இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்துவிட்டனர். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவனான நான், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்களின் விருப்பத்தை அறியப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் இந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாம் எவரும் மறந்துவிடவில்லை. தற்போது ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். இது முக்கியமான நேரமிது. கடந்தகால கால அனுபவங்களை வைத்துக்கொண்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென முஸ்லிம்கள் தீர்மானித்துவிட்டனர்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஜனாதிபதி தேர்தலில் எவரை ஆதரிக்கப்பபோகிறது என்ற எதிர்பார்ப்பு நாடுபூராகவும் பரவியுள்ளது. இந்நிலையில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை நான் சந்தித்தேன். இதன்போது முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானித்து விட்டார்கள் என்பதை ரவூப் ஹக்கீமுக்கு சுட்டிக்காட்டினேன். பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்புக்கு இசைந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறினேன்.
இதன்போது ஜப்னா முஸ்லிம் இணையமானது, முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்குமென தீர்மானித்தால் உங்களின் நிலைப்பாடு என்னவென்று ஹரீஸிடம் வினா தொடுத்தபோது,
எனக்கு முதுகெலும்பு உள்ளது. துணிச்சலும் உள்ளது. எனது துணிச்சலை பல தடவைகள் கட்சியின் போராளிகள் நன்கறிந்துள்ளனர். அப்போது எனது தீர்மானத்தை அறிவிப்பேன் என்றார்.
மேலும் அதிகப்பட்ச முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற கட்சி என்ற வகையில், அதிகப்பட்ச முஸ்லிம்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பதை நான் கவனத்திற்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்ட ஹரீஸிடம், 'முழுமையான கரையோர மாவட்டம்' தர அரசாங்கம் ஒத்துக்கொண்டால் என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டபோது, தற்போதுள்ள நாட்டுச் சுழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸுடைய கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்பவில்லை என்றார் ஹரீஸ்.
அத்துடன் கட்சி முக்கியஸ்தர்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும், ஜனாதிபதி வேட்பாளருக்கான ஒருமித்த ஆதரவு தளத்தை கட்டியெழுப்பவும் தம்மை முழுமையாக ஆர்ப்பணித்து செயற்பட தயாராகவிருப்பதாகவும் ஹரீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் கூறினார்.


.jpg)
Post A Comment:
0 comments: