-ஸாதிக் ஷிஹான்-
பிராந்திய நாடுகளின் சவால்களை முறியடித்து பாதுகாப்பை பலப்படுத்தவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடவும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புப் புரிந்துணர்வு அவசியமென பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிகள் கலந்து கொண்ட “சாசியான்” (SASEAN) உயர் மட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகவும் பிரதான பேச்சாளராகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பிராந்தியத்திலுள்ள நாடுகளில் காணப்படும் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை வெளிப்படையாக கருத்து பரிமாறிக் கொள்ள கொழும்பில் ஆரம்பமான இந்த பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிகளின் மாநாடு சந்தர்ப்பமாக அமையும்.
தெற்கு மற்றும் தென் கிழக்கு பிராந்தி யத்திலுள்ள சகல நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார அபிவிருத்திக்கு சமாதானம் மற்றும் ஸ்தரத்தன்மையை தொடர்ந்தும் பேணுவது அவசியம். பிராந்திய ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் தேசிய பாதுகாப்பு முதன்மை இடத்தை வகிக்கின்றது. முக்கியமாக பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு வேறுபாடு இன்றி இருப்பதன் மூலம் அழுத்தங்களை குறைக்க முடியும்.
தெற்கு மற்றும் தென் கிழக்கு பிராந்தியத் திலுள்ள பல நாடுகளில் கடந்த சில தசாப்தங்களாக போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாதம் வியாபித்து காணப்படுகின்றது. எமது பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இவற்றை இல்லாதொழிப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக இராணுவ ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வு தகவல் பரிமாற்றமும் மிக அவசியம்.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை முறியடிக்க நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, கூட்டு பயிற்சிகள், அனுபவங்களை பரிமாறுதல் போன்றன முக்கியமானதாகும். எனவே, இவற்றின் மூலம் பிராந்திய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும்.
கடந்த 30 ஆண்டுகள் எமது அனுபவத்தை பார்த்தால் நாம் பல்வேறு விதத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். புலிகள் இயக்கம் பாரிய சர்வதேச வலையமைப்புக்களைக் கொண்ட மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைப்பு. சட்டவிரோதமாக பணம் சேகரித்து ஆயுத கொள்வனவு போதைவஸ்து கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தனர். இதனை வெவ்வேறு பெயர்களில் சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலிகளின் கப்பல்கள் மூலம் நாம் அடையாளங்கண்டு கொண்டோம். சர்வதேச வலையமைப்பை கொண்ட புலிகள் ஆசியா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் தம்மை மையப்ப டுத்தி செயற்பட்டு வந்தனர். இவர்களது நடவடிக்கைகள் எமக்கு மாத்தரமன்றி பிராந்தியத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. பிராந்திய ஒத்துழைப்பு இல்லாமையினால் இவற்றை முறியடிக்க பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன் மையை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.
பிராந்தியத்திலுள்ள நாடுகளில் காணப்படும் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் கருத்து பரிமாறிக் கொள்ளவும் இதன் ஊடாக பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி களின் மாநாடு சந்தர்ப்பமாக அமையும்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன், என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனடோலி அன்டோனோவ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை தெற்காசியாவிலுள்ள 8 நாடுகள் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 10 நாடுகள் என்ற அடிப்படையில் 18 நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதற்கு மேலதிகமாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர் களாகவும் அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் விசேட பிரதிநிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments: