''எனது தியாகம்'' மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சுதந்திரக் கட்சிக்கும் சிறிய அர்ப்பணிப்பாகும் - அஸ்வர்

Share it:
ad
தனிமனிதன் வாழ்விலும் அரசியல் வாழ்விலும் பல சந்தர்ப்பங்களில் தியாகங்களை செய்ய நேரிடுகிறது. அப்படியானதொரு சந்தர்ப்பமாகவே நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை கருதுகின்றேன். எனது இந்த தியாகம், என்னை பாராளுமன்றத்திற்கு நியமித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஒரு சிறிய அர்ப்பணிப்பாகுமென முன்னாள் எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் TN க்குத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் முன்னாள் எம்.பி. அஸ்வரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வரலாற்றில் முஸ்லிம்கள் எப்போதும் நாட்டுக்கு விசுவாசமாகவே இருந்துள்ளனர். எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்ததுமில்லை. நாட்டைக் காட்டிக்கொடுக்கவுமில்லை. அதற்கு மாறாக நாட்டைக் காத்தவர்கள் என்பதே முஸ்லிம்களின் பொன்னான வரலாறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களிலிருந்து நாட்டைக் காக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

பயங்கரவாதச் செயற்பாடுகளால் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. புலிகளுக்கு கப்பம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களது கால்நடைகளையும் ட்ரக்டர்களையும் புலிகள் அபகரித்துச் சென்றனர். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. ஆனால் இன்றோ அந்த அவல நிலையை ஜனாதிபதியவர்கள் முழுமையாக மாற்றிவிட்டார்.

இன்று கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அச்சமின்றி விவசாயத்தை முன்னெடுப் பதுடன், வியாபார நடவடிக்கைகளுக்காக கொழும்பு வந்து செல்கின்றனர். அது மட்டுமன்றி நெடுஞ்சாலைகள் பாலங்களென நவீன உலகத்தையே ஜனாதிபதி சிருஷ்டித்துள்ளார். நன்றி மறவா முஸ்லிம்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வந்தபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரப் கூறியதை நாம் இன்று மீண்டும் சிந்தனையில் எடுக்கும் கட்டத்திற்கு வந்துள்ளோம்.

“உங்களோடு எங்களுக்கு எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை முன்னிறுத்தி உங்களுக்கெதிராக செயல்படும் தருணமல்ல இது. பிரச்சினைகளை பின்பு தீர்த்துக்கொள்வோம். இன்று எனது கடமை உங்களுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை காப்பாற்றுவதே” என்று கூறி தனது சகாவான முன்னாள் எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைருடன் இணைந்து ஜனாதிபதி பிரேமதாசவுக்கு பகலிரவாக சட்ட ஆலோசனைகளை பெற்றுத்தந்தார். இது ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லதொரு அரசியல் பாடமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஆற்றிய சேவைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றிக்காக நான் என்றும் போல் அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: