முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திற்கு பகிரங்க மடல்...!

Share it:
ad
(நவாஸ் சௌபி)

ஜனாதிபதித் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் இறுதி முடிவு குறித்து இருபக்க வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ள நிலையில் பெரும்பான்மையானோர் மைத்திரியே ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு கட்சியின் முடிவை எடுக்கும்படியே கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ன முடிவினை எடுக்கின்றது என்று காத்திருந்து அதன் முடிவினை சரியா பிழையா என்று விமர்சிப்பதைவிடவும் அது முடிவினை எடுப்பதற்கு முன்னர் சில அவதானங்களை முன்வைப்பதும் எமக்குள்ள தார்மீகப் பொறுப்பாகும். 

இன்றுள்ள அரசியல் நெருக்கடிகளும், அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த பௌத்த தீவிரவாத செயற்பாடுகளும் மஹிந்த அரசுடன் மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வும் மைத்திரியை ஆதரிப்பதற்கான நேரடி முடிவினை எடுப்பதற்கு பெரும்பான்மையானோரின் கருத்துக்கள் முன்நிற்கின்றன. என்பதிலுள்ள யதார்த்தரீதியான முடிவில் நியாயமில்லாமல் இல்லை.

இந்த யதார்த்தத்திற்கும் நமது மனச்சாட்சிகளுக்கும் அப்பால் அரசியல் மதிப்பீடும் கணிப்பீடும் எத்தகைய முடிவினை அடையும் என்ற நடைமுறைசார் எதிர்பார்ப்புகளையும் முடிவுகளையும் புறம்தள்ளிவிட்டு உணர்ச்சிவசப்பட்ட முடிவுக்கு மட்டும் இடமளிப்பதில் எமது அரசியலின் எதிர்காலமும் தேசிய அரசியலில் அதன் வகிபங்கும் இன்னும் பலமிழந்துவிடும்.

மக்களின் கொந்தளிப்பிலும் எதிர்ப்புணர்விலும் உள்ள நியாயங்களை நாங்கள் பிழை என்றோ அதனை மாற்றியமைக்க வேண்டுமென்றோ இத் தேர்தலுக்கான பிரச்சாரங்களைச் செய்ய முடியாது என்ற நியாயம் ஒருபக்கமிருந்தாலும். மக்களின் மனநிலையிலுள்ள நியாயங்களுக்கு அப்பால் ஒரு சமூகக் கட்சி முடிவெடுப்பதிலுள்ள அரசியல் நியாயங்கள் இதில் ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்ற பொறுப்பினை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் உணர வேண்டும்.

தனிப்பட்டவர்களின் அரசியல் எதிர்காலத்தினையும் சுயநலமான அரசியல் போக்குகளையும் கொண்ட முடிவினை நோக்கி முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவினை எடுக்கும் ஒரு காலகட்டம் இதுவல்ல. மாறாக சமூக அரசியலைச் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்தில் தேசிய அரசியலில் கிடைக்கப் போகும் பலம் மற்றும் அதன் செல்வாக்கு பற்றியே அது தனது முடிவினை நிலைநிறுத்த வேண்டும்.

அத்தகைய ஒரு முடிவினை எடுப்பதிலுள்ள வாதப் பிரதிவாதங்கள் எத்தகையது என்பதை குறிப்பிடுவது இக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.

தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் மக்களின் கொந்தளிப்பான மனநிலைகள் என்பனவற்றை கருத்தில் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முதலில் எடுக்க கூடிய சிறந்த முடிவு அது நடுநிலை வகிப்பது ஆகும். 

ஆனால் அரசாங்க அமைச்சராகவும் கிழக்கு மாகாணசபையில் அரசின் ஆட்சிக்கு கூட்டாகவும் இருப்பதனால் நடுநிலை என்ற முடிவை எடுப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. இவை இரண்டையும் அவ்வாறே வைத்துக்கொண்டு நடுநிலையாக இருக்க முடியாது என்பதுதான் அந்த சிக்கல். அந்தவகையில் நடுநிலை வகிப்பதானால் இவை இரண்டும் இல்லாமல் அரசதரப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏற்படும்.

அவ்வாறு நடுநிலையாக இல்லாமல் அதிகப்படியானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படியாக மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்தால்கூட அரசாங்கத்தைவிட்டு வெளியேறவே வேண்டும். எனவே நடுநிலையாக இருப்பதானாலும் மைத்திரியை ஆதரிப்பதானாலும் அரசைவிட்டு வெளியேறும் நிலைதான் இருக்கிறது. இதன்படி மைத்திரியை ஆதரிப்பதற்காக அரசிலிருந்து வெளியேற முடியுமானால் நடுநிலையாக இருப்பதற்கு அந்த வெளியேற்றத்தைச் செய்வதே இங்கு ஆகவும் பொருத்தமுடையதாக இருக்கும்.

ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு சேர்ந்தாலும் சேராவிட்டாலும் முஸ்லிம் மக்கள் மைத்திரியின் பக்கமான எங்கள் அணிக்கே வாக்களிப்பர் என்று பொது வேட்பாளர் தரப்பினர் பிரச்சாரம் செய்து ஊடகப்படுத்தியுள்ளார்கள். இதன்படி மைத்திரியின் பக்கம் செல்வது அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளி என்பதே ஆகும். அத்துடன் இது மக்களோடு மக்களாக கட்சி செல்வதாக இருக்குமே தவிர கட்சியோடு மக்கள் செல்வதாகவும் இருக்காது. 

மேலும் மைத்திரியை ஆதரிக்கும் பொதுக் கூட்டங்களும் கிழக்கில் குறிப்பாக வாழைச்சேனை, ஏறாவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை என்று மக்களின் ஏற்பாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இதன் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் சென்று யாருக்கு கூட்டம் நடத்துவது என்ற கேள்வியும் இங்கு இருக்கிறது.

எனவே மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை எடுப்பதற்கான காலத்தை முஸ்லிம் காங்கிரஸ் கடந்துவிட்டது. மக்களின் மனநிலை மஹிந்தவுக்கு எதிராக இருப்பது அளுத்தக சம்பவத்தின் பின்னர் தீவிரமாக தெரிந்த உண்மை எனவே மக்களின் மனநிலையை வைத்து முடிவெடுப்பது சரி என்றிருந்தால் பொதுவேட்பாளரை அறிவித்தவுடன் எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இன்று முஸ்லிம் காங்கிரஸ் எமக்குத் தேவை இல்லை என்று அவர்கள் மக்களை நேரடியாக நம்பிய நிலையில் காலம் கடந்த இந்த முடிவு எந்தப் பயனைத் தரப்போகிறது?

அதுமட்டுமல்ல அளுத்கம சம்பவத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசைவிட்டு வெளியேறி இருந்தாலும் அந்த முடிவு தற்போது இவ்வளவு நெருக்கடிகளைத் தந்திருக்காது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் மனநிலைக்கு முடிவினை எடுக்கும் இரண்டு சந்தர்ப்பங்களையும் கைநளுவவிட்டது என்பதே இதன் உண்மையாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மஹிந்த தோற்றுப் போவதற்காக நடத்துகின்ற தேர்தல் இதுவல்ல என்ற அச்சம் அரசியலில் நிலையாகவே இருக்கிறது. இரண்டு தடவைகளுக்கு மேலாகவும் ஜனாதிபதி ஆட்சி அமைக்கலாம் என்ற 18ஆம் திருத்தத்தைச் செய்து அதன்படி இன்னும் 2 வருடங்களின் பின்  நடத்தவேண்டிய தேர்தலை 2 வருடங்களின் முன்பாக நடத்துவது தனது ஆட்சியை மிக இலகுவாக விட்டுக் கொடுக்கவா? என்ற கேள்வி எங்களை மஹிந்தவின் வெற்றியின் பக்கம் சாய்க்கிறதல்லவா?

இதன்பிரகாரம் முன்பு ஒரு கட்டுரையில் நான் குறப்பிட்டது போன்று மைத்திரியின் வெற்றியில் முஸ்லிம் காங்கிரஸ் இணையாவிட்டாலும் அதன் எதிர்காலம் எமக்குப் பாதிப்பாக அமையாது ஆனால் மஹிந்தவின் வெற்றியில் முஸ்லிம் காங்கிரஸ் இணையாதிருந்தால் அதன் எதிர்காலம் எமக்குப் பெரும் ஆபத்தாகவே அமையும் இதனால் மஹிந்த தோற்றாலும் வென்றாலும் அவருடன் நிற்பதே இன்றுள்ள அரசியல் நியாயமாக இருக்கிறது என்பதே இந்த ஜனாதிபதித் தேர்தலில் உள்ள அரசியல் சமன்பாடாகும்.

மக்களின் நியாயங்களுக்கு அப்பால் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்ற பக்க நியாயங்களும் அதற்கான அரசியல் கணிப்பீடுகளும் வலுவாகவே இருக்கிறது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலைவர் ரவூப்ஹக்கீம் செய்த தவறினை மூன்றாவது தடவையாகவும் செய்ய கூடாது என்பதற்கு ஆத்திரமான முடிவினைவிட ஆறுதலான முடிவு எடுப்பது இந்த நிதானத்தின் வெற்றியாகவே இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் மஹிந்தவின் ஆட்சியை வெறுப்பதற்கு நியாயங்கள் இருக்கிறது அதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறானவர்களில் நானும் ஒருவன்தான் ஆனாலும் அந்த வெறுப்பினால் அல்லது எதிர்ப்பினால் மஹிந்தவை நாம் தோற்கடித்துவிட முடியுமா? என்ற கேள்வி தயக்கமில்லாமல் தலைநீட்டுகிறதே? அதனால்தான் மஹிந்த மீதான விருப்பத்திற்கு அப்பால் கட்டாயத்தினால் அவரை ஆதரிக்க வேண்டும் என்கின்ற அரசியல் கணிப்பீடு எங்களை சற்று சிந்திக்க வைக்கிறது. 

இதனை முஸ்லிம் அரசியலுக்கும் மஹிந்தவுக்கும் நடக்கும் கட்டாயத் திருமணமாகவே பார்க்க வேண்டும். இந்த நாட்டின் தலைமையைத் தீர்மானிப்பதிலும் அதனை மாற்றுவதிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் உரிமை கூற முடியாது பெரும்பான்மை வாக்குகள்தான் அதனைத் தீர்மானிக்கும். ஆட்சிக்குப் பங்களிப்புச் செய்கின்றவர்களாகவே நாம் இருக்க முடியும் தவிர அதனைத் தீர்மானிக்கின்றவர்களாக நாம் இருக்க முடியாது. இதற்கு கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் மஹிந்தவுக்கு எதிராக நாம் வாக்களித்ததே சிறந்த உதாரணம்

இதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனநிலை மஹிந்தவின் ஆட்சியை மாற்றும் அளவிற்கு வந்திருக்கிறதா? அவ்வாறு வந்ததற்கான சாயல்கள் தென்படுவதாக கருதினாலும் அது மஹிந்தவை தோற்கடிக்கப் போதுமானதா? என்ற கேள்விகளும் இருக்கின்றன.

அத்துடன் வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் எப்போதுமே ஐக்கிய தேசிய கட்சி அரசியலில் விருப்புக் கொண்டவர்கள் இதற்கு மேல்மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என்பன மிக முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும். எனவே வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக நிற்பதில் சமூகப் பிரச்சினை மட்டுமில்லாது அடிப்படையில் அவர்களது அரசியல் நாட்டமும் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தது என்ற ஒருவிடயமும் இருக்கிறது.

இவற்றோடு மட்டுமல்லாது மஹிந்தவின் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் குறிப்பிடும் நியாங்கள் என்ன என்பதையும் இங்கு நாம் ஆராய வேண்டும். இதில் பௌத்த தீவிரவாதமும் அதனால் அளுத்கம வரை நடைபெற்ற முஸ்லிம் சமூக அழித்தொழிப்புகளும் முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணமாக இருக்கிறது. இதற்கு மஹிந்த அரசாங்கம் உடந்தையாக இருந்தது என்பது மக்கள் சுமத்தும் பெரும் குற்றச்சாட்டாகும். 

இதனை நாம் மறுக்க முடியாத அதேவேளை, முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிகளையும் அழிவுகளையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் அரசாங்கத்தை நாம் வெறுக்க வேண்டும் என்பதுதான் நியதி என்றால் இலங்கையில் ஆட்சி அமைக்கும் எந்த தேசிய கட்சியோடும் நாம் சேரவே முடியாது என்பதே உண்மை. 

மிக அண்மையில் நடந்த கொடுமைகள் என்பதால் நாங்கள் இறுதியாக நடந்த பிரச்சினைகளை வைத்து மஹிந்தவின் ஆட்சியை வெறுக்கின்றோம். இதே நாம் சற்றுப் பின்னோக்கிப் போனால் இதைவிடவும் ஆபத்தான முஸ்லிம் அழித்தொழிப்புகளைச் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை மட்டும் எங்களால் எப்படி ஆதரிக்க முடியும். 

இதற்குப் பல உதாரணங்கள் கடந்தகாலங்களில் இருந்தாலும் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன் 2002 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் பங்காளர்களாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தும் சமாதானம் என்ற பேச்சுவார்த்தை காலத்தில் மூதூர் தோப்பூர் மக்கள் வெளியேற்றப்பட்டதும் வாழைச்சேனை ஏறாவூர் பிரதேசங்களில் கடைகள் எரிக்கப்பட்டதும் யாருக்கு நடந்த கொடுமைகள். அப்போது மூதூரில் நின்றுகொண்டு தலைவர் ரவூப் ஹக்கீம் ரணில் உடனே இங்கு வரவேண்டும் என்ற ஒரு கோரிக்கைவிடுத்தும் அதைப் புறக்கணித்து ரணில் இருக்கவில்லையா?

எனவே ஆட்சியிலிருக்கும் அரசுகளின் அநியாயங்களையும் அடாவடித்தனங்களையும் வைத்து நாம் எந்தப் பக்கம் செல்வது என்று முடிவெடுப்பதானால் அதற்குப் பொருத்தமான ஆட்சியாளர்கள் இலங்கையின் பேரினவாத அரசியலில் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

அடுத்து மஹிந்தவை நிராகரிப்பதிலுள்ள காரணம் பொதுபல சேனா அரசுடன் இருப்பது என்பதாகும். பொதுபல சேனா அரசுக்கு வெளியிலிருந்து இத்தனையும் செய்துவிட்டு இப்போது மஹிந்தவுடன் இணைகிறது என்றால் நமது காரணம் நியாயமாகலாம். ஆனால் அது அரச ஆதரவுடன் உருவாகி இதுவரையான தனது அடாவடித்தனங்களைச் செய்வது வெளிப்படையாகத் தெரிந்ததும் அதன் உச்சம் அளுத்கமவில் அரங்கேறியது நாம் அறிந்ததுமான ஒன்றாகும். 

இப்போது பொதுபலசேனா இருக்கும் அரசுடன் இருக்க முடியாது என்பவர்கள் அப்போதே அளுத்கம சம்பவத்தை காரணமாகக் கூறி இவ்வாறான அடாவடித்தனங்களைச் செய்யும் பொதுபலசேனா அமைப்பினை அரசு ஆதரிப்பதாக தெரிவதனால் அந்த அரசில் நாங்கள் இருக்க முடியாது என்று வெளியேறி இருக்க வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முடிவுவரை காதத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பொதுபல சேனா அரசுடன் இருக்கிறது என்றால் அதைவிடவும் மோசமான இனவாத சிந்தனையுடைய ஹெல உறுமைய போன்ற பௌத்த தீவிரவாத கட்சிகளும் சம்பிக்க ரணவக்க போன்ற பேரினவாதிகளும் இன்று மைத்திரியுடன் இருக்கின்றனரே அதற்கு என்ன நியாயம் இருக்கிறது. 

நாங்கள் பொதுபல சேனாவையும் ஞானசாரத் தேரரையுமே பார்க்கின்றோம் இன்னும் சற்றுப் பின்னோக்கிப் போனால் கிழக்கில் முஸ்லிம் அழித்தொழிப்புகளையும் குறிப்பாக காத்தான்குடிப் பள்ளியில் தொழுத நிலையில் நின்ற எமது சமூகத்தையும் சுட்டுக்கொன்றதை வழிநடத்தியதாகக் கூறப்படும் கருணாவும் இன்று அரசுடன்தான் இருக்கின்றாரே. ஞானசாரத் தேரரின் கொடுமைகளைவிடவும் கொடிய கொடுமைகளை நாம் யுத்த காலத்தில் அனுபவித்தோமே.

இப்படி எமக்கு அநியாயம் செய்பவர்களின் அரசியல் பக்கம் நாம் செல்லக் கூடாது என்று நிகழ்காலத்தை மட்டும் வைத்துப் பேசுவது ஆரோக்கியமன ஒரு முடிவினை எடுக்க உதவாது. அத்துடன் அநியாயம் செய்த அரசு அநியாயம் செய்த அரசியல்வாதிகள் என்று மட்டும் குறுகிய நோக்குடன் நாங்கள் காரணம் தேடி கடந்தகால அழிவுகளுக்கான ஆத்திரத்தினைக் காட்டுவதிலும் பார்க்க எதிர்காலத்தில் வரும் அழிவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதனையும் முஸிலம் காங்கிரஸ் உணர வேண்டும். இதன்படி எந்த ஒரு அரசியல் முடிவும் கடந்தகால அனுபவங்களின் படி எதிர்கால பயன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுதல் சிறப்பாக அமையும். 

எனவே இங்கு முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்கால கொந்தளிப்புகளுக்கு மட்டுமான ஒரு முடிவினை எடுக்காது எதிர்கால சமூக அரசியலில் உள்ள நம்பகத்தன்மை தேசிய அரசியலில் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய சமூக அந்தஸ்த்து என்பன குறித்தும் தன் முடிவின் நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மாத்திரமில்லாது இன்று மைத்திரியின் பக்கம் நின்றாலும் மஹிந்தவின் பக்கம் நின்றாலும் அதில் சமூக அக்கறையான முடிவு எதுவுமில்லை என்பதுதன் நடுத்தரமான சிந்தனையுடையவர்களின் கருத்தாக இருக்கிறது எனலாம். எல்லாவற்றிலும் சுயநல அரசியல் சிந்தனை இருப்பதாகவே மக்கள் நம்புகின்றார்கள். எமது அசியல்வாதிகளும் அத்தகைய ஒரு வெளிப்பாட்டு அரசியலைத்தான் செய்து வருகின்றார்கள்.

இறுதியாக செவ்வாய்க்கிழமை (09.12.2014) நடந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுவர்கள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தெரிவித்த கருத்துக்களில் சமூக அக்கறை இருப்பதை விட சுயநலமே இருப்பதாக அதனை விமர்சிக்கின்ற சந்திக் கதைகளையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகின்றேன்.

இதில் மிக முக்கியமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மஹிந்தவை ஆதரிக்க கூறும் கருத்தானது, அவ்வாறு இல்லாது போனால் கிழக்கு மாகாண ஆட்சி முடிவுக்கு வந்து அது கலைக்கப்பட்டால் தங்களது மாகாண சபை உறுப்பினருக்கான பதவியானது இல்லாது போய்விடும் என்ற பதவி ஆசையில் இவ்வாறு கூறுகின்றார்கள் என்றும் அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியை ஆதரிப்பதற்கு கூறும் கருத்தானது, அடுத்து நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமானால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் மைத்திரியுடன் நிற்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்றம் செல்லும் வழியைத் தேடுகின்றார்கள் என்றும் மக்கள் இதனை சமூக அக்கறைகளுக்கு அப்பால் சுயநல அரசியல் கருத்துக்கள் என்றே விமர்சிக்கின்றார்கள்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவிடம் பேசுவதற்காகச் சென்ற போது அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாதது சமூகம் அவரை ஏற்கவில்லை என்பதற்காக அல்ல என்பதைவிடவும், திவிநெகும திட்டத்தின் கீழ் பல இலட்சம் நிதிகளை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களைக் கண்டவுடன் மஹிந்த அந்த வேலைகள் முடிந்துவிட்டதா? அந்த நிதியெல்லாம் எடுத்துவிட்டீர்களா எனக் கேட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்தான் காரணம் என்று இதனை மக்கள் இவ்வாறு பேசுகிறார்கள். இந்த நிதிக்கு உதாரணமாக ஹரீஸ் எம்பி 'திதுலன கல்முனை' என்ற திட்டத்தை கொண்டுவந்தது அதற்கு  மேலாக கல்முனைத் தொகுதி பிரதேச செலயகங்களில் உள்ள திவிநெகும  செயற்திட்டங்களை மக்களுக்கு தான் முன்நின்று கையளித்தது யாவற்றையும் குறிப்பிடலாம். இவ்வாறு வழங்கப்பட்ட திவிநெகும கொடுப்பனவுகள் ஒவ்வொன்றையும் ஹரீஸ் எம்பியின் ஆதரவாளர்கள் மிக அழகாக தங்கள் முகநூல்களில் விளம்பரப்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பது நல்ல சான்றாகும்.

அதுமாத்திரமல்லாமல் மிக அண்மையில் சீகிரியா சம்பவத்தில் கல்முனை பாடசாலை மாணவியை அதிலிருந்து முற்றாக விடுவிக்காமல் பிணை எடுத்ததைக் கூட மிகுந்த அரசியல் வீரம் என துண்டுபிரசுரம் மூலம் ஹரீஸ் எம்பிக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல்களில் இதனால் ஹரீஸின் வாக்குப் பலம் அதிகரித்திருப்பதாக எழுதப்பட்டதே இது யாருடன் பேசி நடந்தது மைத்திரியுடனா? ரணிலுடனா? இல்லையே இதில் இறுதியாக பஷில் ராஜபக்ஷ தலையிட்டதாகவே கதைகள் வந்தது. 

இப்படியான அரசியலைச் செய்யும் போது மட்டும் மஹிந்த அரசு மீதான மக்கள் அபிப்பிராயத்தை யாரும் கருத்தில் எடுத்து இவை எதுவும் தேவை இல்லை என்று மஹிந்த அரசிலிருந்து ஒதுங்கி இருக்கலாமே. இறுதியாக கிழக்கு மகாணசபையில் வழங்கப்பட்ட பாடசாலை ஊழியர்கள் நியமனம்வரை யாவற்றையும் புறக்கணித்திருக்கலாமே. (அதற்கும் பணம் வாங்கிய கதை மக்களிடத்தில் இருக்கிறது)

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது தற்போதுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு முடிவுகளைத்தான் எடுக்க முடியும் ஒன்று இப்படியே உயர்பீடத்தை எதிர்வரும் ஜனவரி 9 ஆம்; திகதிவரை கூட்டுவதும் கலைப்பதுமாக காலத்தைக் கடத்துவது. மற்றது மஹிந்தவுக்கு ஆதரளிப்பதாக அறிவித்துவிட்டு மக்களின் மனநிலையில் உள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு பிரச்சாரங்களைச் செய்வது. இதையும் மீறி மைத்திரியை ஆதரிப்பதாக எடுக்கின்ற முடிவு மஹிந்தவிடம் மூன்றாவது முறை பாடம் படிக்கும் தலைகுணிவை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்படுத்தும். இந்நிலை மைத்திரி வென்றால் மாற்றமடையலாம் அது அவரது தலையெழுத்துடன் உள்ள ஒன்று, ஆனால்  அரசியல் கணிப்பு அவரால் வெற்றி பெறமுடியாது என்றுதான் கூறுகிறது. 
Share it:

Post A Comment:

0 comments: