எதிரணி வெற்றிபெற்றால் அந்தபக்கம் பாய்கின்ற முதலாவது ஆளாக ஹிஸ்புல்லா இருப்பார் - அப்துர் ரஹ்மான்

Share it:
ad
இக்கட்டான தருணங்களில் கூட நமது மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

நடைபெறப்போகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் யதார்த்தங்களுக்கும், உண்மைகளுக்கும் புறம்பான பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறி தனது வழமையான பாணியில் மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார்.

முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வரும் பொது பல சேன போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வெண்டும் எனத் தெரிவித்துள்ளது மாத்திரமின்றி பொது வேட்டபாளரான மைத்திரி அவர்கள் படுதோல்வி அடையப்போவதாகவும் கூறி வருகிறார்.

இப்போது தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலை மாற்றம் எதை நோக்கியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன வேறு பாடுகளுக்கெல்லாம் அப்பால் நாட்டுமக்கள் எல்லோருமே எப்படியான மாற்றம் ஒன்றுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதும்தெரியும்.

யுத்தத்தின் பின்னரான இலங்கை சகல இன மக்களுக்குமான விடிவையும், சுபீட்சத்தையும், சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வையும் கொண்ட ஒன்றாக அமையும் என எதிர்பார்த்த மக்கள் பாரிய ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்தவுக்கும், அவரது குடும்பத்திற்கும் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களுக்கும் மாத்திரமே சுபீட்சமும், ஆடம்பர வாழ்வும் கிடைத்திருக்கிறது.

சாதாரணமாக வாழ்ந்த மக்கள் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகளாக மாறிவருகிறார்கள். சட்டமும் ஒழுங்கும் சிதைக்கப்பட்டிருக்கிறது. சமாதான சக வாழ்வுக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரமும் ஊடக மற்றும் கருத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகின்றன. மீள முடியாத கடன் சுமைக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தின் தவறான வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அரங்கில் நம் நாட்டை படுமோசமாக தனிமைப்படுத்தி வருகிறது.

ஜனநாயக விழுமியங்களுக்கும் மக்களின் விருப்புக்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தனிநபர் சர்வதிகார ஆட்சி பலப்பட்டுவருகிறது.

இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இந்நாட்டின் எதிர்காலம் இருண்டதாகிவிடும் என்ற கவலையும் அக்கறையும்தான் இன்று ஒரு ஆட்சிமுறை மாற்றத்தைநோக்கி அத்தனை பேரையும் அணி திரளச் செய்திருக்கின்றது.

அந்த வகையில்தான் சிங்கள தமிழ் மக்களோடு இணைந்து, இந்த தேசப்பற்று மிக்க பங்களிப்பை வழங்குவதற்கு முஸ்லிம்களும் அணிதிரளத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதுமே அரசாங்கத்தின் முகவர்களாகத் தொழிற்படும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை இந்தநிலைமை கவலைகொள்ளச் செய்திருக்கின்றது. எனவேதான் இவர் மக்களை ஏமாற்றுக் இவ்வாறான கதைகளை சொல்லத் தொடங்கியிருக்கின்றார். இவர்களின் பொறுப்பற்ற, சுயநலமிக்க கருத்துக்களைமுஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்களின் கடந்த கால வரலாறு மக்களுக்கு நன்கு தெரியும்.

பொது பல சேனவுக்கு பாடம் புகட்ட வேண்டுமெனில் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைக்கூறும் ஹிஸ்புல்லாஹ் யார் என்பதும் நமக்குத்தெரியும்.

முஸ்லிம்களின் பள்ளிவால்கள் மீது மேற் கொள்ளப்பட்டதாக்குதல்களில் முதலாவதாக தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்ட நேரம் முஸ்லிம்கள் வேதனையிலும் அதிர்ச்சியிலும் உறைந்திருந்த வேளையில் இவர் செய்த துரோகத்தனம் மறக்கப்பட முடியாத ஒன்று. "தம்புள்ள பள்ளி வாயலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை அத்தனையும் பொய்ப்பிரச்சாரமாகும்" என ஊடகங்களுக்குகருத்துத் தெரிவித்தவர்தான் இவர். மேலும், "இது வெறும் தகரத்தால் கட்டப்பட்ட குடிசையேயன்றி பள்ளிவாயல் அல்ல" என பொது பல சேனவின் தலைவர் சொன்னபோது அதை எவ்வித தயக்கமுமின்றி ஆமோதித்து முஸ்லிம்களின் பள்ளிவாயல்களின் கண்ணியத்தை அவமதித்தவரும் இந்த ஹிஸ்புல்லாஹ்தான்.

அதேபோல பொது பல சேனவின் தாக்குதல்கள் உக்கிரமடைந்திருந்த வேளையில் இவரை நோக்கி பாராளுமன்றத்தில் கேள்வியொன்று எழுப்பப்பட்டது. "முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்" என கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குத் பதிலளிக்காமல் விழி பிதுங்கி நின்றது மாத்திரமின்றி தனது மௌனத்தின் மூலம் பொது பல சேனவை இந்த அரசையும், பாதுகாத்தவர்தான் இவர். அதேபோல அளுத்கமவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டவேளையில் அங்கு கருத்துத் தெரிவிக்காமல் ஓடி ஒளிந்தவர்களில் இவரும் ஒருவர்.

இந்த வரலாற்றைக் கொண்ட ஹிஸ்புல்லாஹ்தான், இப்போது ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலமாகவே பொது பல சேனவுக்கு சாட்டையடி கொடுக்க முடியும் என முஸ்லிம் சமூகத்திற்கு ஆலோசனை வழங்க கிளம்பியிருக்கிறார்.

மேலும் பொது வேட்பாளர் மைத்திரி அவர்கள் படுதோல்வி அடைவார் என்பதனால் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கத் தேவையில்லை எனவும் ஹிஸ்புல்லா கூறிவருகின்றார். ஆட்சிமுறை மாற்றம் ஒன்றுக்கான பொது எதிரணி வெற்றி பெறுகின்றபோது அந்த அணியின் பக்கம் பாய்கின்ற முதலாவது ஆளாகவும் ஹிஸ்புல்லாதான் இருப்பார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏனனில், எந்தக் கொள்கையுமின்றி பதவிகளுக்காகவும் வசதிவாயப்புக்களுக்காகவுமே கட்சி தாவுகின்ற பழக்கத்தினைக் கொண்டவர்தான் இந்த ஹிஸ்புல்லாஹ் என்பது நாம் கண்டவரலாறாகும்.

எனவே, இவர் போன்றவர்களின் நயவஞ்சகத்தனமான, சுயநலமிக்க கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கிலெடுக்கப் போவதுமில்லை; கணக்கிலெடுக்கத்தேவையுமில்லை"
Share it:

Post A Comment:

0 comments: