''மூன்றாம் பிரசவ சிக்கல்'' அரசியல் வட்டாரங்களில் அதிரடித் திருப்பங்கள்

Share it:
ad
(நஜீப் பின் கபூர்)

குழந்தை பெற்றெடுத்த எந்தத் தாயைக் கோட்டலும் பிரசவத்தின் போது தான் அடைந்த வேதனையைத்தான் அவள் சொல்லிக் கொண்டிருப்பாள். தான் ஈன்றெத்த குழந்தை அவள் கரங்களில் கிடைத்த அடுத்த கனமே அந்த பிரசவ வேதனைகூட அவளுக்கு ஒரு சுகமாக தெரிய ஆரம்பித்து விடும்.

ஆண்களுக்குப் பிரசவ வேதனை தொடர்க எழுதவும் பேசவும் முடியும். ஆனால் அனுபவ ரீதியில் அதனைக் வர்னிக்க முடியாது. இந்தவகையில் நமது நாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷ தற்போது தனது மூன்றாவது பிரசவத்திற்குத் தன்னை தயார் படுத்தி நிற்கின்ற நேரத்தில் வில்லனாக வந்து நின்றார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. பிறப்பு சட்ட ரீதியற்றது குழந்தைக்கு உரிமை கோரா ராஜபக்ஷவுக்கு அருகதை கிடையாது என்பது அவருடைய வாதம் - தர்க்கம்.

இதுபற்றி நாம் முன்பொரு முறை நமது வார ஏட்டில் விளக்கமகாக் குறிப்பிட்டிருந்ததால் அதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்து தற்போது இந்த விவகாரத்தில் தனக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க முடியுமா? என்று விடயத்தில் ஆலோசனை வழங்குமாறு அவர் உயர் நீதி மன்றத்தைக் கோரி இருக்கின்றார். இப்போது இந்தத் தலைப்பே நாட்டில் முக்கிய  இசுவாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாளை இதற்கான ஆலோசனை அவருக்குக் கிடைத்து விடும்.

இந்த விவகாரத்தைப் பேசுவதற்க முன்னர் தற்போது கிடைத்திருக்கின்ற சில முக்கியமான தகவல்களை நமது வாசகர்களுடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுவதால் அது பற்றிச் சற்று எமது கவனத்தை  திருப்புவோம்.

இங்கிலாந்தில் வாழும் தனது மகளின் மூன்றாவது பிரசவத்திற்காக சென்றிருந்த சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ இப்போது நாடு திரும்பி இருக்கின்றார். வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் பெரும் ஆர்வமாகச் செயலாற்றிக் கொண்டிருந்த மாதுலுவாவே சோபித்த தேரரும் சில தினங்கள் வெளியில் இருந்து விட்டு அவரும் தற்போது  நாட்டிற்கு வந்திருக்கின்றார்.

எனவே பலமான ராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு சக்தி மிக்க வேட்பாளரைக் களத்திற்குக் கொண்டு வருவதில் இந்த இருவரும் மிகவும் ஆர்வமாக கடந்த சில தினங்களாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றது.
  
கடந்த புதன் கிழமை இந்தப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரணதுங்ஹ பண்டாரநாயக்காவுக்கும், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையே மிகவும் இரகசியமான முறையில் சந்திபபொன்று நடந்திருக்கின்றது.

இந்தச் சந்திப்பில் ரணில் களத்திலிருந்து ஒதுங்கி பொது வேட்பாளர் ஒருவருக்கு இடம் கொடுக்க இணங்கி இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தருகின்றன. இந்தப் பொது வேட்பாளர் ஆளும் தரப்பு முக்கிஸ்தர் ஒருவராக இருக்கக் கூடும் அல்லது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவராக இருப்பார் என்றும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.?

இதன் மூலம் ஜேவிபி. யையும் சமாளித்து ஆளும் தரப்பிலுள்ள பெரும் எண்ணிக்கையான சுதந்திரக் கட்சி முக்கிஸ்தர்களை இந்த அணியில் இணைந்துக் கொள்ள இடமிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜேவிபி தன்னை ஆதரிக்க பின் நிற்பதால் சந்திரிகா இந்தக் காய் நகர்த்தலைச் செய்திருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது. என்றாலும் ரணிலை நம்பித் தீர்மானங்களை எடுக்க முடியுமா என்ற விடயத்தில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. 

ஜேவிபி. யினருக்கு மாதுலுவாவே சோபித தேரர் மீது ஒரு நல்லபிப்பிரயம் இருப்பதால் அவர் ஜேவிபி. யுடன் இந்த விவகாரங்கள் பற்றி தனது கவனத்தைச் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. என்னதான் ஐக்கிய தேசிய கட்சி பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் அதன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பிரச்சார உத்திகளும் மக்கள் மனங்களைச் வென்றதாக இல்லை. 

ஐக்கிய தேசியக் கட்சியில் ஆளுக்கு ஆள் ஒன்றைக் கூறிக் கொண்டிருப்பதாலும், குறிப்பிடுகின்ற படி அந்தக் கட்சிக்குள் நடந்து வருகின்ற ஆதிக்கப் போட்டி இன்னும் முடிந்ததாகத் தெரிய வில்லை.

ரணில் ஒரு நிகழ்ச்சி  நிரலையும் சஜித் மற்றுமொரு ஒரு நிழச்சி நிரலையும் கரு, மங்கள, ரவி போன்ற இன்னும் பலர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் செயலாற்றிக் கொண்டிருப்பதால் அந்தக் கட்சி தனது பலத்தை மக்கள் முன் காட்சிப் படுத்துவது இயலாத காரியமாக இருந்து வருகின்றது. 

எனவே ஜேவிபியை இணைத்துக் கொள்ளாத எதிரணி உப்பில்லாத பண்டமாகத்தான் இருக்கும். எனவே ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளர் என்பதே எதிரணி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்ற முதல் செய்தியாக இருக்க வேண்டும் என்பது மாற்றுக் கருத்துடைய மக்கள் விருப்பமாக இருந்து வருகின்றது.

இதற்கிடையில் ஆளும் தரப்பின் ஒரு முக்கிய பங்காளியாக இருக்கின்ற ஜதிக ஹெல உறுமயக் கட்சிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையேயுள்ள முறன்பாடுகளைக் கலைய பல முயற்சிகள் மேற் கொள்ளபட்டாலும். அது சாத்தியப்படாமல் இருந்து வருகின்றது. தமது கோரிக்கைகளில் எந்த விதமான விட்டுக் கொடுப்பும் கிடையாது. கோரிக்கைகள் நிராகரிக்பட்டால் அதன் விளைவுகளை ராஜபக்ஷ தங்கிக் கொள்ள வேண்டி வரும். 

நாம் ஆளும் தரப்பிலிருந்து வெளியேறுவதைத் தவிர எமக்கு வேறு மார்க்கங்கள் இருப்பதாகத் தெரியவிலை என்று அடித்துக் கூறி இருக்கின்றார் அதுருலியே ரத்ன தேரர். அத்துடன் தாம் ஆளும் தரப்பிலிருந்து  வெளியேரும் போது இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிப்பதற்கு மாபெரும் பேரணி ஒன்றையும் கொழும்பில் நடத்தப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஹெல உறுமய இப்படி வெளியேறினால் சம்பிக்க ரணவக்க ,கம்மன்பில போன்றவர்கள்  தமக்கிருக்கின்ற அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேற வேண்டி வரும். எமக்குக் கிடைக்கின்ற ஒரு தகவலில் படி ஹெல உறுமய அமைப்பில் இருந்து ஒரு குழு பிரிந்து ராஜபக்ஷவுடன் இணைந்து கொள்ளும். 

ஐக்கிய தேசியக் கட்சியில்  சஜித் தற்போது பலமடைந்து வருவதால் தமது எதிர் காலம் அந்தக் கட்சியில் சூன்னயமாகி விடும் என்று கருதுகின்ற மங்கள , ரவி, கரு போன்றவர்கள் தற்போது தமது அரசியல் பயணத்தில் மாற்றங்களை மேற் கொள்ள இரகசிய முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள். சஜித் விவகாரத்தில் பெரும் மனமுடைந்து நிற்கின்ற மங்கள ஒரு முக்கியமான அரசியல் காய் நகர்த்தல் காரர். 

எனவே இவரை வளைத்துப் பிடித்தக் கொண்டால் இந்தத் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆதிக்கத்தை ஒராளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்;பது ராஜபக்ஷக்களின் நியாயமான எதிர்பார்ப்புத்தான். இதனால் நாமல் ராஜபக்கஷ மங்களவை வீடு தேடி இரு முறை போய் இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபே ராஜபக்ஷ ஆகியோரும் மங்கள வீட்டிற்குச் சென்று பேச்சு வார்த்தைகளை நடாத்தி இருக்கின்றார்கள்.  

மங்களவுடன் மேற் கொண்ட பேச்சு வார்த்தைகளின்படி அவருக்கு சுதந்திரக் கட்சி யின் உதவித் தலைவர் பதவியும், அவர் கேட்பது போன்று வெளி விவகார அமைச்சுப் பதவியும் வழங்கப்பட இணக்கப்பாடு காணப்பட்டிருக்கின்றது. அதன்படி நாளை 10ம் திகதி மக்கள பதவி ஏற்பதாக இருந்தது என்றாலும் ரணிலுக்குதான் கொடுத்த சில காலகெடு - கோரிக்கைகள் விடயத்தில்  சாதகமான பதில் வந்திருப்பதால் மங்கள வெளி விவகார அமைச்சராவது தற்காலிகமாக தடைப் பட்டிருக்கின்றது என்பதுதான் இப்போது புதுக்கதை!

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்தை களமிறங்குமாறு தலைவர் ரணில் விடுத்த அழைப்பை சஜித் நிராகரித்து விட்டார். இதற்கான காரணம் தனக்கு இதற்குத் தேவையான ஒழுச்குகளைச் செய்து கொள்வதற்றுக் கால அவகாசம் போதாது என்பது அவர் கருத்து. 

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி உச்ச கட்டத்தில் இருந்த ஒரு சமயம் தான் நிச்சயம் வருகின்ற தேர்தலில் போட்டியிடுவோன் என்று சஜித் சூளுரைத்திருந்தiமை வாசகர்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நாம் கருதுகின்றோம். 

சஜித் பின்னடிப்பதற்குப் பிராதான காரணம். இந்தத் தேர்தலில் ராஜபக்ஷவை வெற்றி கொள்வது சிரமம் என்பதும் தற்போது தன்னுடன் முறுகல் நிலையில் இருக்கின்றவர்கள் தனக்கு ஒத்துழைப்புத்தர மாட்டர்கள், ரணிலை இந்தத் தேர்தலில் வேட்பாளராக்கி அவர் தோற்றுப் போனதும் அதன் மூலம் கட்சி ஆதிக்கத்தை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது அவரது திட்டம்.

அதன் பின் வருகின்ற ஆறு வருடங்களில் ராஜபக்ஷவின் செல்வாக்கு மேலும் வீழ்ச்சியடையும். அப்போது தான் தனக்குறிய நேரம் என்பது சஜித் எதிர்பார்ப்பு. இதற்கு அப்பாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தங்கை துலஞ்சலியின் கள்ள நோட்டு விவகாரத்தில் ஜனாதிபதி உதவிக்கு நின்றது ஒரு காரணமாக இருக்குமோ என்றும் பொது மக்கள் எண்ண வாய்ப்பிருகின்றது.

இதற்கிடையில் அலுத்கம பேருவளைச் சம்பவங்களைப் போன்று உளவுத் துறையினர் கிழக்கில் தமிழ் மக்களையும் முஸ்லிம்களையும் மோதலுக்குத் தூண்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த இரு சமூகத்தினரும் சந்தேகங்களை வெளியிட்டு வருவதுடன் கடந்த 5ம் திகதி ஹக்கீம் வீட்டில் நடந்த சம்பந்தருடன் சந்திப்பில் இந்த விடயமும் பேசப்பட்டிருக்கின்றது.

இப்போது நமது ஜனாதிபதியின் மூன்றாவது பிரசவம் தெர்டாபான கதைக்கு மீண்டும் வருவோம். ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் எமது ஜனாதிபதி மூன்றாவது தடவையும் களத்தில் குதிப்பார் எங்களுக்கு மக்கள் ஆணை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று தெருவில் சாதரண மக்கள் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தாலும், ராஜபக்கஷ இந்த விவகாரதிலுள்ள சிக்கலை அறிந்து  கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றத்திடம் இது விடயத்தில் ஆலோசணை கோரி இருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்த அணுகுமுறை தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வெலியமுன கருத்துத் தெரிவிக்கையில் நமது நீதிக் கோவைச் சட்டத்தில் 129 (4) பிரிவில் இவ்வாறன ஒரு சிக்கல் ஏற்படுகின்ற போது எப்படி இதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.  

சட்டப் பிரச்சனைகள் குறித்து இப்படி வழிமுறைகள் இருக்கும் போது குறுக்கு வழியில் போய் இதற்கு ஆலோசனை பெற்றுக் கொள்ள முனைவது பிழையான ஒரு ஒழுங்கு முறை. இதனை பகிரங்கமாகவே அவர் நிதீமன்றத்தின் முன்னிலையில் கொண்டு வந்திருக்க வேண்டும். 

அப்போது சாதக பாதக கருத்துக்களை அங்கு முன்வைக்க முடியும். இரகசியமகாப் போய் ஆலோசனை பெற்றுக் கொள்ளவது ஒரு முறையற்ற நடவடிக்கை என வெலியமுன ஜனாதிபதியின் அணுகுமுறைகளை விமர்சிக்கின்றார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய இந்த விவகாரம் தொடர்பாக தமக்குக் கருத்தக் கூற போதியளவு அவகாசம் தரப்பட வேண்டும் என்ற உயர் நீதி மன்றத்தைக் கேட்டிருக்கின்றார். தனும் இது தொடர்பாக எமது அங்கத்தவர்களிடம் ஆலோசைகளைக் கோரி இருப்பதாக் கூறுகின்றார். 

என்னதான் தர்கங்கள் கருத்துக்கள் பறிமாறப்பட்டாலும்  ராஜபக்ஷ மூன்றாவது முறையாக களத்திற்கு வருவதற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. இது தொடர்பாக நாம் எமது வாசகர்களுக்கு முன் பொரு முறை விளக்கமாகச் சொல்லி இருக்கின்றறோம்.  எதிர்க் கட்சிகளுக்கு இப்போது எஞ்சி இருக்கின்ற ஒரே பணி தனது குதிரையைக் களத்தில் நிறுத்துவது ஒன்று மட்டும்தான்.

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி பொது வேட்பாளர் விடயத்தில் ஆரோக்கியமானதொரு நிலை தோன்றி இருப்பதாக மாதுலுவாவே சோபித தேரர் தரப்பில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றது. பொறுத்தமான நேரத்தில் சரியான ஆள் களத்திற்கு வருவார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

Share it:

Post A Comment:

0 comments: