இலங்கை வங்கி தெப்ரோபென் கிளை கணக்கில் தனது பெயரில் இருந்த 8 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு எடுத்துக் கொண்டதாக வெளியாகும் செய்தி மக்களை ஏமாற்றும், தனது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் ஏற்பாடு என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலவத்த இராணுவ தலைமையக கட்டிட அமைப்புப் பணிகளை மேற்கொள்ளவென நிதி செலவுக்கு இலங்கை வங்கியின் தெப்ரோபென் கிளையில் நடைமுறை கணக்கு இருந்ததாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதியுடன் இந்த வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும் காலிமுகத்திடல் காணி குத்தகைக்கு வழங்கப்பட்டு பெறப்பட்ட பணம் இந்த கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக கோட்டாபய கூறியுள்ளார்.
இராணுவ தலைமையக கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்கவென வங்கியில் இருந்து மீள எடுக்கப்பட்டதாக கோட்டாபய தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு இக்கணக்கு ஆரம்பிக்கப்பட்ட போது 20 பில்லியன் ரூபா இருந்ததாகவும் அதிகாரம் உடைய இருவரின் கையொப்பத்தைக் கொண்டே பணம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து தான் விலகிய பின் புதிய பாதுகாப்பு செயலாளரின் கீழ் இந்த கணக்கு வந்துவிடும் என்றும் சகல தகவல்களையும் அவர் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கோட்டாபாய கூறியுள்ளார்.
ஆகையால் இந்த கணக்கு தன்னுடைய தனிப்பட்ட கணக்கு அல்ல என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று 19-01-2015 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: