பொறுக்காதவர்களே, பொறாமையில் சகோதரர் நிறுவனம் என விமர்சிக்கின்றனர் - பிரதமர் ஜயரத்ன

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இம்முறையும் அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவதை மைத்திரிபால சிறிசேனவால் அல்ல வேறு எவராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்டுவிட்டு விடியற்காலையில் கட்சியைக் காட்டிக் கொடுத்த மைதிரிபால சிறிசேனவை நம்பி மக்கள் வாக்களிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குள்ள மக்கள் ஆதரவை எவராலும் தடுத்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் நேற்று நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, எஸ், பி. திஸாநாயக்கா, விஜித் விஜயமுனி சொய்சா, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள், பெருமளவிலான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்- மிக நேர்மையாக அரசியல் செய்த திஸ்ஸ அத்தநாயக்க அவரது கட்சியில் நம்பிக்கை இழந்த நிலையிலேயே அரசாங்கத்தோடு இணைந்துள்ளார்.

இந்த முடிவை அவர் அவசரமாக எடுக்கவில்லை. ஆரம்பித்திலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளில் அவர் அதிருப்தியடைந்தவர் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருந்தேன்.

சகோதர நிறுவனம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விமர்சிப்பவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்வது முக்கியம். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளில் சகோதரர்கள் இணைந்து பல தடவைகள் அரசாங்கம் அமைத்துள்ளமையைக் குறிப்பிட வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னோடிகள் கட்சியைக் கட்டியெழுப்புவதில் டீ. ஏ. ராஜபக்ஷ ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர். சகோதரர்கள் இணைந்து வெற்றிகரமாகச் செயற்படுவதைப் பொறுக்காதவர்களே பொறாமையில் சகோதரர் நிறுவனம் என விமர்சிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேன இரவில் நன்றாக எம்மோடு அப்பம் சாப்பிட்டுவிட்டு காலையில் சொல்லிக் கொள்ளாமல் கட்சியை விட்டுச் சென்றவர், மக்கள் அவரில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அக்கட்சியிலிருந்து அரசாங்கத்திடம் இணைந்த போது முறைப்படி எழுத்து மூலம் தமது பதவி விலகலை அறிவித்துவிட்டு, என்ன காரணத்திற்காக கட்சியிலிருந்து விலகநேர்ந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டே அரசாங்கத்துடன் இணைந்தார்.

எனினும் மைத்திரிபால சிறிசேன கட்சியைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டவர்களிடம் கூட சொல்லக் கொள்ளாமல் திருட்டுத்தனமாக சென்றவர். இவரை மக்கள் நாட்டின் தலைவராக்குவது ஒரு போதும் நடக்காது. மக்கள் மனதில் இடம் பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே அமோக ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாவார். இதை எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: