கட்சி அரசியலில், முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா..?

Share it:
ad
(நவாஸ் சௌபி)

இன்று முஸ்லிம் சமூகத்திற்கும் அதன் அரசியலுக்கும் இடையில் பெரும் இடைவெளி வந்துவிட்டது. தலைமைகளையும் கட்சிகளையும் புறக்கணித்து தங்கள் நிலைப்பாட்டிலிருந்து அரசியல் செய்ய முனைகின்றவர்களாக மக்கள் கட்சி அரசியலில் நம்பிக்கை இழந்து நிற்கின்றார்கள்.  அரசியல்வாதிகளின் தவறுகளுக்கும் மக்களின் புரியாமைகளுக்கும் இடையில் ஒரு பொதுவான அரசியல் பொறிமுறை செயற்பட்டு இந்த இடைவெளி நீக்கப்பட வேண்டும் ஏன் என்றால்  இலங்கையின் தேசிய அரசியலில் கட்சி அரசியல் மிகவும் பலமானது. கட்சி அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் முஸ்லிம் அரசியல் பலம் இழந்துவிடும்.

இதில் மிக முக்கியமாக கட்சி அரசியலின் செயற்பாடுகளும் அதன் முன்னொடுப்புகளும் மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்கும் படியாக இல்லாமல் தொடர்ந்தேர்ச்சியாக கட்சி அரசியலின் இருப்பினையும் பாதுகாப்பினையும் மக்கள் பறிகொடுக்கின்ற ஆபத்துக்கள் நிகழந்துவருவதும் மக்களின் இத்தகைய நம்பிக்கை ஈனத்திற்கு காரணமாக கருதலாம்.  

சமகால முஸ்லிம் அரசியல் சிந்தனைகளும் செயற்பாடுகளும் முற்று முழுதாக தேர்தல் மைய அரசியலாகவே மாறி இருக்கிறது. நமது அரசியல் நோக்குகள் ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கான உபாயங்களைத் தேடுவதாகமட்டும் மாறிவிட்டது. தேர்தல் என்பது அரசியலில் ஒரு அங்கம் ஆனால் தேர்தல்தான் முழுக்க அரசியல் அல்ல. அரசியலுக்குள்தான் தேர்தல் அடங்க வேண்டும் இங்கு தேர்தலுக்குள் அரசியல் அடங்கிவிட்டது. இதனால் இன்று பாமர மக்களும் அரசியல் என்றால் தேர்தல்தான் என்று கருதும் நிலைக்கு எமது அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியலைப் பேசியும் செய்தும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக நெல் அறுவடை காலங்களில் வயல் ஓரங்களில் திறக்கப்படுகின்ற வட்டைக் கடைகள் போன்று தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படுகின்ற ஒன்றாக முஸ்லிம் அரசியல் இன்று மாறி இருக்கிறது. தேர்தல்கால பிரச்சாரங்களில் மட்டும் மீசையை முறுக்குவதும் உரிமையைக் கேட்பதுமாக எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மக்களும் அதனை நம்பி வாக்களிப்பதும் பின் ஏமாறுவதுமாக ஒரு மாமூலான அரசியல் கலாசாரமே இன்று எமது சமூகத்தில் நிலவுகிறது. 

குறிப்பாக இன்று எமது அரசியல் போக்குகளை உற்றுநோக்கி அதனை வழிப்படுத்துவதற்கான பொதுவான ஒரு சபை அல்லது ஒரு பொது அமைப்பு நமது சமூகத் தளத்தில் இயங்கவில்லை என்பது பெரும் குறைபாடாகும். இன்று இவ்வாறான ஒரு அமைப்பு முறையை எமது அரசியல் கட்சிகள் சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மட்டும் புத்தி ஜீவிகள் உலமாக்கள் என்ற சமூகப் பிரதிநிதிகளை உள்வாங்கி கலந்தாலோசிப்பதாக அதற்கான செய்திகளையும் விளம்பரங்களையும் பெரிதாகவே செய்கின்றன. பின்னர் அவ்வாறான உலமாக்கள் புத்திஜீவிகளின் தலைமையின் கருத்துக்கு மாற்றமாக கூறிய எந்த ஆலோசனையை அல்லது வழிநடத்தலைக் கேட்டு கட்சி முடிவெடுத்து நடந்தது எனக் கேட்டால் சொல்ல என்ன இருக்குமோ தெரியாது.

இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம் அரசியலைக் கட்டமைப்பதில் மாற்று ஒழுங்குகளும் மாற்றுச் சிந்தனைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். முஸ்லிம் அரசியலை அல்லது அரசியல்வாதிகளை விமர்சிப்பதால் மட்டும் எந்த மாற்றத்தையும் நாம் ஏற்படுத்த முடியாது. மாறாக அத்தகைய விமர்சனங்களுக்கான மாற்று ஒழுங்குகள் மற்றும் தீர்வுகள் பற்றி ஆராய்ந்து செயற்படுவதற்கான ஒரு ஒழுங்கமைப்பு எமது சமூகத் தளத்தில் உருவாக்கப்படல் வேண்டும். அத்துடன் அது தொடர்ந்து இயங்கக் கூடிய ஒரு பொறிமுறையையும் கொண்டிருக்க வேண்டும்.

கட்சி முறைமை அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கின்ற இலங்கையின் தேசிய அரசியலில் எமது முஸ்லிம் சமூக அரசியலை அடையாளப்படுத்துகின்ற ஒரு கட்சியை எமது சமூகம் முன்னின்று அதனை வழிநடத்தி அதற்கான செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொடுப்பதில் நமது பொறுப்பு மிகவும் முக்கியமானது. (அதாஉல்லா, றிசாட்பதியுத்தீன் போன்றவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கு மட்டும் உருவான கட்சிகளை நாம் சமூகக் கட்சிகளாக கொள்வதில்லை)

அந்தவகையில் பல்கட்சிகளின் பங்களிப்புடன் அமையும் இலங்கைப் பாராளுமன்றில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அரசியலின் நன்மைகளையும் பயன்களையும் அச்சமூகத்திற்கு உறுதிப்படுத்திக்கொள்ள உருவான ஒரு தனித்துவமான சமூகக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் தேவையை உணர்ந்து உருவான அக்கட்சியின் சமூகப் பங்களிப்பு இன்று எவ்வாறு இருக்கிறது? என்ற கேள்வியை ஆழமாக நோக்கி விடை தேடவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.   

ஒரு சமூகக் கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி மக்களின் வாக்குகளால் தன்னை நிலைப்படுத்தி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல கடமைப்பட்ட ஒரு கட்சியாகும். அவ்வாறு பொறுப்புச் சொல்வது அவசியம் இல்லை என்றால் அது ஒரு சமூகக் கட்சியாக இருக்க முடியாது. 

எனவே முஸ்லிம் காங்கிரஸின் போக்குகளைத் தொடர்ச்சியாக அவதானித்து அதற்குத் தகுந்த வழிநடத்தல்களைச் செய்யும் ஒரு உள்ளக அரசியல் ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டு அதன்  நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்தியும் அதற்கான மக்கள் பலத்தினை பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் அதனைப் பெற்றுக் கொடுத்தும் அது செயற்பட வேண்டும். அதற்குப் பொறுப்புக் கூறும் ஒரு கடப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தன்னகத்தை கொண்டிருக்க வேண்டும் இவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படாமல் இனியும் முஸ்லிம் காங்கிரஸ் தன்னை ஒரு சமூகக் கட்சியாக கூறிக்கொள்வதில் பெரும் பின்னடைவுகளை அது எதிர்கொள்ளும் என்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் நிலைப்பாடு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக வருகின்ற ஜனாதிபதிகளே இந்நாட்டின் பௌத்த பீடங்களுக்கு பொறுப்புக் கூறும் கடப்பாடு இருப்பதுபோல் முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புக் கூறும் அமைப்பு ஒன்றினைப் பற்றி மக்கள் சிந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. அவ்வாறு இருந்தால்தான் மக்களின் கட்சியாக அதனை எங்களால் வழிநடத்த முடியும். வாக்களிக்கும் எங்களுக்கே அதனை வழிநடத்தும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

இவ்வாறான அரசியல் பொது அமைப்பு ஒன்றின் அவசியம் பற்றி அவசரமாக நாம் சிந்திக்க வேண்டும் அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் இழப்புகளுக்கு குரல் கொடுக்க சூறா சபை ஒன்று உருவானது இறுதியில் அதன் தலைவர் எம்.எம்.சுஹையீர் பொதுவேட்பாளர் அணியுடன் சேர்ந்து பகிரங்க அரசியலுக்குள் சென்றுவிட்டார். இதுவும் எமது சமூக முன்னெடுப்புகளில் உள்ள பின்னடைவுகளே. இவ்வாறான ஒரு அமைப்பை நாமும் எமது முஸ்லிம் அரசியலை கட்டுப்படுத்த உருவாக்கிவிட்டு பின்பு அதனை விமர்சிக்கின்றவர்களாகவும் இல்லாமல் மிகத் தூய்மையாக இதனை  எந்த அரசியலுக்கும் அப்பால் நின்று சமூகத் தளத்தில் உருவாக்க வேண்டும்.

இதற்கான அவசியத்தை சமகாலமுஸ்லிம் காங்கிரஸின் நகர்வுகள் நமக்கு உணர்த்தியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று கொண்டிருக்க வேண்டிய அரசியல் அடையாளமும் அதன் இலக்கும்எது என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு அந்தக் கட்சிக்கு தற்போது இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. 

பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்எம். அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமையை நிலைநாட்டவும் முஸ்லிம் சமூக பாதுகாப்பு மற்றும் அதன் இருப்பை தனித்துவமான ஒன்றாக முன்வைத்து அதற்கான அரசியல் தீர்வுகளைப் பெற்றுக்கௌ;ளவும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூகக் கட்சியை உருவாக்கினார். அன்றைய காலகட்டத்தில் அத்தகைய உணர்ச்சிகளால் மக்களும் கொந்தளித்து இருந்ததனால் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் உரிமைக்கான கட்சியாக மக்கள் அங்கீகாரத்தோடு 1989ஆம் ஆண்டின் பாராளுமன்ற பிரவேசத்தைப் பெற்று அது தேசிய அரசியலில் பங்கேற்றது.

இவ்வாறு தேசிய அரசியலில் பங்கேற்ற பின்னரான முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றையும் அதன் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து நோக்கும்போது அதனை பிரதானமாக இரண்டு தலைப்புகளின் கீழ் ஆராயலாம். ஒன்று  அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களது காலம் மற்றது தற்போதுள்ள தலைவர் ரவூப் ஹக்கீமின் காலம்.

இதில் அஷ்ரஃப் அவர்களுடைய காலத்தையும் இரண்டாக உபதலைப்பிட வேண்டும் அதில் ஒன்று  1989-1994 வரையான காலம் இரண்டாவது 1994-2000 வரையான காலம் என்பதாக அவை அமையும்.

இதில் 1989 – 1994 வரையான காலத்தில் பெரும்தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் சமூக உரிமைக்கான கட்சியாகவே பாராளுமன்றத்தில் குரல் பதித்து அதற்கான தேசிய அரசியல் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார். 

அப்போது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளர்களுக்கும் பகிரங்க ஆதரவு வழங்காமல் நடுநிலை என்று அறிவித்துக் கொண்டு சமூக அரசில் வெளிப்பாட்டை முதன்மைப்படுத்தி கட்சியை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தச் செய்தார். அப்படி இருந்தும் அப்போது வெற்றி பெற்ற ஆர்.பிரமதாசாவிடம் கோரிக்கை விடுத்து பாராளுமன்ற தெரிவுக்கான ஒரு கட்சியின் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளியான 12 வீதத்தை 5 வீதமாக குறைத்து அதன்மூலம் சிறுபான்மை மற்றும்  சிறுகட்சிகளுக்கான பாராளுமன்ற தகுதியை மிக அரிதாக்கிய சாதனையைச் செய்திருந்தார்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் அடையாளத்தை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கான ஒரு குரலாக அடையாளப்படுத்தி கட்சி அரசியலின் சமூகப் பங்களிப்பை முதலாவது பாராளுமன்றக் காலத்தில் அஷ்ரஃப் நன்கு வெளிப்படுத்திக் காட்டினார்.

அக்காலத்தை அடுத்து 1994 இல் உருவான சந்திரிகா அரசில் பங்காளியாக இணைந்து உரிமைத்துவ அசியலைப் பேசிய முஸ்லிம் காங்கிரஸின் முகத்திற்கு அபிவிருத்தி அரசியலுக்கான தோற்றப்பாட்டையும் செயலையும் பெரும்தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் கொடுத்தார்.முஸ்லிம்களின் குரலாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் செயலாக மாறியதாக இதனைக் குறிப்பிடலாம்

இதன்படி 1994 – 2000 ஆண்டுவரையான முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் காலத்தை அபிவிருத்திக்கான யுகமாகக் காணலாம். உரிமைக்கான முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்தியதில் பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் எதைச் சாதிக்க நினைத்தார் என்பது அவரளவில் நாம் குறைகாண முடியாத ஒன்று. 

மிகுந்த தூரநோக்கும் அதன் மூலம் தேசிய அரசியலில் எந்த உச்சத்தை தொடமுடியும் என்ற வியூகமும் அவரிடம் இல்லாமல் இருந்திருக்காது. சந்திரிக்காவுடன் இணைந்து இலங்கைத் திருநாட்டின் அரசியல் யாப்பில் திருத்தங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளைச் செய்யும் அளவிற்கு அவரது அபிவிருத்தி அரசியல் உள்ளார்ந்த உரிமைக் குரலை மெதுவாக வைத்துக்கொண்டும் இருந்தது.

பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் அபிவிருத்தி அரசியலால் சமூகம் பெற்ற வரலாற்று உரிமையாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருப் பெற்றிருப்பதை மிக வெளிப்படையாகக் கூறலாம்.இவ்வாறு முஸ்லிம் சமூக உரிமைக்காக உருவாக்கிய கட்சியை அபிவிருத்தி அரசியலின் பால் நகர்த்தினாலும் அதன் மூலமும் இலங்கை முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழும் சாதனைகளைத்தான் அவர் செய்தார் மாறாக முஸ்லிம் சமூக கேடுகள் எதையும் அவர் கொண்டுவரவில்லை.

இதன்படி முஸ்லிம் சமூகத்திற்கான உரிமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் செயற்படும் ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸின் சமூகப் பங்களிப்பை பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தன் தலைமைத்துவ வித்துவத்தால் இரண்டு காலகட்டங்களிலும் மிகச் சிறப்பாகச் செய்துகாட்டியிருந்தார். 

ஆனால் அவரின் பின்னரான முஸ்லிம் காங்கிரஸின் சமூகப் பங்களிப்பு உரிமையும் இல்லாமல் அபிவிருத்தியும் இல்லாமல் சமூகத்தை இரண்டும் கெட்ட நிலைக்குத் தள்ளியதாக செயற்பாட்டுக் கொண்டு வருகிறது. இதுவே இன்றையத் தலைவர் ரவூப் ஹக்கீம் உணர வேண்டிய மிக முக்கியமான தலைமைத்துவப் பொறுப்பாகும்.

சமூகத்திற்கான உரிமையும் இல்லாமல் அபிவிருத்தியும் இல்லாமல் தன் பிழைப்புவாத அரசியலை தலைமையும் கட்சியும் செய்துவருவதாகவே இன்று முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது.

இதைவிடுத்து தற்போதுள்ள தேசிய அரசியல் நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் முதலில் ஒரு அடையாளத்திற்குள் வரவேண்டும். அது உரிமைத்துவ அரசியலைத்தான் செய்ய வேண்டும் என்றால் அதனை அரசோடு சார்ந்து செய்ய முடியாது. மாறாக இன்றுள்ள நிலையில் அபிவிருத்தி அரசியலைத்தான் செய்ய முடியும் என்றால் அதனை அரசோடு சார்ந்துதான் சாதிக்க முடியும். என்ற இரண்டில் ஒன்றான ஒரு பக்க நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

நெற்றியில் உரிமைத்துவ அரசியலை ஒட்டிக்கொண்டு பின் கதவால் அபிவிருத்திக்கு தட்டை ஏந்துவது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர அரசியலுக்கு வழி வகுக்காது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதைபோல அரசியல் செய்ய முடியாது. தேர்தல் காலங்களில் ஆட்சிக்கு எதிராகச் செல்வதால் உரிமை பற்றிப்பேசினாலும் தீர்வு கிடைப்பதில்லை. தேர்தலில் எதிரணி தோற்ற பின் ஆட்சியில் வந்து ஒட்டிக்கொள்வதால் பெரிதான அபிவிருத்தியும் கிடைப்பதில்லை. இப்படியான ஒரு தோல்வி நிலையில்தான் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவக் காலம் நகர்கிறது.

சந்திரிக்காவின் ஆட்சியின் பின்னரான மஹிந்தவின் காலத்தை எடுத்துக்கொண்டால் 2005 தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கியதில் நியாயமிருந்து எதிர்பாராதவிதமாக அதில் மஹிந்த வெற்றி பெற்றார் என எடுத்துக் கொண்டாலும் 2010 இல் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்காமல் பொன்சேகாவுடன் சென்ற முடிவுதான் மஹிந்தவின் ஆட்சியில் ரவூப் ஹக்கீம் விட்ட முதலாவது தவறு.

இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் தேர்தல் வரலாற்றில் ஆட்சியிலிருந்து இரண்டாவது தடைவ போட்டியிட்டவர்கள் யாரும் தோல்வி அடையாத அரசியல் அனுபவம் கண்முன் இருந்தும் இதற்கு மேலாக நாட்டின் யுத்த வெற்றியை ஏற்படுத்திய மன்னன் என்று மஹிந்தவை நாடே பாராட்டி அதற்கு நன்றி செலுத்த நடந்த தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக நின்ற ஹக்கிமீன் அரசியல் அறியாமை இன்று அவரை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.

அடுத்து,முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றதோடு தொடாந்தும் எதிர்கட்சி அரசியலைச் செய்யாது மஹிந்தவின் ஆட்சியில் இணைந்துகொண்டது ஹக்கீம் விட்ட இரண்டாவது தவறு. இதற்கு கட்சியையும் கட்சியிலிருப்பவர்களையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுத்ததாகக் கூறப்படும் காரணம் எந்தவகையிலும் நியாயமில்லாத ஒன்றாகும்.
மேலும் மஹிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலம் மிகவும் கடுமையான ஒன்றாகத் தோன்றும் பல சம்பவங்கள் நடந்தும் இந்த ஆட்சியை தொடரவிடக் கூடாது என்ற அபிப்பிராயங்கள் மக்கள் மனங்களில் இருந்தும் அவை எதையுமே பொருட்படுத்தாது அரசுக்கு ஆதரவளித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை மஹிந்த அரசுக்கு வழங்கி 18வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து மஹிந்தவின் ஆட்சிக்கு ஆயுளை அதிகரித்துக் கொடுத்த கைங்கரியத்தை செய்தமை ஹக்கீம் செய்த மூன்றாவதும் வரலாற்றுத் துரோகமிக்கதுமான தவறாகும்.

இதன் தொடர்ச்சியாக அளுத்கம சம்பவம் நடந்தபின் மக்கள் கொந்தளித்து அரசை விட்டு வெளியேறும்படி வேண்டியும் அதனைச் செய்யாhமல் அரசின் வெற்றிக்காக ஒருமுறையாவது தனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று மஹிந்தவின் ஆட்சியில் இன்றுவரை இருந்தது ஹக்கீம் செய்த நான்காவது தவறாகும். மக்களின் கொந்தளிப்புக்கு முடிவெடுப்பதாக இருந்திருந்தால் அதுவே சிறந்த தருணம் அன்றே அரசிலிருந்து வெளியாகி இருந்தால் இன்று முடிவெடுப்பதில் கொழும்பு கண்டி என்று ஊர் ஊராக கூட்டம் கூடி முடிவில்லாமல் கதையும் காரணமும் கேட்டுக்கொண்டிக்கும் தேவை வந்திருக்காது. 

இப்படி தவறுகளோடு ஒரு தலைமைத்துவம் தொடர்ந்தும் சமூக அரசியல் செய்வதில் பின்னடைவுகளைத்தான் சந்திக்க நேரிடும். தலைமைத்துவத்தின் இத்தகைய முடிவுகளுக்குப் பின்னால் சமூகம் சரி கண்ட முடிவுகள் பலவும் இருந்தாலும் அவற்றுள் அதிகமானவை கடந்தகாலங்களில் அரசியல் ரீதியான தோல்விகளையே கொடுத்துள்ளன. இந்நிலையில் சமூகத்திற்கும் கட்சிக்கும் இடையில் ஒரு கட்டுப்படுத்தல் அமைப்பு அல்லது சபை வேண்டும் அது சமூகத்தின் பல் தரப்பினர்களையும் உள்ளடக்க வேண்டும் வெறுமெனே உலமாக்களை மட்டும் அது உள்ளடக்குவது உகந்தது அல்ல. 
Share it:

Post A Comment:

0 comments: