மக்கள் மயமான அரசாங்கமொன்றை உருவாக்கி ஒழுக்க விழுமியமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதே தமது எதிர்கால நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் பிஸ்கால் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “ராஜபக்ஷ சகோதர நிறுவனம்” என எம்மை விமர்சிப்பது இப்போது அதிகமாகியுள்ளது. நானன்றி எமது சகோதரர்களை மக்களே நியமித்தனர் என்பதை அத்தகையோருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனறும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டுக்குச் செய்துள்ள சேவையைக் குறிப்பிட்டு உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
இப்போது எமக்குக் களங்கம் விளைவிக்கும் சக்திகள் “சகோதர சமாகம” என எம்மை விமர்சிக்கின்றன. கோத்தபாய ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அனைவரையும் மக்களே நியமித்தனர், நானல்ல என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவுள்ள பஷில் ராஜபக்ஷ 1977ம் ஆண்டிலேயே வேட்பு மனு தாக்கல் செய்தவர். அதனைத் தொடர்ந்து 1980களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி உப செயலாளராகப் பணியாற்றியமை அனைவரும் அறிந்ததே.
அவரை நான் நியமிக்கவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களே அப்போது அவரை நியமித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் இடம்பெறுவதற்காக நானும் விஜயகுமாரதுங்கவும் போட்டியிட்டோம். எங்களுக்கு தலா 29 வாக்குகளே கிடைத்தன. அதனால் எம்மால் செயற்குழுவில் இடம்பெற முடியவில்லை. எனினும் பெஷில் ராஜபக்ஷ 90 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க, விஜயகுமாரதுங்கவின் ஆதரவாளர்கள் உட்பட அப்போது பெஷில் ராஜபக்ஷவுக்கே வாக்களித்தனர். நான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் எனக்கு வாக்களிக்கவில்லை.
இவ்வாறுதான் எமது அரசியல் ஆரம்ப வாழ்க்கை இருந்தது.
சமல் ராஜபக்ஷவைத் தேர்தலில் போட்டியிடுமாறு நான் கூறியதில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களே அன்று அவரை வற்புறுத்தி போட்டியிடச் செய்தார். நிருபமாவும் அவ்வாறுதான் நிருபமா ராஜபக்ஷவுக்கும் அவர்கள் வாக்களித்தார்கள்.
நாட்டில் பயங்கரவாத யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலகட்டம் ஒன்றிலேயே நான் இப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைக் கொண்டு வந்தேன்.
பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பினை நம்பிக்கையுள்ள துணிவுள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும் என தீர்மானித்தேன். அவர் வெற்றி ஈட்டக்கூடியவராகவும் எதனையும் நிர்வகித்து கட்டுப்படுத்தக் கூடியவராகவும் திகழ்ந்தார்.
அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதால் படையினரை வழி நடத்துவது அவருக்கு சுலபமாக அமைந்தது. அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை அவர் அர்ப்பணிப்புடன் செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
நாம் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி வருகின்றோம். அதனை வீழ்ச்சியுறச் செய்ய எவருக்கும் முடியாது.
மேற்குலக நாடுகளின் தாளத்துக்கு ஆடுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை. நாம் எமது மக்களை நம்புகிறோம். அவர்கள் சிந்தித்துச் செயற்படக் கூடிய புத்தசாலிகள். தமது பிள்ளைகளான எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமிக்க சிறந்த நாடொன்று அமைய வேண்டும் என அவர்கள் சிந்திக்கின்றார்கள். அதற்கேற்ப நாட்டை அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் கட்டியெழுப்புவதே எமது எதிர்கால நோக்காகும். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நாடொன்று அவசியம் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நாம் அனைவரும் இணைந்து அபிவிருத்தியிலும் நல்லொழுக்கத்திலும் சிறந்த ஆசியாவின் ஆச்சரியமாக எமது தாய்த்திருநாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் மயமான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவது மட்டுமன்றி ஒழுக்க விழுமியம் மிக்க சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்கி நாட்டை முன்னோக்கி வெற்றிகரமாக இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: