ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு இன்னும் மகிந்த ராஜபக்ஷவிற்கே - தயான் ஜயதிலக்க

Share it:
ad
பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியில் இறங்கியுள்ள போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அதிகமான வாய்ப்பு இன்னும் மகிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக அரசியல் ஆய்வாளரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

கிராமிய, விவசாய அடிப்படையை கொண்ட, மக்களுக்கு மிக நெருக்கமான, நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதால், ஜனாதிபதித் தேர்தல் பலத்த போட்டியான ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபாலவின் வருகை ஆக்கபூர்வமான ஒன்று. எனினும் அவர் வெற்றி பெற்று ராஜபக்ஷவை தோற்கடிப்பார் என்று கருதி விட முடியாது.  எனினும் இங்கு பலத்த போட்டி உள்ளது. எப்போதும் இருக்காத அரசியல் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பின்னால் சர்வதேச சதித்திட்டம் இருப்பதாக அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எவ்விதமான சாட்சியங்களும் இல்லை.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்ததமையானது சர்வதேச சதித்திட்டங்கள் பின்தள்ள காரணமாக அமைந்துள்ளது எனவும் தயான ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் ஒப்பிடும் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் இயலுமை காணப்படுகின்ற போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிசேன சிறந்த அரசியல் பாத்திரத்தை கொண்டவர் என்பதால், பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும். அவரது வருகை சிறந்த நடவடிக்கையாக இருந்தாலும் அவர் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால், அவர் தன்னை முடிச்சுக்குள் சிக்க வைத்து கொண்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக தான் நன்கு அறிந்த பெரும்பான்மை விவசாய மக்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு அமைவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்காது 100 நாட்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற வேலைத்திட்டத்தை முன்வைத்தமை துரதிஷ்டவசமானது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று நாட்டு மக்களின் பெரும்பாலானவர்கள் கோருகின்றனர் என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஒரு விதத்தில் முகமூடி அணிந்து கொண்ட பாத்திரங்கள். அவர்களின் முகத்தை மாத்திரம் பார்த்து மக்களால் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அத்துடன் ஜனாதிபதித் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால், அவரை போர் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளமை, மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமானது.

இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களை, தொடர்ந்தும் இலங்கையில் ஆட்சியில் வைத்திருக்க வேண்டிய தேவைக்காக உலகத் தமிழர் பேரவை இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனவும் தயான் ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைய கூடிய வாய்ப்புகள் அதிகம் என சிரேஷ்ட ஊடகவியலாளரான விக்டர் ஐவன் அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியிருந்தார்.
Share it:

Post A Comment:

0 comments: