''வதந்திகளைப் பரப்ப வேண்டாம்'' ஹசன் அலி

Share it:
ad
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் முஸ்லிம் காங்கிரஸ், அரசிலிருந்து வெளியேறி மைத்திரிபாலவை ஆதரிக்கும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்தக் கருத்தை மறுத்துள்ள அவர் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹசன் அலி மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. யாருக்கு  ஆதரவளிக்கும் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதுவரை இறுதி முடிவு  எட்டப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றைய கூட்டத்தில் கருத்துத்  தெரிவிக்கும்போது "நாளை அரசின் முக்கியமான அமைச்சர்களுடன் சந்திப்பொன்று  இடம்பெறவுள்ளதாகவும் இந்தச் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு பற்றி ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர்களை கட்சித் தலைவர் சந்தித்து கலந்துரையாடியதும் சில தினங்களில் மு.காவின் அரசியல் அதிஉயர் மட்டத்தினர் கூடி ஆராய்வர்.

இதன்போது அமைச்சர்களுக்கும் கட்சித் தலைவருக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பட்ட திருப்பங்கள் ஆராயப்பட்டு உயர் பீடம் ஒரு முடிவை எடுக்கும். இந்த முடிவு எடுக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைவர் ஹக்கீம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை சில தினங்களில் அறிவிப்பார் எனக் கூறினார்.

Share it:

Post A Comment:

0 comments: