மைத்திரிபால சிறிசேன, வாய்திறக்கக் கூடாதென இனவாத கட்சிகள் தடைபோட்டுள்ளன - உதுமாலெப்பை

Share it:
ad
தமிழ் மக்களுக்கு நாங்கள் சிறந்த பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளோம். அவ்வாறு முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தகுந்த பாடம் கற்பிப்போம் என்று பகிரங்கமாக கூறிய சம்பிக்க ரணவக்கவும், இதேபோன்று இனவாதத்தை கூறிவரும் ஜே.வி.பியும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியின் பக்கம் சென்றுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் எங்கனம் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் வழங்குவதற்கு இவர்களால் முடியுமென்பதை சிறுபான்மைச் சமூகங்கள் சிந்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

சம்மாந்துறையில் விவசாயிகளுக்கான வரட்சி நிவாரண காசோலைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம், பயங்கரவாதத்தினால் இந்த நாட்டில் இரத்தாறு ஓட்டப்பட்டு வந்ததை நாம் அனைவரும் மறவோம். இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரநோக்கான சிந்தனையினால் இதற்கான முடிவுகட்டப்பட்டு நாடு சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் அழித்து துடைத்தெறிந்த ஜனாதிபதியை சர்வதேசம் இன்று  குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முட்பட்டு வருகின்றது. யுத்தத்தை முடித்து நாட்டை அபிவிருத்தியின் பாதைக்கு கொண்டு செல்லும் இத்தறுவாயில் பல சதிமுயற்சிகளும், நாட்டை சர்வதேசத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன. எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் அது அவருக்கான அல்லது நாட்டுக்கான வெற்றியாக அமையாது. அது சர்வதேசத்தின் வெற்றியாகவே அமையும்.

நாட்டிலே சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் இல்லாமலில்லை. பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தோன்றியது அல்ல. ஓவ்வொரு ஆட்சியாளர்கள் காலத்திலிருந்தும் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. இவ்வாறான பிரச்சினைகள் தோன்றும் போது நாங்கள் ஆளும் கட்சி என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருந்ததில்லை. கிழக்கு மாகாண சபையில் நாடுநகர சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்த போது அது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக அன்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட நாங்கள் வன்மையாக கண்டித்து எதிர்த்தோம். ஆதலால் அவ்வேளை அது தடுக்கப்பட்டது.

யுத்தத்தை முடித்த கையோடு நாட்டில் இருந்து வந்த அத்தனை பிரச்சினைகளையும் இரவோடு இரவாக தீர்த்துவிட முடியாது. எல்லா இனங்களிலும் இனவாதம் பேசுபவர்கள் உள்ளனர். ஜனாதிபதி பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை என்பதற்காக தற்போது எதிரணியில் செல்வது சட்டியிலிருந்து அடுப்புக்கள் விழுந்த கதையாக மாறிவிடக் கூடாது. எதிரணியிலுள்ளவர்களின் பிற்புலங்களையும், அவர்களது அரசியல் பின்னணிகளையும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் உற்று நோக்க வேண்டும்.

ஏதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அம்பாறை கரையோர மாவட்டம் வழங்கப்படுமா? மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா? வடக்கிலிருந்து இரானுவம் வெளியேற்றப் படுமா? தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கான பாதுகாப்பு, காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா? என்பதனை அவாரால் கூறமுடியுமா என்று கேட்டுக் கொள்கின்றேன். இவைகள் பற்றி வாய்திறக்கக் கூடாதென்று அங்குள்ள இனவாதக் கட்சிகள் தடைபோட்டுள்ளன.

சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய துணிவும், தைரியமும், சந்தர்ப்பமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது. எனவேதான் மீண்டும் எமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறுபான்மை சமூகத்தினர் தட்டிக்கழித்து விடக்கூடாது.

குறிப்பாக விவசாயிகள் இந்த அரசாங்கத்தை மறந்துவிட மாட்டார்கள். விவசாயத்துறைக்கு எந்தவொரு அரசாங்கமும் செய்திராத பல நன்மைகளை துணிச்சலுடன் எமது ஜனாதிபதி செய்துள்ளார். ஒரு கால கட்டத்தில் நெல்லை விற்க முடியாமல் திண்டாடியதுடன் விவசாயச் செய்கைக்கான அதிக செலவீடுகளயும் எதிர் நோக்கி இருந்தனர். அதாவது ரூபா 6000 பெறுமதிமிக் உரத்தனை ரூபா 350வுக்கு இன்று வரை வழங்க்கப்பட்டு வருகின்றது.  மேலும் ஒரு போதும் இல்லாத வாறு நெல்லுக்கான உத்தரவாத விலையை 01 கிலோவுக்கு ரூபா 40 வாகவும் உயர்த்தி விவசாயத்துறைக்கு புத்துயிரழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்தகால யுத்தத்தின் போது 30 வருடங்களாக கைவிடப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகள் இன்று மீட்டெடுக்கப்பட்டு அதில் எமது ஏழை விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு தமது ஜீவனொபாயத்தைப் பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

எனவேதான் நாம் அனைவரும் கடந்து வந்த பாதையை ஒரு கனம் மீட்டுப்பார்க்க வேண்டும். இதற்கான மாற்றங்களை ஏற்படுத்தியவர் யார் என்பதனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


Share it:

Post A Comment:

0 comments: