இரு பிரதான வேட்பாளர்களும் சிறுபான்மை மக்கள் குறித்து தெளிவுபடுத்துவது எப்போது..?

Share it:
ad
(சத்தார் எம் ஜாவித்)  

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட பிறகும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் சிறுபான்மை மக்களின் எதிர் காலத்திட்டங்கள் பற்றி இன்னும் வெளியிடாமல் மௌனமாக இருப்பது மக்கள் மத்தியில் பாரியதொரு தளம்பல் நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் தாம்தான் வெற்றி பெறுவோம் என்ற குரல்களை எழுப்புகின்றார்களே தவிர அவர்களின் எழுத்து மூலமான உத்தரவாதங்கள் இதுவரை வழங்கப்பட வில்லை. ஆனால் தேர்தலுக்கான நாட்கள்   நெருங்கிக் கொண்டே செல்கின்றன இந்த நிலையில் தமது திட்டங்களை வெளிப்படுத்தா விட்டால் இதன் மூலம் வாக்களிப்பவர்களின் ஆர்வம் குறைவடைவதற்கான சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றன காரணம் தேல்தல் வாக்குறுதிகள் வழங்கப்படா விட்டால் ஏன் தேவையற்ற விதத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற சோர்வான என்னங்களும் கூட மக்களிடத்தில் தோன்றலாம்.

இதேவேளை தேர்தல் என்ற விடயத்தில் சிறுபான்மை மக்களை எடுத்துக் கொண்டால் கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறுபட்ட துன்பகரமான மேடு பள்ளங்களை கடந்து இலங்கையில் தமது வாழ்வை நடாத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதியதொரு திருப்பு முனையில் ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த பல தஸாப்த கலாலமாக ஆட்சியை நடாத்திக் கொண்டிருந்த ஒரே கட்சியில் இருந்த இருவரும் இம்முறை தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிடுவதால் அவர்கள் இருவரும் மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர்களே இந்தவகையில் அவர்கள் ஒவ்வொருவரினதும் குணாதியங்களும், அரசியல் முன்னெடுப்புக்களும் கூட மக்கள் அறிந்துள்ளதால் அவர்களின் தேர்தல் வெற்றியிலும் இவை ஆதிக்கம் செலுத்தவுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

மேற்படி நிலைமைகளில் சிறுபான்மை மக்கள் பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களினதும் எதிர் கால தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆவளோடு எதிர் பார்த்த வன்னமுள்ளனர். காரணம் கடந்த காலங்கள் தாம் ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாறத் தயாரில்லை என்ற தீர்க்கமா முடிவுகளில் அவர்கள் உள்ளமையாகும் எனினும் ஆளுந்தரப்பில் மக்கள் அவ்வளவாக நாட்டங் கொள்ளாத நிலைமைகளையும் மக்களின் கள நிலையில் இருந்து வெளிப்படுகின்றது.

எனினும் தாம் யாருக்கு தமது வாக்குகளை அளிப்பது என்பதில் தற்போது முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அதிகமானவர்களின் மனங்களில் அரசியல் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்ற என்னங்களே அதிகம் காணப்படுகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சிறுபான்மை மக்களுக்கு சமயத்தை அடிப்படையாக வைத்து உடல், உள ரீதியாக வஞ்சித்த இரு இனவாதக் குழுக்கள் ஜனாதிபதியை ஆதரிப்பதுவேயாகும். இவர்கள் ஜனாதிபதியுடன் ஒட்டிக் கொண்ட பிறகு அதிமான முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையில் இருந்து தமது என்னங்களை மாற்றிக் கொண்டு செல்வதையும் நாளாந்தம் அறியக் கூடியதாகவுள்ளது.

உண்மையில் ஜனாதிபதிக்கு அதரவு வழங்குவதாக குறிப்பிட்ட இரு குழுக்களை அடித்துத் துரத்தாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர் பார்க்க முடியாத யதார்த்த நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு தருணத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் எதிர் காலத் திட்டங்களின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி தங்கியுள்ளது. காரணம் தற்போது பெரும்பான்மைக்குள் பாரிய தேர்தல் போட்டித்த தன்மைகள் காணப்படுவதால் சில வேளைகளில் அவை பலவாறு சிதறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதுடன் அவர்களுக்குள்ளேயே பாரிய முட்டி மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும்  அதிகம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படிச் சிதறல்களுக்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சில முக்கிய காரணங்களை தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான  ஜனாதிபதி வேட்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை அதிகமானவர்கள் விரும்பாத நிலை, அதிகாரங்கள் குறித்த ஒரு சிலரிடம் மையப்படுத்தப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியில் இருந்த அமைச்சர்களால் கூட தமது அமைச்சினை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்பட்டதா அதிலிருந்து விலகியவர்களின் வெளிப்படையான கருத்துக்கள், ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்துதல் என்ற  விடயத்தில் தற்போதுள்ள ஜனாதிபதி உடன்படாதிருப்பது போன்ற முக்கிய விடயங்கள்  அரசியல் வாதிகளின் பக்கத்தில் இருந்து சுட்டிக்காட்டப்படும் விடயங்களாகும்.

இதேவேளை மக்கள் மத்தியில் இருந்து பொருட்களின் விலைவாசிகள், அபிவிருத்தியில் பாரபட்சம், அரச நியமனங்களில் அரசியல் செல்வாக்குள்ளவர்களின் ஆதிக்கங்கள், பொதுச் சொத்துக்களின் வீண்விரயங்கள் என பல விடயங்கள் இன்று முன்வைக்கப் பட்டுள்ளதுடன் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் கடந்த இரண்டரை வருடங்களாக மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய சமய ரீதியான இனவாதிகளின் தாக்குதல்கள், கடந்த ஐந்து தஸாப்ப காலத்திற்கும் மேலாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவற்றை அனுபவிக்க விடாது பெரும்பான்மை என்ற ஆதிக்கத்தின் காரணமாக இன்று வரை அரசியலமைப்புச் சட்டங்களை மீறி நடந்தமைகள், முஸ்லிம் எதிர்ப்புக் குழுக்கள் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளமை உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் இன்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பலவாறான விடயங்கள் காரணமாக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கும் நிலைமைகள் காணப்படுவதுடன் அவர்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்படும் என்ற எழுத்து மூலமான உத்தரவாதங்களின் அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பது என்ற இறுதி முடிவை சிறுபான்மை மக்கள் எடுக்க வேண்டிய நிலையிலும் உள்ளனர். மேற்படி எதிர் பார்ப்புக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரால் வழங்கப்படும் என்ற விடயம் முக்கியத்தவம் வாய்ந்ததாக பேசப்படுகின்றது.

என்றுமில்லாத வகையில் எதிர் வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படும் ஒன்றாகவே அவதானிக்கப்படுகின்றது. காரணம் அதிகமான கட்சித்தாவல்கள் அதுவும் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளுக்கிடையில் அவரவர்களின் கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருந்தவர்கள் கட்சி மாறியமை வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் அரசியல் வாதிகளை குழப்பநிலைமைகளுக்கும் உள்ளாக்கியுள்ளது எனலாம்.

குறிப்பாக ஒரு சில அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து விட்டு தற்போது அவர்களின் சுகபோகங்களுக்காக பணத்தை அடிப்படையாக வைத்து மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுள்ளதையும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுகின்றது.

இவ்வாறு யார் யாரெல்லாம் கட்சி மாறினாலும் அரசியல் கண்ணோட்டத்தில் சிறுபான்மையினர் அரசியலில் முன்னிலைக்கு வர முடியாது எனினும் அந்த அரசியல் கட்சிகளை ஆட்சியில் அமைப்பதற்கு தீர்மாணிக்கும் முக்கியத்துவம் உடையவர்களாக முன்னிலை அடைய முடியும்.

இந்த விடயத்தை சரியான முறையில் திட்டமிடாவிட்டால் அது எதிர் காலத்தில் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கே ஆபத்தான விடயமாக அமைந்து விடும் என்பதுடன் அது கடந்த காலங்களை விடவும் பாரிய அவல நிலைக்கு இட்டுச் செல்லலாம் என அரசியல் ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்படுகின்றது.

சிறுபான்மை வாக்காளர்கள் என்ற வகையில் அரசியல் தலைமைகளை  சொல்வதற்கெல்லாம் தலைசாய்ப்பது எதிர் காலத்தில் சாத்தியமான விடயங்கள் அல்ல மாறாக கடந்த கால அரசியல், பொருளாதார, கலாச்சார விடயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் எதிர் கால அமைதி, சமாதானம் என்பனவற்றை கருத்திற் கொண்டு சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் விளங்குகின்றது.

எனவே ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தந்திரோபாயங்களையும், கடந்த காலங்களில் ஏமாற்று அரசியல் கலாச்சாரத்தையும் விட்டுவிட்டு தளம்பலாக இருக்கும் பெரும்பான்மை வாக்குகளை விட முழுமையாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளே பெறுமதியானது என்பதனை கருத்திற் கொண்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உறுதியான தேர்தல் விஞ்ஞானபனத்தை வெளியிட்டு அதற்கான உத்தரவாதங்கள் மூலம் வாக்குகளைப் பெறுவதே வெற்றிக்கான ஆரம்பங்களாகும்.
Share it:

Post A Comment:

0 comments: