(நேர்கண்டது - ஏ.ஏ.எம். அன்ஸிர்)
மிக நீட்ணட நாட்களுக்கு பின் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஸீர் சேகுதாவூத்தை இன்று 28-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் தொலைபேசியில் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அவர் எமக்கு வழங்கிய அந்த சிறிய நேர்காணல் இதோ..!
என்ன புதினங்கள்...?
நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்களே..? நாங்கள் அரசிலிருந்து விலகிவிட்டோம்...!
நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டிர்களா..?
ஆம் ராஜினாமா செய்துவிட்டேன்.
எப்போது..?
இன்று.
ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டீர்களா..? ஜனாதிபதி செயலகத்திற்கா அனுப்பபினீர்கள்..?
ஆம்..!
மைத்திரிக்காக முழு அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா..?
முஸ்லிம் சமூகம் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை மேற்கொண்டுவிட்டது. எனினும் கடந்த காலங்களில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான சமிக்சையை நான் வெளிப்படுத்திவந்தேன். இப்போது மைத்திரிக்கு ஆதரவளியுங்கள் என நான் பிரச்சாரம் செய்தால் அது எனது நம்பகத் தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
சரி, முழு அளவில் பிரச்சாரம் செய்யமாட்டிர்களா..?
இதுதொடர்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நான் கலந்துரையாடியுள்ளேன். கட்சியின் தீர்மானத்தையும், முஸ்லிம் சமூகத்தின் தீர்மானத்தையும் மதிக்கிறேன். எதிர்காலத்திலும் மதிப்பேன். கட்சியின் தவிசாளர் என்ற வகையில் எனது பணிகள் தொடரும். முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தையும் கவனத்திற்கொள்வேன்.
மைத்திரியின் வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது..?
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தலுக்கு சில நாட்களேயுள்ளன. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியதன் தோற்றத்தை நாம் கண்டுகொள்ளலாம். மஹிந்த ராஜபக்ஸவின் வாக்கு வங்கியில் இது சாதகத்தை ஏற்படுத்தலாம். மஹிந்த அணியினரின் பிரச்சாரத்திற்கும் இது வலுவாக அமையலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை ஏன் தாமதித்து அறிவித்தது..?
முஸ்லிம் காங்கிரஸின் தாமதத்திற்கு 2 காரணங்கள் நிலவியது. இது உளவியலுடன் சம்பந்தபட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், சில முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் அரசாங்கத்துடனே தங்கி விடுவார்கள் என்ற நிலை காணப்பட்டது. அவ்வாறான பிரச்சாரமும் தொடரப்பட்டது. இதனால் அவசரப்டாமல் நிதானித்து, தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது.
இரண்டாவது காரணம் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்தில் இருப்பதும், அல்லது வெளியேறுவதும் சிங்கள பௌத்த வாக்கு வங்கியில் அதிகரிப்பை ஏற்படுத்தும் அல்லது குறைப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.
தற்போதும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்தாயிற்று. இத்தீர்மானம் எந்தப்பக்கம் எத்தகைய செல்வாக்கை செலுத்தலாமென்பதை நாம் இன்னும் சில தினங்களில் கண்டுகொள்ளமுடியும்.
அடுத்தகட்டம் என்னவாக இருக்கப்போகிறது..!
முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பல உடைவுகளை கண்டுள்ளது. இந்த நேரத்தில் எமது கட்சிக்குள் உள்ள நிலைகளை வெளியாருக்கு படம்பிடித்துக்காட்ட நாம் தயாரில்லை. ஒன்றுபட்ட முடிவை மேற்கொள்ளவேண்டிய தேவை சகலருக்கும் இருந்தது. பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் அல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் விருப்பத்தை நிறைவேண்டிய தேவையிருந்தது. தற்போது மக்களின் தீர்மானத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பட்டுள்ளது. அதற்கு நானும் இணங்கியுள்ளேன எனவும் பஸீர் சேகதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய சிறிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: