''மக்களின் முடிவு''

Share it:
ad
-ஏ.எல்.நிப்றாஸ்-

மேய்ப்பர்கள் வழிதவறுகின்ற போது, புத்தியுள்ள ஆடுகள் மேய்ப்பர்களை விட்டு விலகி சரியான வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கலாம்.

ஆதலால், எந்தக் கட்சி என்ன முடிவை எடுக்கப்போகின்றது? வாக்காளப் பெருமக்களுக்கு எவ்விதமான கற்பிதங்களைச் சொல்லி பேய்க்காட்டப் போகின்றது என்பதைக் காட்டிலும் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்கப் போகின்றனர் என்பதே தேர்தலை பொறுத்தமட்டில் முக்கியமானதாகும்.

இரண்டு முறை இந்த நாட்டை ஆட்சி செய்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த காலப்பகுதிக்காக போட்டியிடும் முடிவை எடுத்திருக்கின்றார். அதேபோல் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு இத்தனை காலமும் அதன் வரப்பிரசாதங்களை எல்லாம் சுகித்துவிட்டு இப்போது எதிரணிப் பக்கம் தாவி பொது வேட்பாளராகியுள்ள மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான மக்களாணையை வேண்டி நிற்கின்றார். 

இவ்வாறான ஒரு அரசியல் பின்புலத்தில் பெரும்பான்மை கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளும் யாரை ஆதரிக்கப் போகின்றன என்பதே மக்கள் மனதில் இன்று வியாபித்துள்ள கேள்வியாகும். இன்று வீட்டில் என்ன கறி சமைப்பது என்ற கவலையை  விடவும்,  யார் எந்தக் கட்சிப்பக்கம் தாவியுள்ளனர்? முஸ்லிம், தமிழ் கட்சிகள் யாரை ஆதரிக்கப் போகின்றன? என்ற விடயங்களின் மீதே எல்லோரும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். 

சுதந்திரக் கட்சியில் கடைசித் தருணம் வரைக்கும் செயலாளராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யார் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாலும் இத்தனை எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் இருந்திருக்காது. கடந்த முறை போல எந்தவித ஆரவாரமும் இன்றி ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டு விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த ஆளும் தரப்பிற்கு சந்திரிகாவின் பக்கபலத்துடன் மைத்திரி களமிறங்கியுள்ளது மிகுந்த சவாலாக ஆகியிருக்கின்றது. 

இப்போது நம்மை காண்பவர்கள் எல்லோரும் 'மைத்திரிதான் வெற்றி பெறுவார்' என்று சொல்கின்றனர். இது பக்குவமடையாத கருத்துக்களாகும். இப்படித்தான் 2010 இல் பொன்சேகா போட்டியிட்ட வேளையிலும் கூறினர். எனது தனிப்பட்ட அபிப்பராயப்படி இந்த நிமிடம் வரைக்கும் ஒரு வாக்கினால் என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ வெல்வதற்கான சாத்தியங்களே இருப்பதாக தோன்றுகின்றது. ஆனால் மைத்திரியை முன்னிறுத்தி மேலெழுந்து வரும் அலை மிகவும் அபரிமிதமானது. பொன்சேகாவுக்கு ஏற்பட்ட ஆதரவையும் எழுச்சியையும் காட்டிலும் இது வேறுபட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் மேற்சொன்ன அபிப்பிராயத்தில் மாற்றம் வரலாம்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்னும் தமது ஆதரவு யாருக்கு எனும் முடிவை அறிவிக்கவில்லை. தமிழ் - முஸ்லிம் அரசியலில் மிகப் பிரதான கட்சிகளாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் மைத்திரியின் பக்கம் வெளிப்படையாக இணைந்து கொண்டால் ஆளும் தரப்பு 'பிரிவினைவாதம்' என்றே இதனை பிரச்சாரம் செய்யும். அதனால் மைத்திரியின் வெற்றியும் பாதிக்கப்படலாம். இவ்வாறான மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதற்கு அதுவும் ஒரு உப காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் ஆளும் கட்சியில் பெருமளவுக்கு நம்பிக்கை இழந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவுக்கே வரும். ஆனால் வெளிப்படையாக ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியாமல் போகும்.

இதேவேளை சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கின்றது. அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதே முடிவையே எடுத்திருக்கின்றது. பெரும்பாலான முஸ்லிம்களின் நேசத்திற்குரிய கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட கூட்டங்களை முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திக் கொண்டிருக்கின்றது. சில வாக்குவாதங்களோடு கூடிக் கலையும் கூட்டங்களாகவே இவை இருந்து கொண்டிருக்கின்றன. அதற்கப்பால் இக் கூட்டங்களில் இறுதி முடிவொன்றை எடுப்பது இன்று வரை சாத்தியப்படவில்லை. 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருக்கும் ஒரு சிலரே மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரளிக்க வேண்டுமென்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுள் இருவர் மாகாண சபை உறுப்பினர்கள். ஆனால் இவர்கள் சொல்கின்ற நியாயங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்று கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். மு.கா.வுடனான சந்திப்புக்களை அடுத்து கரிமலையூற்று பள்ளிவாசலை மக்களிடம் ஒப்படைத்தமை, ஒலுவில் கடற்படை முகாமை அகற்றியமை போன்ற நல்லெண்ண நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தாலும், மு.கா. இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. 6 வருட பதவிக்காலத்தை கொண்ட ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய ஆதரவளிப்பதாயின் இதனைவிட பெரிய கோரிக்கைகளை ஆளும் தரப்பு நிறைவேற்றி தர வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக இருக்கின்றது. ஆனால் யாரை ஆதரரிப்பது என்பதில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

அரசியல்வாதிகள் ஒரு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்த முறை தேர்தல் மாறுபட்டதொரு தோற்றப்பாட்டை எடுத்திருக்கின்றது. அதாவது இந்த தேர்தலில் கட்சிகள் முடிவெடுக்க முன்னமே மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். பொதுவாக சிறுபான்மை கட்சிகளாலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளாலும் மக்களின் முடிவில் ஒரு இம்மியளவு மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது.  என்னதான் வீடுவீடாக வாக்குப் பிச்சை கேட்டாலும் எவ்வளவு பணத்தை கொட்டி இறைத்தாலும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்புகின்றவர்களையும் பேசிப் பேசியே காலத்தை கழிக்கின்றவர்களையும் நம்பி மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. 
மக்களுக்கு எல்லாம் தெரியும். முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுத்துமாத்து வேலைகள், மோசடிகள், சமூகத் துரோகங்கள் எல்லாம் விலாவாரியாக மக்களுக்கு தெரியும். அரசியல்வாதிகளை விட நன்றாக அரசியல் தெரிந்த பொது மகன்களை நான் தேனீர் கடைகளில் கூட சந்தித்திருக்கின்றேன். அந்தளவுக்கு அரசியல், சமூக, பொருளாதார அறிவுள்ளவர்களாக இன்றைய மக்கள் இருக்கின்றார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் புத்தி சொல்லத் தேவையில்லை. நீங்கள் காசு செலவழித்து நடாத்துகின்ற கூட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகவே இம்முறை இருக்கப் போகின்றது. எனவே நீங்கள் முடிவுகளை எடுப்பதற்காக அடிக்கடி கூட்டம் கூடுவதும் வீணானதே. 

அதேபோல் வாக்காளப் பெருமக்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டியுள்ளது. அதாவது – நீங்கள் யாருக்காகவும் வாக்களிக்கத் தேவையில்லை. கட்சித் தலைவர்களாகவுள்ள எந்த முஸ்லிம் அமைச்சர்களுக்காகவோ அல்லது வேறெந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்காகவோ நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. அவ்வாறு வாக்களிக்க வேண்டிய கட்டாயமும் உங்களுக்கு இல்லை. முஸ்லிம்கள் இனவாதிகளின் நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட நேரத்தில் அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இப்போது வாக்குகேட்கும் தார்மீக உரிமை கிடையவே கிடையாது. 

மக்களாகிய உங்களுக்கு எல்லாம் தெரியும். வெகுஜன ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் கையடக்க தொலைபேசி வழியாகவும் எல்லாவிதமான செய்திகளும் அரசியல் நகர்வுகளும் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. நீங்கள் எந்தக் கூட்டத்திற்கும் போக வேண்டிய அவசியமும் இல்லை, குடும்பத்தினருடனும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் சண்டைபிடிக்க வேண்டியதுமில்லை. 

நீங்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டீர்கள். வேண்டுமென்றால் மீண்டுமொருமுறை உங்களது மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள். மஹிந்த ராஜபக்ஷவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா - யார் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று உங்கள் உள்மனது சொல்கின்றதோ அவருக்கு வாக்களிப்பதற்கு அறுதியும் உறுதியுமான முடிவை எடுங்கள். அதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.  

முடிவெடுத்துவிட்டு செயற்படாமல் விடுவது –
வயலை உழுதுவிட்டு விதைக்காமல் விடுவதற்கு ஒப்பானது! 
Share it:

Post A Comment:

0 comments: