இலங்கையின் 6வது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அனுப்பிய வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு...
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 6வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களை உளப்பூர்வமாக வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி நல்லாட்சி பற்றிய சிந்தனைகளையும் செயற்திட்டங்களையும் மக்கள் முன்வைத்ததன் விளைவாக அடுத்து வரும் ஆறு ஆண்டுகள் நாட்டை வழிநடத்தும் ஆணையை மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ளார்கள். நாடு நல்லாட்சி வேண்டி நின்ற வேளையில் பொருத்தமான ஒருவர் அந்தப் பொறுப்பிற்கு அமர்த்தப்பட்டிருப்பது இந்த நாட்டுக்கு கிடைத்த ஒரு பேறாகும். அதன் சிறந்த விளைவுகளை இந்த நாடு பெற வேண்டும் என நாம் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் ஒரு புறம், வாக்களிக்காதவர்கள் மறுபுறம் அதன் பின்புலம் எப்படி இருந்த போதிலும் தற்போது அனைவரினதும் ஜனாதிபதி நீங்களே. மக்கள் அனைவரையும் ஓரணியில் இணைத்து உங்கள் தலைமைத்துவம் அமையுமென பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
அவ்வாறே அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் உங்களுடன் கைகோர்த்து செயல்படுவார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.
அத்துடன் அரசியல், பொருளாதார, தார்மிக துறைகளிலும் நாடு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பதற்கான திட்டங்களை உங்களது ஆட்சி கொண்டிருக்கிறது என்பதை உங்களது தேர்தல் விஞ்ஞாபனம் உணர்த்துகின்றது. நீங்கள் எதிர்பார்த்தவாறே அபிவிருத்திகளும் முன்னேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் சமாதானமும் மலர்ந்த ஒரு முன்மாதிரியான தேசமாக இலங்கை மாறுவதற்கும் அந்த மாற்றங்களால் ஏனைய நாடுகளுக்கு எமது தேசம் முன்மாதிரியாக அமைவதற்கும் நாம் அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
வாழ்க நம் தேசம்! வளர்க உங்கள் நல்லாட்சி!
ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி


.jpg)
Post A Comment:
0 comments: