எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை சுற்றி ஒன்று சேருமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் பொலன்னறுவையில் 30-11-2014 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழக தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் பிஷாந்த குணவர்தன, சமய தலங்கள் மற்றும் தொல்பொருள் அரும்பொருட்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம்சுமத்தினார்.
சமய தலங்கள் இருந்த இடங்களில் தற்போது விருந்தகங்கள் அமைப்பட்டுள்ளன. மூதாதையர்கள் பாதுகாத்து வந்த தேசிய உரிமங்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது.
அரும்பொருட் காட்சியகம் இரண்டாவது முறையும் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இவ்வாறான அரசாங்கத்தை மீண்டும் ஆட்சி பீடம் ஏறச் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கல்வியை பணத்திற்கு விற்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் ஒன்றில் கைச்சாத்திடும் போராட்டத்தை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இன்று ஆரம்பித்துள்ளது.
மதவாச்சி மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நகரங்களில் இந்த மகஜர் கைச்சாத்திடும் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments: