விடை தெரியாத விமான விபத்துகள்..!

Share it:
ad
விமானம் கண்டுபிடிக்க பட்ட பின்தான் நாடுகளிடையேயான பயணம் எளிதானது. இந்த மாபெரும் கண்டுபிடிப்பில் எப்படி நன்மை கிடைத்ததோ, அதே போல தீமையும் உள்ளது. விமான விபத்து மிகவும் கொடுமையானது. வானில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து ஒருவர் கூட தப்பிக்க முடியாது. மீட்புபணியும் கடினமாக இருக்கும். அப்படி இருக்க என்ன ஆனது என்றே தெரியாத விமான விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தொழில்நுட்ப கோளாறுகள், பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் விபத்துக்களுக்கான காரணம் தெரியும். ஆனால் மாயமான சில விமானங்கள் என்னவாயின என்பது புதிராகவே உள்ளது.

முதன்முதலில் 1948 ஜன., 30ம் தேதி பெர்முடா முக்கோணத்தில் 'ஸ்டார் டைகர்' என்ற விமானம் மாயமானது. விமானத்தின் பாகங்களோ, இறந்தவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை. அதில் 31 பேர் இருந்தனர். பெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் சில கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. இதை 'சாத்தான் முக்கோணம்' என அழைக்கின்றனர். 1949, ஜன.,17ல் 20 பேருடன் சென்ற 'ஸ்டார் ஏரியல்' என்ற விமானமும் இம்முக்கோணத்தில் மாயமானது. அது குறித்தும் எந்த தகவலும்தெரியவில்லை. 1968 செப்., 11ல் ஏர்பிரான்ஸ் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்த போது மாயமானது. அதில் 95 பேர் பயணம் செய்தனர். விசாரணையில் தீவிபத்து காரணமாக விபத்து ஏற்பட்டது என கூறப்பட்டது. பின் ஏவுகணை தாக்குதலிலோ, குண்டுவெடிப்பினாலோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பி.பி.சி., ரேடியோ தெரிவித்தது. இந்த குற்றத்தை மறைக்க பிரான்ஸ் அரசு, விமானம் மாயமானது என்று கூறியதாகவும் பி.பி.சி., தெரிவித்தது. 1980 ஜூன் 27ல் இத்தாலியின் பொலோனாவில் இருந்து கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி 81 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. 1988 டிச., 21ல் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட்க்கு போயிங் 747 விமானம் 259 பயணிகளுடன் கிளம்பியது. இது ஸ்காட்லாந்து அருகே விபத்துக்குள்ளானது. காரணம் எதுவும் தெரியவில்லை. விசாரணையில் லிபியா அதிபர் கடாபி அதை தாக்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 259 பேரும், தரையிலிருந்த 11 பேரும் பலியாகினர். 1996 ஜூலை 17ல் போயிங் ரக விமானம் நியூயார்க்கில் இருந்து பாரிஸ் நகருக்கு 230 பயணிகளுடன் கிளம்பியது. சில மணி நேரத்தில் விமானம் மாயமானது. எரிபொருள் டேங்க் வெடித்ததில் விபத்துக்குள்ளாயிருக்கும் என விசாரணையில் கூறினர். ஆனாலும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். உண்மையான காரணம் இன்று வரை தெரியவில்லை.

இந்த ஆண்டு மார்ச் 8ல் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் கிளம்பியது. 239 பயணிகளுடன் அந்த விமானம் என்ன ஆனதென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல டிச.,28ல் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர்ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயமாகியுள்ளது. இது ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதிநவீன தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்திலும் விமானங்கள் மாயமாக மறைவதும், விபத்துக்கான காரணம் தெரியாமல் இருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அச்சமில்லாமல் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும். 
Share it:

Post A Comment:

0 comments: