இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜூலி பிஷப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2
இலங்கையில் சுமூகமான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஒபாமா, சுமூகமான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஜப்பான் வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
3
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான முடிவை வழங்கியமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நம்பகமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்தமை தொடர்பில் இலங்கைத் தேர்தல்கள் செயலகத்திற்கும் அவர் தனது பாராட்டுக்களை குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் போன்ற விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments: