''அளுத்கம் போன்ற வன்முறைகளில் நாம் பாதுகாக்கப்படாமைக்கு காரணம் இதுதான்'' அப்துர் ரஹ்மான்

Share it:
ad
"இன்று நம் நாட்டில் வாழும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும், கஸ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள். இவை மாற்ற முடியாத தலை விதிகளல்ல என்பதனை நாம் மறந்து விடக் கூடாது" என அக்குறனை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பரந்தளவில் மேற்கொண்டுவரும் பிரச்சார நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கடந்த (14.12.2014) அக்குறனைப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பயங்கரவாத சூழல் நிலவிய காலத்தில் பல தரப்பட்டஇன்னல்களை நாம் அனுபவித்தோம். உயிராபத்து, உடமைகளுக்கான அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கின்மை, பொருளாதாரக் கஸ்டங்கள் என பல்வேறு துயரங்களை நாம் அனுபவிக்க வேண்டியிருந்தது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக நாட்டு மக்களாகிய நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்காக இந்தக் கஸ்டங்களை நாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆடசியாளர்களால் நமக்கு சொல்லப்பட்டது.

தேசத்தின் நலன்கருதி சகித்துக் கொண்டு பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்கினோம். இன்று யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது ஆனால் நமது துயரங்களுக்கு முடிவு காணப்படவில்லை.

எமது மத கலாசாரதனித்துவ உரிமைகள் முன்னரை விடவும் அதிகமாக அச்சுறுத்தப்பட்டுள்ளன.

எமக்கெதிரான வன்முறைகள் நடாத்தப்பட்டுள்ளன. பொருளாதாரக் கஸ்டமும் விலை வாசியும் நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டே போகிறது. எமக்குரிய வர்த்தக, சந்தை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் வீண் விரயமும் ஊழல் மோசடிகளும்சர்வதிகார ஆட்சி முறையுமே இதற்கெல்லாம் காரணமாகும்.

யுத்த காலத்தின் போது 10000 கோடி ரூபா அளவிலேயே தேசிய பாதுகாப்புக் கென நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் யுத்தம்நிறைவடைந்துள்ள இன்றைய நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடாக 25300 கோடிரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் வறுமையிலும் அடிப்படை வசதிகளும்இல்லாமல் வாழுகின்ற போது இவ்வளவு பாரிய தொகை பாதுகாப்பு செலவாக ஏன் ஒதுக்கப்படுகிறது?

இது போலவே உலக சந்தையில் ஒரு பறல் பெற்றோலின் விலை 120 டொலராக இருந்த நேரத்தில்தான் அதைக் காரணம் காட்டி எமது நாட்டிலும் பெற்றோலின்விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் இன்று உலக சந்தையில் பெற்றோல் ஒரு பரலின் விலையானது 65 டொலராக குறைந்திருக்கிறது. ஆனால் அதே அதிகரித்தவிலையில்தான் நாம் பெற்றோலை இன்னமும் வாங்கிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 48 ரூபாவரையில் மக்களிடமிருந்து அநியாயமாக அறவிடுவதாக முன்னால் பெற்றோலிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நாள் ஒன்றுக்கு 16 மில்லியன் லீட்டர் பெற்றோலைபொதுமக்கள் கொள்வனவு செய்கிறார்கள். அந்த வகையில் ஒரு நாளுக்கு 76.8 கோடி ரூபாவினை பொது மக்களிடமிருந்துஅரசாங்கம் அநியாயமாக அறவிடுகின்றது.

இது பெற்றோல் என்கின்ற ஒரு பொருளில் மாத்திரம் நாளொன்றுக்கு அறவிடப்படும் தொகையாகும். இவ்வாறு ஏறத்தாள 80 வீதமானஅரசாங்க வருமானத்தினை பொதுமக்களாகிய எம்மிடமிருந்தே அரசாங்கம் அநியாயமாக அறவிடுகின்றது.இதன் காரணமாகவே மக்கள் இன்று தாங்க முடியாத பொருளாதார கஸ்டத்தில் வாழ்கிறார்கள்.

உயர் மரியாதைக்கும் அந்தஸ்த்துக்குமுரிய நம் நாட்டு வெளிநாட்டுத் தூதுவர் அரசியல்வாதி ஒருவரினால்பகிரங்கமாக அறையப்பட்டார். அதற்குக்கூட நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசாங்கம்தயாராக இருக்கவில்லை. இறுதியில் அறை வாங்கிய தூதுவரே தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு செல்லவேண்டிய நிலைக்கு நம் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருக்கிறது.

இந்நிலையில் BBS போன்ற இனவாதிகளினால் நாம்அச்சுறுத்தப்படுகின்ற போதும் தாக்கப்படுகின்ற போதும் இந்நாட்டில் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்..? அளுத்கம் போன்ற வன்முறைகளில் நாம் பாதுகாக்கப்படாமைக்கும் காரணம் இதுதான்.

நாம் அனுபவிக்கும் இவ்வாறான கஸ்டங்களெல்லாம் நமது மாற்ற முடியாத தலைவிதி என நமது மக்களில் பெரும்பாண்மையானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறாகும்.

அரசாங்கங்களை மக்களே தெரிவு செய்கிறார்கள். அதற்காகவே தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. நாம் புத்திசாலித்தனமாக எமது வாக்குரிமையைப் பயன்படுத்தினால் எமது தலைவிதி எனக் கருதும் கஸ்டங்களிலிருந்து மீள முடியும். அது நமது கைளில்தான் தங்கியுள்ளது.

நாடும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் சுபீட்சமாகவாழக்கூடிய ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் அக்குரணை அரபா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், கண்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் ஆகியோர் உள்ளிட்ட உலமாக்கள், புத்தி ஜீவிகள், சமூகத் தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Share it:

Post A Comment:

0 comments: