அரசியல் வானில் வீசுவது புயலா..? வசந்தமா..?? முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு என்ன...???

Share it:
ad
(மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ்)

வசந்தகாலம் வந்தால் பார்க்குமிடமெல்லாம் பசுமையைக் காணலாம். இலங்கையைப் பொருத்தவரை வசந்தகாலம் என்பது 'நுவரெலியா சீசன்' என்பதாகும். அதாவது நுவரெலியாவில் கொண்டாட்டங்கள் நிகழ்வது தான் அப்பருவத்தில் முக்கியமாக இருக்கும். எனவே இலங்கையின் வசந்தகாலம் என்பதும் நுவரெலியா சீசன் என்தும் ஒன்றுதான்.

ஆனால் வசந்தகாலத்திற்கு இன்னும் சுமார் நான்கு மாதம் இருக்கும் பொழுதே வசந்த காலம் பற்றிப் பேசப் படுகிறது. குறிப்பாக அரேபிய  வசந்தத்தை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிப்பதாக அரச அணியினர் மேடைகளில் பேசுவதையும் அது நடக்காது என்று கூறுவதையும் கேட்கிறோம்.

எமக்கு அரேபிய வசந்தம் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இலங்கை அரசியலில் ஒருவகைக் காற்று வீச  ஆரம்பித்துள்ளது. அது நுவரெலியா வசந்தமா? அல்லது கிழக்கின் வசந்தமா? அல்லது வேறு ஏதுமா? என யூகிக்க  முடியாதுள்ளது. அது உறுதியாகத் தெரியவும் இல்லை. பணபலம், அதிகார பலம், ஆயுத பலம், குள்ள நரித்தந்திரம், நிறைவேற்று அதிகார பலம், சுயநலம், யுத்த வெற்றி மமதை, வாழ்க்கைச் செலவு உயர்வு எனப் பல்வேறு காரணிகள் அதில் போட்டி இடுகின்றன.

சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர்களான முன்னாள் பிரதி அமைச்சர்களான வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் பீ. தீகாம்பரம் ஆகியோர் அரசை விட்டு எதிரணியிடம் கைகோர்த்த போது அவர்களது ஆதரவாளர்களான மாகாண சபை அங்கத்தவர்களும் அணி மாறியதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களது ஆசி பெற்ற பிரதேச சபை மற்றும் மாகாண சபை  அங்கத்தவர்கள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தமது ஆதரவை எதிரணி  பொது வேட்பாளருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இது அத்துடன் முற்றுப் பெறாது. ஊவா மாகாணத்திலும் சிலர் கட்சி மாறலாம் என எதிர்வு கூறப் படுகிறது. இதன் தாக்கம் ஊவா மாகாண சபையிலும் பிரதி பலிக்கலாம். அதே நேரம். மத்திய மாகாண சபையிலும் பிரதி பலிக்கலாம் எனத் தெரிவிக்கப் படு;கிறது. அதே நேரம் நுவரெலியா பிரதேச சபை ஆட்சி அதிகாரம் கைமாறியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

அப்படி மாற்றங்கள் ஏற்பட்டால் அது மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் புதுக் காற்றாக வீசலாம். அது அமைச்சர் தொண்டமான் அவர்களது இ.தொ.கா ஆதரவாளர்களையும் பாதிக்குமா? என்பதைப் பொருத்திருந்து பாhக்க வேண்டும். ஆனால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். கடந்த சிலமாதகாலமாக மலையக அரசியல் மேடைகள் எதிர்க்கடை இல்லாத சந்தையாக இருந்தது. இந்நிலைமை நீடித்திருந்தால் ஆளும் தரப்பிற்கு முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைக்க இலகுவாக இருந்திருக்கும். எனவே பிரதி அமைச்சர்கள் இருவரது கட்சித்ததாவல் பாரிய பாதகத்தை ஏற்படுத்தலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்ததாகும்.

அதே நேரம் சில வாரங்களுக்கு முன்பு கிழக்கின் உதயமாக தற்போதைய பாராளுமன்ற  அங்கத்தவர் அமீர் அலி தரப்பினர் மூவர் கிழக்கு மாகாண சபையில் சுயமாக இயங்குவதாக அறிவித்தனர். இது மற்றொறு புயலாக உருவெடுக்க முற்பட்டது. இது உனைஸ் பாரூக்கின் கட்சித்ததாவலுடனும் தொடர்பு படுத்தப்பட்டு பேசப்பட்டது. ஆனால் அரசு மிக விவேகமாக மேற்கொண்ட முற்பாது காப்பு நடிவடிக்கையாக முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.எச்.எம். அஸ்வரின் இராஜிநாமா நிலைமையை வைத்து தற்காலிக மாகக் கட்டுப் படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தையும் பொறுத்திருந்து பாhக்க வேண்டும். 

அதே நேரம் ஐ.தே.க. முன்னாள் பொதுச் செயலாளரின் முன் உதாரணம் விரக்தியில் உள்ள அரசியல் பிரபலங்களுக்கு  இனிப்பாக உள்ளது. பத்துக்கு மேற்பட்ட வருடங்களாக ஊடகங்கள் முன் தோன்றி தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு காரணம் கூறிக் கொண்டிருந்த ஒருவருக்கு இரவோடு இரவாக அமைச்சர் பதவி கிடைத்தது. அதற்கான பாரிய முயற்சிகள் எதுவும் அவர் மேற்கொள்ளவில்லை. ஒரு அறிக்கையுடனான கட்சித் தாவல் மட்டுமே. அவர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத ஒரு தேசிய பட்டியல் அங்கத்தவர் என்று பரவலாகப் பேசப்பட்டவர். இருப்பினும் இவரது நிலைமையையொத்த ஒரு சூழ்நிலையை இன்னும் பலர் எதிர் நோக்கலாம். அரச தரப்பிலிருந்து வெளியேறுவோருக்கு என்ன கிடைக்கும் என்பது கேள்விக்குறி. சிலவேளை ஆளும் தரப்பின் அச்சுறுத்தல் இருக்கலாம். ஆனால் அரசுடன் இணைவோருக்கு அமைச்சு பதவி உற்பட இன்னும் பல வசதி வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. எனவே எந்த நேரத்திலும் எவரும் எங்கும் கட்சி மாறலாம்.

அதேபோல் ஜாதிக ஹெலஉறுமயவின் உதய கம்மன்பிலயும் ஒரு முன் உதாரணத்தைக் காட்டியுள்ளார். எனவே சிலரது கருத்துப்படி பொது வேட்பாளரும் இறுதி நேரத்தில் ....? என்று கேட்போரும் உண்டு. அதே நேரம்; பொதுபலசேனா அமைப்பு அரசை ஆதரித்தால் நான் அங்கிருக்க மாட்டேன் என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் கூறியதாக வெளியாகும் செய்தியை வைத்து பேரின, மற்றும் இனவாத இணையங்கள் நீண்டநாள் தூக்கத்தின் பின் விழித்து  கருத்துக்களையும் விமரிசனங்களையும் (கொமெண்ட்) எழுத ஆரம்பித்து விட்டன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மௌன விரதம் காரணமாக பேரின வாத அமைப்புக்கள் இன்னும் விழிக்க வில்லை. எனவே அவர்களை தொடர்ந்து தூங்கவைக்க வேண்டுமாயின் முஸ்லிம் தலைமைகள் இன்னும் சற்றுகாலம் மௌனவிரதம் அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அதே நேரம் அரசியல் தலைமைகள் என்று கூறுவோர் என்ன முடிவெடுத்தாலும் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம் வாக்களர்கள் கூப்பாடு போட முடியாது நிலையும் உண்டு. அதற்காக நாம் கோளையாக வாழவேண்டுமா எனக் கேட்போரும் உண்டு. மறு புறம் கடந்த கால கசப்பான அனுபவங்களும் அதற்கு எதிர் நீச்சல் போட்ட நம்மவர்களது நடத்தைகளும் இன்னும் மறக்கவும் இல்லை. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த எம்மவர்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளளார்கள் என்பதையும் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

அத்துடன் மேலே பல இடங்களில் 'பொறுத்திருந்து பாhக்க வேண்டும்' என்று நாம் கூறிய போதும் பொருக்க வேண்டிய காலம் 25 நாட்கள் கூட இல்லை.

எனவே தற்போது இலங்கை அரசியல் வானில் வீசுவது புயலா? வசந்தமா? வாசகர்கள் உங்கள் கருத்து என்ன? நன்றி
Share it:

Post A Comment:

0 comments: