திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் விக்கிரமிச்ஙகவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் விபரம்

Share it:
ad
1989 இல் பாராளுமன்ற அரசியலில் கால்பதித்தவர் திஸ்ஸ அத்தநாயக்க. அவரது பல்கலைக்கழக காலத்திலேயே அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அவர் விளங்கினார்.

08-12-2014 தினம் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியிருந்தார். அதில் 2006 ஆம் ஆண்டு அக்கட்சியின் பொது மாநாட்டின் போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தமக்கு வழங்கியதாகவும் அன்றிலிருந்து இன்று வரை தாம் அப்பதவியைப் பொறுப்புடன் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் இதுவரை காலமும் தம்மீது நம்பிக்கை வைத்து அப்பதவியைத் தொடர வழிவகுத்தமைக்கு நன்றி எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியைப் பாதுகாத்து பிளவுபட்டிருந்த அக்கட்சியை ஒன்றிணைத்து மீள வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் தலைமைத்துவமும் எதிர்கொண்ட பல்வேறு உள்ளக மற்றும் வெளி சவால்களின் போது தலைவரையும் கட்சியையும் பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அண்மைக்காலமாக கட்சிக்குள் தொடர்ந்த நிலமை தொடர்பில் நான் மிகுந்த கவலைப்பட்டேன். கடந்த இரண்டு தசாப்த காலமாக மிக மோசமான நிலையிலிருந்த கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

எனினும் பொது அபேட்சகரான மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது ஆதரவாளர்களினாலும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நல்லது நடக்காது என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொண்டேன். இதனை கடந்த ஞாயிறு தேசியப் பத்திரிகையொன்று மேலும் நிரூபணமாக்கியிருந்தது. அச்செய்தியில், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் மைத்திரிபாலவும், சம்பிக்க ரணவக்கவும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளமை எனக்குத் தெரிய வந்தது.

இதிலிருந்து உணர வேண்டியது என்னவென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தம் வியர்வை கண்ணீர் மற்றும் உழைப்பைப் பெற்று இம்முறை ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டு வேறு கட்சியை அமைத்துக்கொண்டு எமது கட்சியினரை காலால் எட்டி உதைத்துத் தள்ளுவதே. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் உங்களுக்கிருக்காது.

அண்மைக்காலமாக கட்சியின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி கட்சியின் பொதுச் செயலாளரான எனக்கு அறிவிக்கவில்லை. குறைந்த பட்சம் உடன்படிக்கை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கூட இது வரை எனக்குக் காட்டவில்லை. உத்தேசித்துள்ள சர்வ கட்சி அரசாங்கம் பற்றியோ அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உள்ளக இணக்கப்பாடுகள், உடன்படிக்கைகள் பற்றி கூட எனக்கு இதுவரை தெரிவிக்கவில்லை.

இது இவ்விதமிருக்க கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் உருவாகி கடந்த காலங்களில் கட்சியைப் பாதுகாத்து வந்த எம்மை அடிமைப்படுத்தும் அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு வருவதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இத்தகைய சக்திகளிடமிருந்து கட்சியைப் பாதுகாத்து உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமை அவதானிப்புக்குள்ளாகிறது. 
Share it:

Post A Comment:

0 comments: