர்.
இந்த விடயத்தின் உண்மைத்தன்மை தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெளியீட்டின் பின்னர் மேலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற விடயங்களும் உள்ளடங்கி இருப்பதும் தற்போதைய கருத்துக்கணிப்புக்களின்படி அறியக் கூடியதாகவுள்ளது.
கடந்த காலங்களில் அனைவரையும் அரவணைத்த வகையில் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவற்றையும் உள்வாங்கிய விதத்தில் பலமான அரசியல் அடித்தளங்கள் இடப் பட்டிருந்தால் தற்போதைய அரசியல் தளம்பல் நிலைமைகளை அரசு எதிர் கொண்டிருக்காது என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் கருத்தக்களோ அல்லது அவர்களின் விருப்பு, வெறுப்புக்களோ தற்பொதைய அரசியால் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்துள்ளது. அவ்வாறான நிலைமைகள் தற்போதைய அரசியல் குழப்ப நிலையில் ஆளுங் கட்சியைவிட எதிர்க்கட்சிகளின் பக்கம் மக்கள் தாவுவதற்கு அல்லது தமது ஆதரவை வழங்குவதற்கு வழிகோலலாம் என்பதனையும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையர் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சிறுபான்மை மக்கள் கடந்த பல தஸாப்தங்களாக தமது உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் அதனைக் கேட்டபோதேல்லாம் பெரும்பான்மை ஆட்சியாளர்களால் தூசிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை மக்கள் மறந்துவிடவில்லை என்ற விடயத்தையும் அத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் அக்காலத்தில் நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரையுமே அரவணைத்துச் செல்ல வேண்டும் அதுவே ஜனநாயக முறைமையும் கூட. ஆனால் இந்தவிடயம் புறந்தள்ளப்பட்டமையின் விபரீதம் இன்று ஆதிக்கத்தில் இருக்கும் அரசின் எதிர்கால அரசியல் உறுதிப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மேற்படி விடயங்களை செய்து கொள்ளாது குற்றமிழைத்துள்ளனர், அவர்கள் விடயத்தில் தவறுகள் இருக்கின்றது என்ற கருத்துக்களை முன்வைப்பது போன்ற விடயங்களில் மக்களுக்கு அவ்வளவா உடன்பாடுகள் இல்லையென்றே கூறலாம்.
ஒரு சிறந்த ஆட்சி இருந்திருந்தால் அதனை வழி நடத்துபவர் அல்லது தலைமை தாங்குபவர் ஏன் குற்றமிழகை;கும் நபர்களை தமது ஆட்சிப் பங்காளர்களாகவும், அமைச்சர்களாகவும் வைத்திருந்தார் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது குற்றமிழைத்தவர்கள் என்று சொல்லும் நபர்களை ஓரங்கட்டி விட்டு அல்லது அவர்களை அப்பதவிகளில் இருந்து விலக்கி விட்டு நல்லவர்களை உள்வாங்கியிருந்தால் தற்போதைய ஆபத்தான நிலைமை இந்த அரசிற்கு ஏற்பட்டிருக்காது என்றும் கட்சித் தாவல்கள் இடம் பெற்றிருக்காது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் மக்கள் சிறந்த அரசியல் தலைமைகளையும், தமது நலன்களை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்தும் தலைமைகையே விரும்புகின்றனர். இது உலகில் எல்லா நாடுகளிலுமே உள்ள விடயமாகும். ஆனால் மேற்படி நிலைமைகளில் இருந்து தவறுபவர்களை மக்கள் விரம்பமாட்டார்கள் என்பதும் யதார்த்தமே.


.jpg)
Post A Comment:
0 comments: