-அஷ்ரப்-
எத்தனையோ சம்பவங்களும் காலமும் கடந்து விட்டன. எல்லா உரிமைக்கான வேட்டைகளும் தோல்வியில் முடிந்து அழுகையும் துவாவும்தான் இறுதி முயற்சி என்றும் கூறப்பட்டது. பெற்றவை எனும் பட்டியலில் பூச்சியமும் இழந்தவை எனும் பட்டியலில் நூற்றுக்கணக்கான உரிமைகளும் காணப்படுகின்றது. ஆனாலும் நாங்கள் பட்டாசு கொளுத்தியும் பதவி கொண்டோரை தோலில் சுமந்தும் கொண்டாடி முடியவில்லை. எதற்காக இந்த சந்தோசம்??? எதைத்தான் சாதித்துவிட்டதனால் இந்த மகிழ்ச்சி என்று பார்த்தால் அங்கு நிச்சயமாக ஒன்றும் இல்லை...
தம்புள்ளைப் பள்ளியில் தொடங்கிய உரிமைக்கான இழப்புக்கள் கடைசியில் உயிர் இழப்புவரை பேருவளை வரைக்கும் கொண்டு வந்து விடப்பட்டது. ஹலாலில் வைத்த கையை முழுமையாக அவர்கள் இன்னும் எடுக்கவில்லை. பர்தாக்களும் பாடசாலை சீருடைவரைக்கும் கொண்டுவரப்பட்டது. பள்ளிக்கூடத்தில் இருந்து எம் சகோதரிகள் அவமதிக்கப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் அழுகையோடு. வயல் காணிகளில் புடுங்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெறுவோமா என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை, வர்த்தகத்திலும் இப்போது கண்வைத்து விட்டார்கள் நாங்கள் முஸ்லீம் என்று பெயர்கொண்டதனால் மட்டும். இப்படி கண்ணீர்விட்டு அடுக்கிக் கொண்டு போக எத்தனையோ இருந்தும் நாங்கள் எங்கள் தலைவர்களை இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். இழந்து விட்டோம்.... இழந்து கொண்டிருக்கிறோம்.... ஆனால்....
பெற்றோம் நாங்கள், எதனைப் பெற்றோம்??? நாட்டில் நீதியமைச்சரை எங்களில் ஒருவராக பெற்றோம். மத உரிமை, மனித உரிமை, இலங்கைச்சட்டம், இஸ்லாமிய சட்டம் எல்லாம் தெரிந்த ஒரு நீதியமைச்சரை பெற்றோம். ஆனால் எங்களுக்கு நீதி கிடைத்ததா??? எங்கள் பள்ளிவாசல்கள் பாதுக்காக்கப்பட்டதா? எங்கள் பெண்களின் பர்தாவுக்கு கண்ணியம் கிடைத்ததா? எங்கள் உணவில் ஹலால் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வெற்றியடைந்ததா???
வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் இலங்கை முஸ்லிம்கள் நாங்கள் வாணிப, வர்த்தக அமைச்சினைப் பெற்றோம். இருந்தும் எங்கள் வியாபாரங்கள் பாதுகாக்கப்பட்டதா? எங்கள் இலாபங்கள் எங்களை வந்து சேர்ந்ததா? எங்கள் வர்த்தக முன்னேற்றங்கள் அநீதியின்றி செயற்படுத்தப்பட்டதா? சுங்கத்திலே புடுங்காமல் அனுப்பியதுண்டா???
மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சும் எங்களுக்கே இருந்தது. இழந்த எல்லைகளை மீழ பெற்றோமா? எங்கள் வயல் காணிகள் நிலங்கள் எங்களுக்கு வந்து கிடைத்தனவா? பள்ளிவாசல் இருந்த எங்கள் பூர்வீக காணிகளை அல்லவா சுருட்டி கொண்டு போய்விட்டார்கள். இல்லை.. இல்லை..
ஆனால் இன்று நாங்கள் கொண்டாடுகிறோம், பட்டாசு கொளுத்துகிறோம், தலையில் தலைவரை சுமந்து போற்றுகிறோம். எதற்காக என்றுதான் எனக்கு புரியவில்லை. எங்கள் கௌரவமிக்க தலைவர்கள் என்ன செய்ததற்காக இந்த புகழ் பாடுகிறார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அதில் ஒரு தலைவரை அடுத்த அஷ்ரப் என்றும் சொன்னார்கள். எனக்கு இன்னும் தெளிவில்லை.
இவர்கள் தேர்தலை முன்னிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்ற ஒன்று மட்டுமே காரணம் கூறப்படுகிறது. இதற்காக நாங்கள் ஏன் கொண்டாட வேண்டும்? இவர்கள் வெளியேறியது எதற்காக?? சமூகத்தின் நலனுக்காகவா?? எதை வைத்து அப்படி சொல்ல முடியும்?
அழுது, தொழுது, கத்தி கதறி எங்கள் அளுத்கம தாய்மார்களும் சகோதரிகளும் ஏங்கும்போது உங்களால் இந்த அரசை விட்டு வெளியேற முடியாமல் போனதுவோ, தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கிய அடக்குமுறை கிறேன்ட்பாஸ் பள்ளிவரைக்கும் தொடர்ந்த வேளை எங்கள் பள்ளிகளை மீட்டுத்தர உங்களால் குரல் கொடுக்க முடியாமல் போனதுவோ, எங்கள் சகோதரிகளின் பர்தாவை கலட்டுமாறு சொல்லி பாடசாலைகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உத்தரவிடப்பட்டபோது உங்கள் நாவுகளுக்கு பூட்டு போடபட்டிருந்ததா?? எங்கள் காணிகளில், எங்கள் ஊர்களுக்குள் விகாரைகள் முளைத்தபோது நீங்கள் எங்கள் முஸ்லிம் தலைமகளாக இருக்கவில்லையா?? எங்கள் வியாபர நிலையங்கள் தீயில் கருகும்போது உங்கள் கண்கள் அதனை காணவில்லையா?? எங்கள் புனிதமான மாதத்தில் நோன்பு கடமைகளை செய்யவிடாது கிரீஸ் பூதம் என்ற காடையர்கள் எங்கள் வீடுகளுள் புகுந்து எங்கள் உடல்களை கீறி சென்றது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா??
அப்பொழுதும் நீங்கள் தானே எங்கள் தலைமைகள். அப்பொழுதும் நீங்கள் தானே எங்களது பொறுப்பாளர்கள். அப்போது மட்டும் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளும், பதவியும், சொகுசு வாழ்க்கையும் உங்கள் கண்களை மறைத்துவிட்டன. எங்களை தவிக்க விட்டீர்கள். இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது உங்களுக்கு அக்கறை? நீங்கள் இப்போது அரசை விட்டு வெளியே வந்தது உங்கள் வியாபாரம் என்பது திண்ணம். முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக என்று மட்டும் சொல்லாதீர்கள். அப்படி முஸ்லிம் நலனுக்காகத்தான் நீங்கள் அரசைவிட்டு வெளியே வந்தீர்கள் என்று சொன்னால் அது உண்மையல்ல. . அப்படி என்றால் நீங்கள் வெளியேற வேண்டிய தருணம் இதுவல்ல. அது கடந்துவிட்டது.



Post A Comment:
0 comments: