(நவாஸ் சௌபி)
(ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவினை முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை அறிவிக்காத நிலையில் அது பற்றிய எழுத்தையும் தொடர்ந்தும் எழுதவேண்டி இருக்கிறது)
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்டிருந்த ஆகவும் பெரிய எதிர்பார்ப்புகள் இரண்டாகவிருந்தது ஒன்று பொதுவேட்பாளர் யார் என்பது மற்றது முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிக்கும் என்பது, இதில் பொதுவேட்பாளர் யார் என்ற மிகச் சிக்கலான பிரச்சினைக்கு தீர்வு கண்டும் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்ற முடிவு இதுவரை எடுக்கப்படாமல் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்ததைவிடவும் சிக்கலானதாகவும் பரபரப்பானதாகவும் அது இன்று மாறியிருக்கிறது.
வழக்கமாகத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் மக்களைப் பலிகொடுப்பதற்கு மாற்றமாக இம்முறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸைப் பலி கொடுத்திருக்கிறார்கள் என்பதுபோலவே மக்களின் ஆத்திரமும் முஸ்லிம் காங்கிரஸின் சூத்திரமும் இன்று வெளிப்பட்டிருக்கிறது.
இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முடிவு குறித்து பலவாதப் பிரதிவாதங்கள் தேசிய அரசியலில் இருந்தாலும் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவசரப்பட்டதுபோல் இம்முறை அந்த அவசர முடிவுக்கு தன்னை விட்டுவிடாமல் தனது தலைக்கு மேல் ஏறிமிதிக்கும் அழுத்தங்களைக் கடந்தும் ஹக்கீம் தன் நிதானத்தை இழுத்துப்பிடித்திருப்பது சமூகத்தின் மீதான எதிர்கால பாதுகாப்பும் நம்பிக்கையும் அமையப்போகும் ஆட்சியில் முறையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றிருந்தால் அதனை நாம் இனியும் விளங்காது இருக்க முடியாது. இதன் மூலம் இதுவரையும் முஸ்லிம் காங்கிரஸ் தன் முடிவினை அறிவிக்காது இருப்பதன் இறுதி இலக்கை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தப் புரிதலின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமாகும்.
இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவினை எடுப்பது தொடர்பாக பல உரையாடல்களைச் செய்து அதன்பால் காலத்தைக் கடத்தி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்ற முடிவினை அறிவித்துக்கொண்டிருந்தது.அவ்வாறே கூறி இருக்கின்ற காலத்தையும் அது கடத்திவிடலாம் என தலைவர் ஹக்கீம் திட்டமிட்டிருந்தாலும் மஹிந்தவின் தரப்பு அதற்கான வாய்ப்பினை வழங்காமல் தொடர்ந்தும் ஹக்கீமின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதனையும் நாம் மறுபக்கம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் முடிவினை இன்னும் அறிவிக்கவில்லை என்பதிலும் நாம் ஒரு திருத்தத்தை செய்ய வேண்டும். அதாவது முஸ்லிம் காங்கிரஸ் இன்றுவரை மஹிந்த அரசாங்கத்தில் இருந்துவருகின்ற ஒரு பங்காளிக் கட்சி அது எப்போது அரசைவிட்டு வெளியேறுகிறதோ அப்போதுதான் அதன் முடிவு மாற்றமானதாக அமையும் அதுவரை அதன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அது அரசுடன்தான் இருக்கிறது என்பதே தெளிவான முடிவாகும்.
இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று நாம் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை அது மைத்திரியை ஆதரிப்பதாக ஒரு முடிவை அறிவிக்காதவரை அது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்பதுதான் எடுகோள்.
இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடனிருக்கும் தன் முடிவில் மாற்றமில்லாதிருக்கும் இந்நிலைப்பாட்டினை சரிகாணவேண்டிய முக்கிய கட்டத்தை ஹக்கீம் அடைந்துவிட்டார் என்பதை அவரது நிதானம் நிரூபித்திருக்கிறது. ஹக்கீமின் இத்தகைய நிதான இருப்பை நாமும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப் போகும் முடிவு குறித்து எனது கருத்தை எழுதும் போது அதில் ஆகவும் சிறந்த ஒரு முடிவு நடுநிலையாக இருந்துவிடுவது என்றும் அவ்வாறில்லாது போனால் மக்களின் கொந்தளிப்பான மனநிலைகளில் உள்ள நியாயங்களுக்கு அப்பால் எதிர்கால ஆட்சியில் முஸ்லிம்களின் இருப்பை பாதுகாப்பதை நோக்காகக் கொள்ளும் அரசியல் நியாயங்களை முதன்மைப்படுத்தி மஹிந்தவின் ஆட்சியிலிருந்ததுபோல் தொடர்ந்தும் அவரோடு இருந்துவிடுவதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.
இதில் நடுநிலையாக இருப்பதையோ மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதையோ பகிரங்கமாக அறிவிக்க முடியாத அரசியல் நெருக்கடிகள் இருப்பதனை ஹக்கீமின் நிதானத்திலிருந்து புரிகிறது. அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு நடுநிலைவகிக்க முடியாது என்பது ஒருபுறம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக இருக்கின்ற நிலையில் மஹிந்தவுக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு அவருக்காக பிரச்சாரம் செய்ய முடியாது என்பது மறுபுறம். இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு தலைவர் என்ற வகையில் ஹக்கீம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காது இருந்தது அவரது தலைமைத்துவக் கெட்டித்தனம் என்றே கருத வேண்டும்.
இதற்குள் மைத்தரியை ஆதரிக்கும் முடிவு குறித்து ஹக்கீமின் நிலைப்பாட்டை நான் கூறவில்லை. காரணம் அந்த முடிவினை அவர் எடுப்பதாக இருந்தால் பொதுவேட்பாளரை அறிவித்தவுடன் எடுத்திருப்பார். ஆனால் பொதுவேட்பாளர் யார் என்று தெரிவதற்கு முன்பே அவர் மஹிந்தவின் அடுத்த தேர்தலில் அவரது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்து அவருக்கு விசுவாசமான தலைவராக அங்கம் வகிக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பினைத் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதையும் ஊகிக்க முடிகிறது.
ஏனென்றால் கடந்த அளுத்கம சம்பவத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ் அரசைவிட்டு வெளியேற வேண்டும் என முஸ்லிம் மக்கள் கிளர்ந்தெழுந்த போதும் அரசாங்கத்தைவிட்டு விலகிக்கொள்ளாமல் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது எனவே அதற்கு இருக்கும் இந்த ஆறு மாதகாலத்தினுள் எதுவும் நடக்கலாம் அரசியலில் ஆறுமாத காலம் என்பது மிகச் சாதாரணமான ஒன்றல்ல என மிகத் தெளிவுடன் அப்போதைய தனது நிதானத்திற்கு ஹக்கீம் நியாயம் கூறி இருந்தார். இதன்படி மஹிந்த அரசு சார்ந்த ஒரு நிலைப்பாட்டிலேயே அவர் தொடர்ந்தும் இருந்துவந்தார். இதற்கு காரணமாக மஹிந்த எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் வந்தாலும் தோற்றுப் போகமாட்டார் என்ற கணிப்பீடு அவருக்குள் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இதற்கும் காரணம் 2005 இல் ரணிலுக்கு சமமான வேட்பாளராக போட்டியிடுவதற்கு அரசியல் செல்வாக்கு இல்லாத ஒருவராக மஹிந்த நின்றும் ரணிலால் அவரை தோற்கடிக்க முடியாது போய்விட்டது அடுத்து 2010 இல் யுத்த வெற்றியை மஹிந்த சாதகமாகப் பயன்படுத்த முடியும் எனக் கருதி யுத்தத்திற்கு தளபதியாக நின்ற பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தினார்கள் அவரால் கூட மஹிந்தவை வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே அடுத்த வேட்பாளர் யார் மஹிந்தவை வெற்றி கொள்ள வருவார் என்பதைப் பார்த்து அவரால் மஹிந்தவை வெற்றிகொள் முடியுமா என்ற கணிப்பீட்டையும் செய்து அப்போது மஹிந்தவின் அரசிலிருந்து விலகலாம் இப்போது விலகினால் மக்களின் கணக்கு சரியானாலும் அரசியல் கணக்குப் பிழைத்துப் போகும் என ஹக்கீம் ஆறு மாதகாலத்தை முன்வைத்து பொறுமையாக இருந்ததில் நியாயமில்லாமல் இல்லை ஒரு தலைவராக அவரது தந்திரம் சரியானதே.
இறுதியில் தான் எதிர்பார்த்த வேட்பாளராக மைத்திரி அமையவில்லை என்ற கணிப்பீட்டையும் தற்போது ஹக்கீம் ஊகித்துக்கொண்ட நிலையில் மக்களின் ஆத்திரத்திற்கு முடிவு எடுப்பதா? மஹிந்த வெற்றி பெறுவார் என்ற சூத்திரத்திற்கு முடிவு எடுப்பதா? என்ற நிதானத்தில் தன் முடிவினை அவசரப்பட்டு அறிவிக்காமல் தலைமைத்துவ இருப்பை இத்தேர்தலில் அவர் சரியாக வைத்துக் கொண்டிருந்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மைத்திரியின் பக்கமிருந்து முஸ்லிம் காங்கிரஸுக்கு முறையான கைநீட்டுதல் விடுக்கப்படவில்லை முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தேவை இல்லை என்று அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் வருகையை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
எனவே, இந்நிலையில் பொதுவேட்பாளரை அறிவிக்கும் முன்னும் அறிவத்த பின்னும் ஹக்கீம் தனது நிலைப்பாட்டை அரசிலிருந்து இன்னும் மாற்றிக்கொள்ளாது இருப்பதை நாம் சரிகாண வேண்டும் என்பதே இன்றுள்ள அரசியல் நியாயமாகத் nதியலாம்.
ஆனாலும் மஹிந்த மீதான தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வதில் எதாவது நியாயமிருக்க வேண்டுமே என்றுதான் இதுவரை முஸ்லிம் சமூகத்தில் தீர்வுகாண வேண்டும் என அடையாளப்படுத்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளை அரசுடன் பேசி குறிப்பிட்ட சில தீர்வுகளை உடனே மக்கள் அறியும்படி பெற்றுக்கொள்ள ஹக்கீம் முயற்சி செய்துவந்தார் இதில் திருகோணமலை கருமலையூற்றுப் பள்ளி கையளிப்பு, ஒலுவில் படைமுகாம் விடுவிப்பு, என்று இன்று தம்புள்ளை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல்கள் மற்றும் கரையோர மாவட்டம்வரை இதன் தீர்வுகள் சாதகமான நிலையை எட்டியிருக்கும் நம்பிக்கை அரச தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இப்போது மஹிந்தவின் பக்கத்தை ஹக்கீம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தும் நியாயங்கள் அவர் பக்கம் சேர்ந்திருக்கிறது.
இந்த விடயங்களை அரசுடன் பேசி தீர்வுகாண்பதற்குள் கட்சியின் உயர்பீடம், அரசியல் பீடம், உலமாக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று உரையாடியதில் மைத்திரியை ஆதரிக்கும் வலுவான காரணங்கள்தான் முன்வைக்கப்பட்டது இதன்படி மைத்திரியை ஆதரிக்கும் முடிவினையும் எடுக்காமல் ஒரு பக்கம் கலந்துரையாடல்கள் மூலம் அபிப்பிராயங்களை தெரிந்துகொள்வதும் மறுபக்கம் அரசுடன் கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றிக் கொள்வதுமாக ஹக்கீம் முன்னுக்குப் பின் முரணாக செயற்பட்டாலும் இதில் மக்களின் மன நிலையை அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மையை மக்களுக்கும் வெளிக்காட்ட முயற்சிக்கிறார் என்ற ஒரு நேர்மையான பார்வையும் இருந்தது என்பதனையும் நாம் புரிந்துகொள்ள மறுக்க கூடாது.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலின் முடிவினை அறிவிக்காமல் இதுவரை நிதானித்திருக்கும் ஹக்கீமின் நிலைப்பாட்டில் மேலும் ஒரு அழுத்தமாக 20 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனைக்கான மஹிந்தவின் விஜயம் அமைந்திருக்கிறது. இந்நிகழ்வில் ஹக்கீம் தன் இறுதி முடிவை அறிவித்து மஹிந்தவுடன் தேர்தலுக்காக களமிறங்கும் படலம் ஆரம்பமாகலாம் இது மஹிந்தவின் கட்டாயமான எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இதற்காகத்தான் மேலே கூறப்பட்ட சில விடயங்களுக்கு உடனடித் தீர்வுகள் சில வழங்கப்பட்டிருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கும் அதன் முடிவில் மாற்றமில்லை அது இத்தேர்தலில் மஹிந்தவுடன்தான் இருந்தாக வேண்டும் என்ற தலைமையின் நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொண்ட என்போன்றவர்கள் சரிகண்டு அதற்கு வலுச் சேர்க்க வேண்டும். இதில் மக்களின் வாக்குகள் மீதான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு அப்பால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்தாக வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் உள்ள அரசியல் சூழ்நிலையை நாம் ஏகமனதாக சரிகாண்போமாக.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவினை முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பது தொடர்பாக இதுவரை அக்கட்சியும் அதன் தலைமையும் முன்னெடுத்த நடிவடிக்கைகளின் படி அதன் முடிவு என்னவாக அமையப் போகிறது என்பதனை ஓரளவு ஊகிக்க முடிந்ததன் வெளிப்பாடாகவே இத்தனையும் கூறினேன். இதற்கு மாற்றமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தன் முடிவினை வெளியிடலாம். அப்போது எனது விமர்சனமும் மாறலாம்.


.jpg)
Post A Comment:
0 comments: