எம்மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு இருப்பதாக கூறவேண்டாம் - சீறிப்பாய்ந்த ஞானசார

Share it:
ad
பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வாரமஞ்சரிக்கு செவ்வி

பொது பலசேன முஸ்லிம்களுக்கு எதிரானதொரு அமைப்பு எனும் கருத்து பரவலாகக் காணப்படுகிறது. இத்தகைய கருத்துப் பரவக் காரணம் என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பா? அவ்வாறு கூறியது யார்? அதனை முதலில் கூறுங்கள். அதன் பின்னர் நான் உங்களது. இக்கேள்விக்குப் பதில் தருகிறேன். அத்தகையதொரு கருத்து முஸ்லிம் மக்களிடையே இருப்பதாக நான் நம்பவில்லை. இது தவறான பிரசாரம்.

இல்லை, முஸ்லிம் சமூகத்திலுள்ள பலரிடமும் இக்கருத்து நிலவுகிறது. அதனால்தான் அதனைத் தெளிவுபடுத்துமாறு தங்களிடம் கேட்டேன்?

இது முற்றிலும் தவறான கருத்து. ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொய்யான இக்கருத்தைச் சில ஊடகங்கள் அதிலும் சில தமிழ் ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தினரிடையே பரப்பி வருகின்றன. அதனை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் நம்பலாம். ஆனால் அதில் துளியளவும் உண்மையில்லை. நாம் எக்காலத்திலும் முஸ்லிம் களுக்கு விரோதமானவர்கள் இல்லை.

அவ்வாறாயின் இத்தகையதொரு கருத்தோ அல்லது அபிப்பிராயமோ அம்மக்கள் மத்தியில் பரவக் காரணம் என்ன?

என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். உண்மையில் இக்கேள்வியை நீங்கள் இந்தக் கதையைப் பரப்பிவரும் அந்தச் சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும், அந்தச் சில தமிழ் ஊடகங்களிடமும்தான் கேட்க வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன் எமது அமைப்பு எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரான ஓர் அமைப்பு அல்ல.

சிறிது காலத்திற்கு முன்பாக நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்களில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பேருவளை சம்பவம் என்பவற்றால் உங்களது அமைப்பு மீது முஸ்லிம்களுக்கு தப்பிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?

எம் மீது தப்பிப்பிராயம் ஏற்படுவதற்கும் நீங்கள் குறிப்பிடும் இச்சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அவற்றை நாம் செய்தது போலல்லவா கூறுகிaர்கள்? முதலில் இந்த மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளிவாசல்கள் மீதான சிறு சிறு சம்பவங்கள் குறிப்பிட்ட அப்பிரதேசங்களில் காணப்பட்ட ஏதோவொரு சிறு பிரச்சினையே.

பேருவளைச் சம்பவம் அதில் சிறிது பாரதூரமாக இடம்பெற்றது எனக் கூறலாம். இவை யாவும் பின்னர் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சமய, சமூக, அரசியல் தலைவர்களால் சரி செய்யப்பட்டுவிட்டது.

எனினும் அவையே தங்களது அமைப்பின் மீதான தப்பிராயத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறலாம்தானே?

எப்படிக் கூறலாம். எம்மை அதனுடன் சம்பந்தப்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை. ஏன் இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறவில்லையா? அப்போது எமது அமைப்பே இருக்கவில்லை. இல்லாவிடின் அதற்கும் எம்மைத்தான் குற்றம் சாட்டுவீர்கள் போலுள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற பாரிய சம்பவங்கள் இடம்பெறவில்லைத்தானே?

ஏன் இல்லை. பல இடம்பெற்றன. மாவனல்லை, மாளிகாவத்தை சம்பவங்களை குறிப்பிடலாம். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பலவற்றைக் கூறலாம். பேருவளையை விடவும் மாவனல்லையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. எனவே பல்லின மக்கள் வாழும் நாடுகளில் இதுபோன்ற சிறு சிறு சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதற்காக உலகில் எங்குமே இடம்பெறாதது எமது நாட்டில் இடம்பெற்றுவிட்டதாகக் கூறுவது தவறு. இதுவொரு சகோதரப் பிணக்கு என வைத்துக் கொள்ளுங்களேன்.

அப்போது பேருவளையிலும், மாவனல்லையிலும் இடம்பெற்ற சம்பவங்களை நியாயப்படுத்த முடியுமா?

நிச்சயமாக இல்லை. நான் அவ்வாறு கூறவும் இல்லை. அதற்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன். இவை இரு சகோதரர்களுக்கிடையே எழுந்த முரண்பாட்டினால் ஏற்பட்ட ஒரு சிறு மோதலாகவும் கூறலாம்.

இங்கு மோதிக் கொண்ட ஒரு தரப்பினர் மட்டும் பாதிக்கப்படவில்லையே. இருதரப்பினருக்குமே இழப்புகள் ஏற்பட்டன. அவை பின்னர் அரசாங்கத்தினால் சரி செய்யப்பட்டுவிட்டது. அது தொடரான குரோதமாக வளரவில்லை. அதற்காக அரசாங்கத்தை நாம் நன்றியுடன் பாராட்ட வேண்டும்.

பேருவளையில் உண்மையில் என்ன நடந்தது? அச்சம்பவத்திற்குப் பின்னர்தானே தங்களது அமைப்பின் மீதான வெறுப்பு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டது?

அது தவறு. எம்மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு இருப்பதாக கூற வேண்டாம். அதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். உண்மையில் அங்கு ஒரு சிறு வார்த்தைப் பிரயோகம் காரணமாகவே தகராறு ஏற்பட்டது. அதுவே பின்னர் சிறு மோதலாக மாறியது. தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத இரு சிறு குழுவினரால் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.

இனினும் அதனை ஆராய்வது அழகல்ல. இப்போது அங்கு முன்னரை விடவும் பெளத்த இஸ்லாமிய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் அங்கு விஜயம் செய்தபோது அப்பகுதி முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தமது குறை நிறைகளை எடுத்துக் கூறியுள்ளனர். இதுவே அதாவது இந்த அந்நியோன்யமே எமக்கு வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராதிருக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீங்கள் கருதுகிaர்கள்?

சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எம்மைப் பொறுத்த வரையில் நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. முதலில் நாம் இனவாதம் பேசும் அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து களைய வேண்டும். அவர்கள்தான் தமது அரசியல் இருப்பிற்காக மக்களைப் பணயம் வைக்கிறார்கள். எந்தவொரு இனத்திலும் மக்களை நான் குறை கூறமாட்டேன்.

யார் அத்தகைய அரசியல்வாதிகள் எனத் தங்களால் குறிப்பிட்டுக் கூற முடியுமா?

நான் கூறத் தேவையில்லை. அவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள். அதனை நீங்கள் அறிய வேண்டுமாயின் சில தமிழ் ஊடகங்களில் வெளி வருகின்ற மோசமான கருத்துக்களை வைத்து அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எந்தவொரு சம்பவத்திலும் தங்களது அமைப்பு சம்பந்தப்படவில்லை என்பதாக தாங்கள் கூறுகி ர்கள். ஆனால் சில சம்பவங்களில் தங்களது அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்படுகிறது. இது பற்றி...

அது பொய். அவ்வாறு எமது உறுப்பினர்கள் சில சந்தர்ப்பங்களில் சில சம்பவ இடத்திலிருந்தாலும் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. நியாயத்தைக் கேட்பார்கள். அது சிலவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கும், மீடியாக்காரருக்கும் கலகம் விளைவிப்பது போலத் தோன்றியிருக்கும்.

இவ்வாறு தங்களது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திருந்தமையினால் அரசாங்கம் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. ஏனெனில் தங்களது அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது பற்றி நீங்கள் என்ன கூறுகிaர்கள்?

எமக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமல்ல எமது அமைப்பிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மூலமாக எமக்கு நிதி வழங்குவதாகவும்கூட அபாண்டமாகக் குற்றம்சாட்டப்பட்டது. நாம் இவற்றை முற்றாக மறுத்திருந்தோம். அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும்கூட மறுத்திருந்தது. இத்தகைய சம்பவங்களிற்கு ஏன் அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

முன்னைய ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லையா என நான் கேட்கிறேன். என்ன நடந்தது எனக் கூறுங்களேன்.?

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் அவர்களால் பெரும் இடையூறுகளைச் சந்தித்தார்கள். பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. உதாரணமாக காத்தான்குடி பள்ளிவசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். இது போன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடுப்புகளுடன் கலைத்து விடப்பட்டனர். வேறு பல கொலை, கொள்ளைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றன.

இவை அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந் தபோது இடம்பெற்றவை. அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் புலிகளுக்கும் தொடர்பிருந்ததாக இவர்கள் கூறினார்களா? இல்லையே. பின்னர் ஒரு காலத்தில் குற்றம் சாட்டிய அதே ஆட்சியாளர் களும், முஸ்லிம் தலைவர்களும் கொலை செய்த அதே புலிகளின் தலைவருடன் சென்று தேநீர் அருந்தி ஒப்பந்தங்களைக்கூடக் கைச்சாத்திட்டனர்.

தங்களது அமைப்பு பெளத்த மதத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டு வருவதாக தாங்கள் அடிக்கடி கூறி வருகிaர்கள். அதுதான் தங்களது அமைப்பின் பிரதான நோக்கமா?

நிச்சயமாக இது பெளத்த நாடு. பெளத்த மக்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து வருகி றார்கள். அதனை நாம் கட்டிக் காத்து வருகின்றோம். பெளத்த மதமும், அதன் புனிதத்துவமும் சிறிதும் குறைந்து விடாது பாதுகாத்து அதனை மேலும் பரப்பி வருவதே எமது பிரதான நோக்கம். அதற்கு எவர் இடையூறாக வந்தாலும் நாம் கேள்வி கேட்போம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தங்களது அமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்கு விசேட காரணம் ஏதாவது உள்ளதா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டை இன, மத, மொழி பேதமின்றி வழிநடத்தி வருகிறார். அவர் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து சிறப்பாக அபிவிருத்தி செய்து வருகிறார். அவரது ஆட்சி தொடர்ந்தாலேயே நாட்டு மக்கள் இதே நிம்மதியுடன் வாழ முடியும் எனும் நம்பிக்கை எமக்குள்ளது. பொது எதிரணியில் உள்ளவர்களிடைய ஒற்றுமை இல்லாத நிலையே காணப்படுகிறது. அதனால் ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டு மக்களை நிம்மதியாக வாழ வைப்பதே எமது நோக்கமாகும்.

இதுவரை காலமும் அரசாங்கத்துடன் இருந்த ஜாதிக ஹெல உறுமய திடீரென எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இது பற்றி...

அவர்கள் நிலையான கொள்கை இல்லாதவர்கள், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சில ஆசனங்களை இலக்கு வைத்தே அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். ஆனால் அவர் களது கனவு ஒருபோதும் பலிக்காது. அவர்களது செயற்பாடானது இக்கரைக்கு அக்கரை பச்சை போன்றதே.
Share it:

Post A Comment:

0 comments: