ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் வெள்ள நிலைமை ஏற்படினும் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்புரை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவால் நேற்று வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக தரப்பினர் தெரிவித்தனர்.
அதாவது தேர்தல் சமயத்தில் வெள்ளம் ஏற்படுமாயின் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்குத் தேவையான படகு மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்தினமே வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை அனுப்பப்படவேண்டும். அதுபோல் தேர்தலின் பின் வாக்குப் பெட்டிகள் உடனடியாக வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துவரப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலைமையில் வெள்ளம் ஏற்படுமாயின் இதனைச் சமாளிப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டுமென்ற ரீதியிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.
மேலும் தாழ் நிலங்களில் வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுமாயின் மேட்டுநிலப்பகுதியிலுள்ள கட்டிடங்களை தேர்தல்கள் அலுவலர்கள் ஏற்பாடு செய்யவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ளத் தவறவிட்டவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளதாக தேர்தல் செயலக தரப்பினர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலர்கள் ஆகியோருடனான சந்திப்பை தேர்தல்கள் ஆணையாளர் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


.jpg)
Post A Comment:
0 comments: