இறந்ததாக கருதப்பட்ட, தலிபான் தலைவர் முல்லா முகமது உமர், பாக்.,கில் கராச்சி நகரில் பதுங்கியுள்ளதாக, ஆப்கன் புலனாய்வு பிரிவு தலைவர், ரகமதுல்லா நபில் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது, ஏற்கனவே, மேற்கத்திய உளவு அமைப்புகள் கூறியதை உறுதி செய்வதாக உள்ளது என, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லா, உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால், அவர் கராச்சியில் பதுங்கியிருக்கிறார் என்பதில், ஆப்கான் உளவு அமைப்பு உறுதியாக உள்ளது. இதை, ஆப்கான் பாதுகாப்பு படையின் முப்பிரிவுகளும், திடமாக நம்புகின்றன. கராச்சியில், முல்லா பதுங்கியுள்ள இடமும், அவர்களுக்கு நன்றாக தெரியும். சில பாக்., போலீசாரும், அவர் இருக்கும் இடத்தை அறிவர்.
நபில் கூற்றுப்படி, தற்போது, முல்லாவுக்கு அடுத்த இடத்தை, முல்லா அக்தர் முகமது மன்சூர் என்றவர் பிடித்துள்ளார். இவர்தான் முல்லாவை தொடர்பு கொண்டு, அவரது உத்தரவுப்படி, தனக்கு கீழ் உள்ள பொறுப்புகளுக்கு, தளபதிகளை நியமிக்கிறார்.
தலிபான் செய்தி தொடர்பாளர், ஜபியுல்லா முஜாகித் கூறுகையில், 'கொரியர், கடிதங்கள் ஆகியவற்றின் பட்டுவாடாவை மோப்பம் பிடித்து, ஒசாமா பின்லேடனை, எதிரிகள் சுலபமாக வீழ்த்தி விட்டனர்; அத்தகைய நிலையை தவிர்க்கவே, முல்லா ரகசிய இடத்தில் தனிமையில் உள்ளார்' என, தெரிவித்து உள்ளார். இவ்வாறு, அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Post A Comment:
0 comments: