தொழுகைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது நாமே - மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad
தமது சகோதரர்களை விமர்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்கள் தொடர்பில் நாம் ஒருபோதும் விமர்சித்ததில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுமே அவர்களை சேறுபூசும் வகையில் விமர்சித்தவர்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிறரை இகழ்ச்சி செய்து சேறு பூசி மக்கள் ஆதரவைப் பெற முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்கள் நம்பிக்கையை வெல்வது முக்கியம் என்றும் மக்கள் நம்பிக்கையை நாம் ஒரு போதும் சிதைத்ததில்லை. எதிர்காலத்திலும் அதனைப் பாதுகாப்போம் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, எஸ்.பி. திசாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, ரெஜினோல்ட் குரே, பிரதியமைச்சர் அப்துல் காதர் உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நான் ஒரு அமைச்சையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன். சுகாதாரத்துறை அமைச்சு அது. அத்துறையின் முன்னேற்றத்திற்காக பில்லியன் கணக்கில் நிதியையும் வழங்கினோம். எனினும், அந்த துறை முன்னேற்றமடையவில்லை என்று அவர் தற்போது விமர்சனம் செய்கிறார். அமைச்சையும் வழங்கி போதியளவு நிதியையும் வழங்கியுள்ள போது அதனை சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் போவது அவரது பிரச்சினையே. அதற்கு நான் பொறுப்பல்ல.

எனது சகோதரர்கள் பற்றி தற்போது விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. எனது சகோதரர்களை நான் அரசியலுக்கு நியமிக்கவில்லை. எனது சகோதரர் சமல் ராஜபக்ஷவுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே நான் அந்த பதவியைப் பொறுப்பேற்றேன். எனது சகோதரர்களை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே அரசியலுக்குக் கொண்டு வந்தார். அதனால் நாம் அவரை மதிக்கின்றோம். அவரது படங்கள் எமது வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ளன. நாம் பழையதை மறப்பவர்களல்ல.

எமது தந்தையார் முதல் எமது குடும்பத்தினர் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். நாம் எமது சகோதரர்களில் கோதாபய ராஜபக்ஷவை மட்டுமே நான் நியமித்தேன். அதுவும் அரசியலிலல்ல. பாதுகாப்பு செயலாளராகவே நியமித்தேன். பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தத்தில் நம்பிக்கையான ஒருவர் அவசியம் என்பதால் அவரை நான் நியமித்தேன்.

மைத்திரிபால சிறிசேன மீது குற்றஞ் சுமத்தியவன் நானல்ல. ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பி. அநுரகுமார திசாநாயக்கவுமே முதலில் மைத்திரி மீது சேறு பூச ஆரம்பித்தனர் என்பதை சகலரும் அறிவர். நாம் எவருக்கும் சேறு பூசவில்லை.

பிறரை இகழ்ச்சி செய்து மக்கள் ஆதரவைப் பெற முடியாது. மக்கள் அவ்வாறு வாக்களிக்கவும் மாட்டார்கள்.

இது நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பமாகும். இதனை நான் பொறுப்புடன் கூற வேண்டும். இதற்கு மக்கள் நம்பிக்கை மிக முக்கியமாகும்.

நாம் திஸ்ஸ அத்தநாயக்கவை அழைத்தபோது அவர் அவரது கட்சித் தலைவரைச் சந்தித்து முறைப்படி தமது ராஜினாமாக் கடிதத்தை வழங்கி விட்டே வந்தார். தமது சகாக்களிடம் முறையாக விடை பெற்றுக் கொண்டே எம்மிடம் இணைந்து கொண்டார். அவர் நாட்டுக்காக இத்தகைய தீர்மானத்தை எடுத்தார். அவரது செயற்பாடு பெருந்தன்மையானது. அதுதான் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு.

எமக்கு நிந்தை செய்தவர்களை நாம் எப்படி நம்புவது? மக்கள் எப்படி நம்புவர்? இது கட்சியை மட்டுமல்ல நாட்டையும் பாதிக்கும். இது நம்பிக்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நாடு. இதில் எதிர்கால சந்ததியின் எதிர்காலமும் தங்கியுள்ளது. சமூகத்தின் நம்பிக்கை.

யுத்தத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என எம்மை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டை மீட்டு அச்சம், பயமில்லாத சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். யாழ் தேவி ரயில் சேவையை மீள ஆரம்பித்துள்ளோம் மக்களை மீள குடியேற்றியுள்ளோம் அது குற்றமா என நான் கேட்க விரும்புகின்றேன்.

வடக்கில் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களும் வாழ்ந்தனர். முஸ்லிம்கள் 2 மணித்தியாலங்களுக்குள் வடக்கிலிருந்து துரத்தப்பட்டனர். காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவற்றைச் செய்தது யார்? எனினும் நாம் இனவாதிகள் என்றும் உலகிற்குக் காட்ட முற்படுகின்றனர்.

வானொலியில் ஐந்துவேளை தொழுகையை ஒலிபரப்புவதை தடைசெய்ய போவதாக சிலர் பிரசாரங்களை முன்னெடுத்தனர். அவ்வாறு தொழுகைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது நாமே. சிறு சிறு சம்பவங்களை பூதாகரமாக்கி உலகிற்குக் காட்ட முற்பட்டனர்.

எவரும் எதனையும் கூறுவதை நம்பக்கூடாது. நாம் கொல்வதையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. எனினும் எது உண்மை? எது பொய் என ஆராய்வது முக்கியம்.

மக்கள் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம், மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் சிதைத்ததில்லை. எதிர்காலத்திலும் சிதைக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)
Share it:

Post A Comment:

0 comments: