முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிமை கோரும் பிரதமர் - மௌனித்து நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ்

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

1
மன்னன் சொலமன் காலத்தில் 
ஒரு புகழ் பெற்ற வழக்கு!
ஒரு பிள்ளைக்கு இரு தாய்மார்
உரிமை கோறி நிற்க 
பிள்ளையை இரண்டாகப் 
பிளந்து பங்கு போட 
மன்னன் வாளை ஓங்கி 
உண்மையான தாயைக்
கண்டு கொண்ட கதை அது 
இதனால் இன்றும் 
இது பெரும் வரலாற்றுக் 
கதையாகி அவ்வப்போது
கொடிகட்டிப் பறக்கின்றது!
இது கதை நம்பர் வன் 

2
சுhனாமிப் பேரழிவுக்குப் பின் 
கருக்கொடித் தீவு -அக்கரைப்பற்று 
நீதி மன்றத்தில் முன் விசித்திரமான 
இதே மாதிரி ஒரு கதை 
ஒரு குழந்தைக்கு இரு 
பெற்றோர் உரிமை கோரிய 
புதுக் கதை அது நம்பர் டூ கதை!

3
கடந்த சில தினங்களுக்கு 
முன்னர் ஓரு யாசகனும் 
ஒரு தாயும் ஒரு சிறுவனுக்காக 
உரிமை கோரி நீதி மன்றம் 
போயிருக்கின்றார்கள்
அதன் தீர்ப்புத் தொடர்பாக 
இன்னும் முடிவாக அதற்கும் 
டிஎன்ஏ பரீட்சை என்று தகவல்!
இது கதை நம்பர் திரீ!

4
இப்போது நம்பர் போர்க் கதை!
அது ஒரு பெரும் கதை 
ஆனால் உண்மையான 
உரிமையாளர்கள் இந்த கட்டுரை 
எழுதப்படுகின்ற நேரம் வரை அதற்கு
உரிமை கோரமல் இருக்கின்றார்கள்?
இதனை ஒரு புகழ் பெற்ற இணையத்திற்கு 
ஒரு குறிப்பாக நாம் சொல்லி இருப்பதால் 
சில வேளை நமது வார ஏட்டில் 
இந்தக் கட்டுரை வருகின்ற நேரத்தில்;
ஏதுவும் நடந்திருக்கலாம்.
இனி விவகாரத்திற்கு வருவோம்.

அண்மையிலிருந்து நாம் ஊடகங்கள் வாயிலாக மு.கா.வை இலக்கு வைத்துக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றோம். எமது இந்த விமர்சனங்களினால் புனித உம்ராவுக்கு மக்கா போன மு.கா. தலைவருக்குக் கூட நிம்மதியாக அங்கு   இருக்க முடியவில்லை. எனவே எமது செய்திகளுக்கு அவரும் அதிரடியாக அங்கிருந்தே இணையத்தளங்கள் வாயிலாக பதில் வழங்கி இருந்தார். இது பழைய கதை!

நாம் அண்மைக் காலமாக ஏன் எமது விமர்சனங்களை அதிகரித்திருக்கின்றோம் என்பதனை மு.கா. தொண்டர்களும் முஸ்லிம் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசியில் தீர்க்கமான ஒரு நேரமிது. எனவே அரசியல் தலைமைகள் தீர்மானங்களை மேற் கொள்கின்ற நேரங்களில் சில நினைவூட்டங்களையும், அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும் என்பதனால் தான் இந்த நடவடிக்கைகள். பெரியவர் அஸ்ரப் தோற்றுவித்த மு.காவில் எமக்கும் உடன்பாடுகள் நெருக்கங்கள் முன்பு இருந்தாலும் மு.கா.வின் அண்மைகால சந்தர்ப்பவாத நடவடிக்கைளுடன் ஒத்துப்போக முடியாதிருப்பதால் தான் இந்த விமர்சனங்கள்.

அதனைச் சந்தியில் நின்று செய்வதைவிட இவ்வாறான ஊடகங்கள் வாயிலாக இதனை நாம் மேற்கொண்டு வருகின்றோம். என்றாவது ஒரு நாள் அஸ்ரப் காலத்து மு.கா. மீண்டும் மலருமான என்றுதான் நாமும் எதிர் பார்க்கின்றோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டே சமகால  விமர்சனங்கள். எமது நகர்வுகள் மு.கா. ஆதரவாளர்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவிப்பதும் எமக்குப் புரிகின்றது.  அங்கு இந்த விமர்சனங்கள் தொடர்பாகப் பேசப்படுகின்ற செய்திகள் தொடர்பாகவும் எமக்குத் தொடர்ச்சியாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எமது இப்படியான விமர்சனங்களுக்கு மு.கா. தலைமை சார்பிலும் தனி மனித விசுவாசிகளிடமிருந்தும் பதலிகளும் அவ்வப்போது தரப்பட்டுக்  கொண்டிருக்கின்றது. 

நேற்றுப் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம் எமக்கு மீண்டும் ஒரு விமர்சனத்திற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றது. தர்கா நகர் அலுத்கம சம்பவத்தின் போது இதே பிரதமர் அங்கு பிரச்சனைகளை ஆரம்பித்தவர்களே முஸ்லிம்தான் என்ற ஒரு அபாண்டத்தை சொன்ன போதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக  இருந்தனர்.  பின்னர் ஹசன் அலி போன்றவர்கள் இதற்குச் சாக்குப் போக்கு சொல்லித் தப்பிக் கொள்ளவும் முனைந்தது முஸ்லிம்களுக்கு நினைவிருக்கலாம். 

அது எப்படிப்போனாலும் இப்போது அதே பாராளுமன்றத்தில் இதே பிரதமர் தி.மு.ஜயரத்ன  முஸ்லிம் காங்கிரசின் தோற்றுவிப்பாளன் நான் தான் என்று பகிரங்கமாகப் பேசிய இருக்கின்றார்.  இன்று மு.கா. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பத்திலும் ஊமைகளாக அங்கு இருந்திருக்கின்றார்களே! இதனை மு.கா. தொண்டர்களால்  எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? எனபது தான் எமது கேள்வி?

அப்படியானால் தி.மு.ஜயரத்தன என்பவர் தான் இதன் பின்னர் மு.கா. ஸ்தாபக் தலைவர்? என்று எதிர்காலச் சந்ததியினர் கருதிக் கொள்ளத் தாராளமாக  இடமிருக்கின்றது. கதை விட்டிருப்பவர் இந்த நாட்டுப் பிரதமர் அல்லவா? எம்மைப் பொறுதத் வரை இது அஸ்ரபை அவமாதிக்கின்ற ஒரு கூற்று. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அப்படிப் பேசும் போது மௌமாக இருந்து மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு அங்கிகாரம் வங்கி இருப்பது தான் இதிலுள்;ள மிகப் பெரிய வேடிக்கை! வேதனை.! 

அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்திருக்காவிட்டாலும் ஊடகங்கள் மூலம் உடன் பதில் கொடுத்திருக்கலாமே என்று தான் நாம் அவர்களிடத்தில் கோபப்படுகின்றோம். ஒரு புளுகுக்கு உயிர் கொடுத்து அஸ்ரபுக்குத் துரோகம் பண்ணி விடாதீர்கள். எமது இந்த செய்தியின் பின்னர் இதற்கும் மு.கா.தரப்பில் ஏதும் காரணங்கள் சொல்லப்பட்டாலும். மு.கா. தரப்பில் இவ்வறான பெரும் தவறுகள் விடப்படும் போது எப்படிப் பார்வையாளர்களாக இருக்க முடியும் என்பதனால்தான் எமது இந்த விமர்சனங்கள்.! 

மு.கா.  வரலாற்று ஆரம்பம் தற்போதய தலைவர் ஹக்கீமுக்குக் கூட அனுபவ ரீதியில் தெரிந்திருக்கா விட்டாலும், செயலாளர் ஹசன் அலிக்கு இது நன்று தெரிந்த கதைதானே? அப்படியானால் அஸ்ரப் போட்ட பிச்சையில்  அரசியல் பண்ணுகின்ற இவர்கள் நடவடிக்கைகளை மு.கா. ஆhரவாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டால் அது தவறா? காத்தான்குடியிலும், ஒராபிபஷாவிலும் நடந்த கூட்டங்களுக்கு தி.மு வந்திருந்தாரா. அல்லது அஸ்ரப் உயிர் வாழ்ந்த நாட்களில் எப்போதாவது தி.மு. சொல்லித்தான் நான் மு.காவைத் துவங்கினேன் என்று எப்போதாவது சொல்லி இருந்தார என்றும் நாம் கேட்கின்றோம்.!

அப்படியானால் இந்த தி.மு.வுக்கு எப்படி மு.கா.வில்  பங்கு என்ற கதையையும் தெரியாதவர்களுக்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தி.மு. அப்போது கம்பளை சுதந்திரக் கட்சி அமைப்பாளர். 1988ல் நடந்த முதல் மாகாண சபைத் தேர்தலை  சுதந்திரக் கட்சி பகிஸ்கரித்து. அந்தக் கால கட்டத்தில்  அஸ்ரப் தனது மனைவி பேரியலின் கம்பளையில் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு தி.மு.வுடன் ஒரு உறவு. இதனால் அஸ்ரபின் வேண்டுகோளுக்கு ஏற்ப தி.மு. தனது ஒரிரு அதரவாளர்களை மு.கா. பட்டியலில் அன்று தேர்தல் களத்தில் இறக்கி இருந்தார் தி.மு. இந்த விவகாரம் அக்கால கட்டத்தில் கட்டுரையாளனுக்கு மு.கா. தலைவர் அஸ்ரபுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்ததால் நன்கு தெரிந்த விடயம். இரு

தி.மு. நிறுத்திய வேட்பாளர்கள் எவருமே வெற்றி பெறவில்லை. இதனை வைத்துக் கொண்டு மு.காவுக்கு உரிமை கோரி அஸ்ரபை அவமதிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் மு.கா. மௌனத்திற்கு என்ன பதில் தரப்போகின்றது? 

அந்த விவகாரம் அப்படி இருக்க தமக்கு சமூகத்தில் ஏற்பட்டடிருக்கின்ற பின்னடைவைச் சரி செய்கின்ற பல நடவடிக்கைகளை மு.கா. தலைமை தற்போது மேற் கொண்டுவருவதைப் பார்க்க முடிகின்றது. நாம் இனிப் பதவிகளுக்கு ஆசைப்படாமல் முஸ்லிம்களின் நலன்களை மையமாகக் கொண்டே எதிர்வரும் காலங்களில் தீர்மானங்களை எடுப்போம் - நடப்போம், என்று மு.கா. தலைவர் தற்போது கிழக்கில் பரப்புரைகளைத் துவங்கி இருக்கின்றார். 

இறுதிவரை பதவிகளுக்குப் பின்னால் ஓடித் திரிந்து விட்டு, முஸ்லிம்களுக்கு தொந்தரவுகளைத் துன்பங்களை ஆளும் தரப்புக் கையாட்கள் செய்து வந்த நேரத்தில் அரியாசனையில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு இப்போது மட்டும் பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று மு.கா. ஏன் பேசுகின்றது என்பதனை இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தானும் கட்சியும் சமூகத்தின் கோபப் பார்வையில் சிக்கி இருப்பது தலைவருக்கு இப்போது புரிகின்றது. இதிலிருந்து தப்பிக் கொண்டு அதன் மூலம் முஸ்லிம் வாக்குகளை மீண்டும் கொள்ளையடித்து அமைச்சுப் பதவிகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியிலேயே இப்போது மு.கா. தலைமை இறங்கி இருக்கின்றது.

அடுத்து மு.கா.தலைவரின் கட்டுப் பாட்டில் இன்று அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. எனவே பதவி பட்டங்களுக்கு இனியும் ஆசைப்பட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை தலைவரால் கொடுக்க முடியாது என்பது எமது வாதம். எனவேதானே தலைவருக்குத் தெரியாமல் பெரியவரிடத்தில் போய் பசீர் அமைச்சுப் பதவி பெற்று வந்தார். 

இதற்கு தலைவரால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஓரிரு அரசியல் கூட்டத்தில் சம்பிரதாயத்திற்காக திட்டுவதைத் தவிர, பசீர் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை தலைவரால் ஒரு போதும் எடுக்க முடியாது! அப்படி இருக்கும் போது என்ன இப்போது மட்டும் பதவிக்கு ஆசைப்பட மாட்டோம் என்று உறுதிமொழி வேறு கொடுக்கின்றார்களே இவர்கள்.? இது வேடிக்கையாகத் தெரியவில்லையா?

இதன் பின்னர் பதவிகளுக்கு ஆசைப்பட மாட்டோம் என்று வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு  இதுவரை நாம் பதவி பட்டங்களுக்காக ஓடித் திரிந்தோம் என்பதுதானே இவர்கள் சமூகத்திற்குச் சொல்ல வரும் செய்தி. இவர்களிடம் நாம் கேட்பது அப்படியானால் இது வரையும் முஸ்லிம்களின் நலன்களில் நீங்கள் மண்ணை வாறிப் போட்டுத்தானே இந்தப் பயணத்தைப்போய் இருக்கின்றீர்கள். இனியும் அப்படிச் செய்யமாட்டோம் என்று நீங்கள் கூறினால் அதனை முஸ்லிம்கள் அப்படியே நம்பிக் கொண்டு-ஏற்றுக்  கொண்டு அடுத்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்து உங்களை  வெற்றி பெறச் செய்ய வேண்டுமா?

என்ன இது ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி பயணத்திற்கு மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கான அழைப்பா? இனியும் தப்புப் பண்ண மாட்டோம் என்ற இந்தக் கதை எனக் கேட்கத் தோன்றுகின்றது. இந்த நாட்டு முஸ்லிம் சமூகம்  மாங்காய் மடையர்களாக இனியும்  வாழ்ந்தே தீருவது என்று முடிவெடுத்தால் உங்கள் விருப்பங்களும் நடந்தேர நிறையவே  வாய்ப்புக்கள் இருக்கின்றது.

எமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது அரசு இதுவரை எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறை செய்யவில்லை என்று கடைசி மூச்சுவாங்குகின்ற இந்த  நேரத்தில் மு.கா.முக்கியஸ்தர்கள்  சமூகத்தின் முன் வந்து இப்போது ஒப்பாரி வைப்பது எதற்காக? உரிமைகளை வென்றெடுக்க நாடாளுமன்றம் போக வாக்குக் கேட்டீர்களே இப்போது ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வந்து கடைசிக் கட்டத்தில் கைவிரிக்கின்றீர்களே!

இப்போது சமுகத்தின் நலன்கள் என்று பேசும் நீங்கள் அன்று கட்சி பிளவு படுவதைத் தடுப்பதற்காக ஆளும் தரப்பிற்கு மாறினோம் என்றவர்கள் தானே. தேர்தல் வந்து விட்டால்தால்  கண் திறக்கின்றதோ? 2016ல் தான்  மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் என்ற அறிவிப்பு அதிரடியாக வந்து விட்டால் நிச்சயம் உங்கள் சுருதி மாறிவிடும் என்பது இந்த சமூகத்திற்குத் நன்றாகத் தெரியும்.

ஆளும் தரப்பை ஆதரிக்க கிழக்கு மக்கிளிடம் நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ள கல்முனைளை மையப்படுத்திய முஸ்லிம் கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.கா. முன்வைத்தி போது ஆளும் தரப்பு கோப்பை குப்பையில் பேட்டெறிந்தது மட்டுமல்லாது. எதிர்கட்சியும் அந்த கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருக்கின்றது. எனவே வெறும்கையுடன் திரும்பி வந்திருக்கின்றார் மு.கா.செயலாளர்.எனவே இரண்டும் கெட்ட நிலையில் தற்போது. மு.கா.

ஜனாதிபதித் தேர்தலில்; மு.கா. என்ன செய்யும்?  ஹக்கீம் எப்படி நடந்து கொள்ளப் போகின்றார்? 

என்ற செய்தி முஸ்லிம்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டாலும் அந்த விவகாரத்தில் எந்தப் பரபரப்போ ஆர்வமோ காட்ட வேண்டிய அவசியம் எவருக்கும் தேவையில்லை என்பது எமது கருத்து. இந்த விடயத்தில் எந்த சஸ்பென்சும் கிடையாது.

நிகழப் போவதும் நிகழ்ந்திருப்பதும் இதுதான்.! வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிரான பிரதான வேட்பாளர் ரணில்தான் என்பது தற்போது பெரும்பாலும் உறுதியாகி இருக்கின்றது. பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கு ரணில் இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரணிலுக்கு எந்தவகையிலும் இந்தத் தேர்தலில் ராஜபக்சவுடன் தாக்குப் பிடிக்க முடியாது. 

ரணில் முதல் சுற்று முதல் ரவுண்டிலேயே நொக்கவுட் என்பது நாம் செல்வது போல் ரவூப் ஹக்கீமுக்கும் தெரியும். அந்தவகையில் வலுவான ராஜபக்சவை ஹக்கீம் ஆதரிப்பது தன்னலத்துக்கான செயல்பாடாக  இருந்தாலும்,  சமூக நலனுக்கான முடிவு என்ற பேரில் வரப்போகும் மு.கா. முடிவில் எமக்கும் உடன் பாடு இருக்கின்றது.

ஆனால் இந்த மஹிந்தவை ஆதரிப்பது என்ற தனிப்பட்ட விருப்புக்கு நிகழ்ச்சி நிரலுக்கு சமூக நலன் என்ற முத்திரையை பதிக்கப்போகும் இடத்தில் தலைவருக்கு சிக்கல் ஒன்று ஏற்படும். முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த கால நெருக்கடிகளின் போது ஆளும் தரப்பு நடந்து கொண்ட முறையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் கெட்டுப்போய் இருக்கின்றது. 

தனித்துவத் தலைவருக்கு இது நன்றாகத் தெரியும். என்றாலும் தோற்றுப் போகின்ற ரணிலை ஆதரித்து அவமானப்பட்டுக் கொள்வதை விட கட்சிக்குள்ளும் சமூகத்தின் மத்தியிலும் எப்படி  மஹிந்த ஆதரவு என்ற தனது நிலைப்பாட்டைச் சந்தைப்படுத்துவதில் தான் தலைவருக்கு நெருக்கடி இருக்கின்றது.

மு.கா.வினதும் தலைவரினதும் இமேஜ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நன்றாகக் கெட்டுப்போய் இருப்பதால் தயக்கத்துடன் தான் இதனைக் கள்ளக் கடத்தல் பொருளை சந்தைப்படுத்துவது போல்  மஹிந்த ஆதரவு விவகாரத்தை கையாள வேண்டி இருக்கின்றது. ஊடகக்காரர்களை ஆள்வைத்துத் தட்டுவது போல்?  ஏற்கெனவே தீர்மானித்த விவகாரத்தை  தானாக எடுக்காது அதற்கு ஆள்வைத்துக் கட்சித் தீர்மானம் என்ற பேரில் பிறப்புச்சான்றிதழ் வழங்கும் உத்தியை ஜனாதிபதித் தேர்தலில் தலைவர் கையாள வேண்டி இருக்கும்- இருக்கின்றது. இதற்கு வேறு....! 

சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு என்றெல்லாம் வார்த்தைகளைச் சேர்த்து தத்துவம் வேறு பேசுவார்கள்.

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் பொது வேட்பாளர் என்று உறுதியானால் நிச்சயமாக மு.கா.தலைவர் அவரை துணிந்து ஆதரிக்க இடமிருக்கின்றது. நாடே எதிர்பார்ப்பது போல் வலுவான ராஜபக்சவுடன் மோதக்கூடிய ஒரே ஆள் சந்திரிக்கா மட்டும் தான். இது விடயத்திலும் ஹக்கீமின் நிலைப்பாடு யதார்த்தமானது.

ராஜபக்ச ஆதரவுக்கு கட்சி முடிவு என்ற முத்திரை குத்தும் பணிதான் தற்போது மு.கா.இந்தத் தேர்தலில் செய்ய எஞ்சி இருக்கும் ஒரே பணி என்பதனை நாம் பொறுப்புடன் முஸ்லிம் சமூகத்திற்கு அறியத் தருகின்றோம். எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டாயிற்று. அறிவிப்பதில்தான் அவர்களுக்கு அச்சம்-பயம் எனவே தீர்மானம் எடுக்க வில்லை என்பது எல்லாம் வெறும் அரசியல் விளையாட்டுக்கள். பொறுத்திருந்து பாருங்கள் நமது கதையின் நம்பகத் தன்மையை.! 

கடந்த இரு தேர்தல்களிலும் ஆதரிக்கின்றோம்..! ஆதரிக்கின்றோம்..! என்று ராஜபக்சவிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு யானையின் முதுகில் ஏறியவர்கள் பதவிகளுக்காக மட்டும் ராஜபக்சவிடம் போய் கை நீட்டி நிற்கின்ற வேலையை இந்த முறையும் தலைவரால் செய்ய முடியாது.
Share it:

Post A Comment:

0 comments: