"மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மக்கள் தாங்க முடியாத துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார்கள். அதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், இறுதி நேரத்திலேயே மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் முஸ்லிம்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் தங்களது இராஜினாமாக் கடிதங்களை எழுதும் அளவிற்குக் கூட துணிச்சல் மிக்கவர்களாக இருக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 'மாற்றத்தை ஏற்படுத்திய மக்களைப் பாராட்டுவோம்' எனும் தலைப்பில் திருமலை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களை NFGG நடாத்தியது. NFGGயின் திருமலை மாவட்ட செயற்குழுவினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுகள் கிண்ணியா, தோப்பூர் மற்றும் மூதூர் பகுதிகளில் நடை பெற்றது.
இந்நிகழ்வுகளில் உரையாற்றிய அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:
"நடக்க முடியாது என எல்லோரும் நினைத்திருந்த ஒரு பெரிய அரசியல் மாற்றம் இந்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. இது ஒருசாதாரண தேர்தல் வெற்றியல்ல. மாறாக இது மக்கள் புரட்ச்சியொன்றின் வெற்றியாகும். கடந்த 5 வருடங்களில் மஹிந்த அரசாங்கத்தின் கீழ் நமது மக்கள் அனுபவித்து வந்த இனவாத அடக்கு முறைகள், பொருளாதாரக் கஸ்டங்கள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்பவற்றின் காரணமாக மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்தார்கள். அந்த வேதனை தந்த விரக்தியே, இன-மத பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற பொது உணர்வை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மஹிந்தவின் தோல்வியில்தான் தமக்கான விமோசனமும் விடிவும் இருக்கிறது என மக்கள் உணர்ந்தார்கள்.அந்த வகையிலேயே முஸ்லிம் சமூகமும் இந்த மாற்றத்திற்கான தனது பங்களிப்பைச் செய்தது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பமானது இந்தமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு அருமையான வாய்ப்பு என மக்கள் உணர்ந்தார்கள். இந்த வாய்ப்பைத் தவற விட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு நமது துன்பங்கள் தொடரும் என்பதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் மக்கள், தமக்காக செயற்படுவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளும் முஸ்லிம் தலைமைகளும் உடனடியான முடிவை மேற் கொண்டு அந்த ஆட்சி மாற்றத்திற்காக உழைப்பதற்கு முன்வர வேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டனர்.
ஆனால், முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லப்படுமவர்கள் மக்களின் உணர்வுகளை மதித்து மஹிந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு உடனடியாக முன்வரவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் மக்களின் முன்னால் வந்து போராட்டங்கள் என்றும் புரட்சியென்றும் பேசுகின்றவர்களொல்லாம் பதுங்கிப் பதுங்கி, தயங்கித் தயங்கி அரசாங்கததோடு ஒட்டிக்கொண்டிருக்கவே முயன்றார்கள். மஹிந்த அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஆதரிப்பதற்கான புதிய புதிய காரணங்களைக் கண்டு பிடித்து மக்களைத் திசை திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
எனினும், இந்த அரசாங்கத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் மக்கள் உறுதியாக இருந்தார்கள். முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்களினதும் நிலைப்பாடுகளைப் புறக்கணித்து விட்டு மக்கள் அலையலையாக ஒன்று திரண்டார்கள். இப்போது ஆட்சிமாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. பொது எதிரணியின் வெற்றி நாளுக்கு நாள் மேலும் மேலும் உறுதியானது. இப்படி, பொது எதிரணிகளின் வெற்றி உறுதி செய்ப்பட்டதன் பின்னர்தான் முஸ்லிம் கட்சிகள் வேறு வழியின்றி பொது எதிரணியினரோடு வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். அந்த இறுதி சந்தர்ப்பத்திலும் கூட, மக்களின் உணர்வுகளை மதித்து அரசாங்கத்திடம் சொல்ல வேண்டிய விடயத்தினை நேரடியாக சொல்லுகின்ற தைரியம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை.
முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரும், அதன் தவிசாளரும் எழுதிய இராஜினாமாக் கடிதங்கள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிப்பவர்களாக இவர்கள் இல்லை என்பதற்கான சான்றாக இருக்கிறது.
மஹிந்தவின் தலைமையில் நடந்த அநியாயங்களின் அடிப்படையிலேயே அவரைத் தோற்கடிக்க வேண்டும் என சமூகம் ஒன்றுபட்டிருந்த வேளையில், அந்த முஸ்லிம்கட்சியின் தலைவர்கள் மஹிந்தவைப் புகழ்ந்து பாராட்டி இராஜினாமாக கடிதம் எழுதினார்கள். அவரை மாபெரும் தலைவரென்றும், இன ஐக்கியத்தை வளர்த்தவர் என்றும் இந்த நாட்டின் பாரிய முன்னேற்றத்திற்கு காரணமானவர் என்றும் புகழ்ந்து பாராட்டுவதாகவே அவர்களது இராஜினாமாக கடிதங்கள் இருந்தன. இவர்கள் இத்தனை காலமும் என்ன அடிப்படையில் அரசாங்கத்தோடு இருந்தார்கள் என்ற அரசியல் சுயரூபத்தை நிரூபிக்கின்ற வரலாற்று சான்றாக அக்கடிதங்கள் இருக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மாகாணசபையில் இவர்களில் பேசமுடியவில்லை. பாராளுமன்றத்தில் பேசமுடியவில்லை. அமைச்சரவையிலும் பேசமுடியவில்லை. குறைந்த பட்சம் நமது சமூகத்தின் உணர்வுகளை மதித்து அவற்றை பிரதி பலிக்கும் வகையில் இராஜினாமாக் கடிதங்களையாவது எழுதுகின்ற துணிச்சலோ அல்லது நேர்மையோ இந்தத் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது."
Post A Comment:
0 comments: